3.5

விமர்சனம்

Advertisement

நடிப்பு - ராம், மிஷ்கின், பூர்ணா மற்றும் பலர்
இயக்கம் - ஜி.ஆர். ஆதித்யா
இசை - அரோல் கொரேலி
தயாரிப்பு - லோன் ஒல்ப் புரொடக்ஷன்ஸ்
வெளியான தேதி - 9 பிப்ரவரி 2018
நேரம் - 1 மணி நேரம் 54 நிமிடம்
ரேட்டிங் - 3.5/5

முதல் படத்தை இயக்கும் இயக்குனர்கள் எப்போதுமே அவர்களது படங்களில் ரசிகர்களை சென்றடையக் கூடிய கமர்ஷியல் விஷயங்கள் அனைத்தும் இருக்க வேண்டும் என நினைப்பார்கள்.

பிரபலமான நடிகர், நடிகை, இசையமைப்பாளர் இவற்றோடுதான் அறிமுகப் படத்தையே இயக்க வேண்டும் என வைராக்கியத்தில் இருப்பார்கள். அதில் ஒன்று குறைந்தாலும் கூட படம் இயக்குவதைப் பற்றி யோசிப்பார்கள்.

ஆனால், அப்படியெல்லாம் எந்த ஒரு விஷயத்தையும் பார்க்காமல் தன் கதை மீதும், தன் இயக்கத்தின் மீதும் நம்பிக்கை வைத்து இந்த சவரக்கத்தியைக் கொடுத்திருக்கிறார் அறிமுக இயக்குனர் ஜி.ஆர்.ஆதித்யா.

இருக்கும் எத்தனையோ நடிகர்களிலிருந்து தன் படத்திற்கான நாயகன், வில்லனைத் தேர்ந்தெடுக்காமல் தன்னுடைய கதாபாத்திரங்களான பிச்சை மூர்த்தி, மங்கா, ஆகிய கதாபாத்திரங்களில் நடிக்க இயக்குனர்களான மிஷ்கின், ராம் ஆகியோரைத் தேர்வு செய்ததிலேயே அவரது நம்பிக்கை தெரிகிறது. அது போலவே, முன்னணி நடிகைகள் நடிக்க மறுத்தும் நாயகியான சுபத்ரா கதாபாத்திரத்திற்கு மிகப் பொருத்தமாக நடிகை பூர்ணாவைத் தேர்வு செய்திருக்கிறார். அந்தப் பொருத்தமான நட்சத்திரத் தேர்வே படத்தில் அவருடைய வேலையை இன்னும் சுலபமாக்கியிருக்கிறது.

பார்பர் ஆக இருக்கும் ராம், ஒரு நாள் மனைவி, குழந்தைகளுடன் சிக்னலில் காத்திருக்கும் போது, பக்கத்தில் வந்து நிற்கும் ஜீப்பில் இருக்கும் ரவுடியான மிஷ்கினை அடித்து விட்டுப் போய்விடுகிறார். தன்னை அடித்த ராமை தேடிக் கண்டுபிடித்து கொலை செய்ய வேண்டும் என்ற வெறியில் தன் அடியாட்களுடன் வலை வீசித் தேடுகிறார் மிஷ்கின். அவர்களிடம் சிக்காமல் தப்பித்துக் கொண்டேயிருக்கிறார் ராம். ஒரு சந்தர்ப்பத்தில் ராமின் நிறைமாத கர்ப்பிணியான பூர்ணாவைப் பிடித்து விடுகிறார் மிஷ்கின். அதன் பின் என்ன நடக்கிறது என்பதுதான் சவரக்கத்தி.

வாயைத் திறந்தாலே பொய்யைத் தவிர வேறு எதுவும் பேசாத பிச்சைமூர்த்தியாக ராம். அந்தப் பெரிய கண்ணாடி, முகம் நிறைய தாடி, அழுக்கு பேன்ட், சட்டை என பிச்சைமூர்த்தி கதாபாத்திரத்தில் இயல்பாக பிக்ஸ் ஆகியிருக்கிறார் ராம். கழுவுற மீனில் நழுவுற மீனாக மிஷ்கினிடம் சிக்காமல் மிஸ் ஆகி, மிஸ் ஆகி, எஸ்கேப் ஆகிக் கொண்டேயிருக்கிறார். வேறு எந்த அழகான ஹீரோ நடித்திருந்தாலும் கூட ராம் மாதிரி இத்தனை அழகாக நடித்திருக்க முடியாது.

பரோலில் வெளிவந்திருக்கும் ரவுடி மங்காவாக மிஷ்கின். எதற்கெடுத்தாலும் கோபப்படும் கதாபாத்திரம். அவருடைய கோபத்தை அந்த உருண்டையான, பிரைட்டான கண்களே காட்டிவிடுகின்றன. அதையும் மீறி நடிப்பைக் கொட்டியிருக்கிறார் மிஷ்கின். சொந்தப் படம் என்பதால் நிறையவே நடிக்கலாம் என முடிவு செய்துவிட்டார் போலிருக்கிறது.

நிறைமாத கர்ப்பிணியாக, இரண்டு குழந்தைகளுடன் ஓடிக் கொண்டேயிருக்கிறார் பூர்ணா. அவருக்கு மூச்சு வாங்குகிறதோ இல்லையோ, அவர் ஓடுவதைப் பார்க்கும் போது நமக்கே மூச்சு வாங்குகிறது. ஒரு நிறைமாத கர்ப்பிணி இப்படி எகிறி, குதித்து ஓட முடியுமா என வியக்க வைக்கிறார். கிராமத்து அம்மாவை அப்படியே கண் முன் காட்டுகிறார். பூர்ணா மாதிரியான சிறந்த நடிகைகளை தமிழ் சினிமா இன்னும் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்ல என்பதுதான் உண்மை. அந்தக் குறையை இந்தப் படத்தில் தீர்த்திருக்கிறார் இயக்குனர் ஆதித்யா.

மிஷ்கினின் அடியாட்களாக நடித்திருக்கும் சிலர், ராம் கடையில் வேலை பார்க்கும் உதவியாளர் என படத்தில் மற்ற நட்சத்திரங்களும் கூட அவரவர் கதாபாத்திரங்களைப் பேச வைத்துவிடுகிறார்கள்.

மிஷ்கின் - ராம் இடையேயான சண்டை மட்டும்தான் படத்தின் கதை இல்லை. அதில் பூர்ணாவின் சென்டிமென்ட் ஒரு பக்கம் இருக்கிறது. இன்னொரு பக்கம் நம்மை நெகிழ வைக்கும் ஒரு காதல் ஜோடியின் கதையும் இருக்கிறது. அந்த காதல் ஜோடிகளும் சரி, காதலியின் பெற்றோர்களும் சரி, யதார்த்தமான நடிப்பில் மனதை அள்ளுகிறார்கள்.

அரோல் கொரேலியின் இசையில் படத்தில் ஒலிக்கும் ஒரே ஒரு பாடலும், படம் முடிந்து வரும் பாடலும் அர்த்தமுள்ளவை. பின்னணி இசையிலும் தனி கவனம் செலுத்தியிருக்கிறார். படத்தில் நடிகர்கள் ஓடுவதைப் படமாக்குவதில் ஒளிப்பதிவாளர் கார்த்திக் நிறையே ஓடி, ஓடி உழைத்திருக்க வேண்டும்.

கத்தி எதற்கு பயன்பட வேண்டும் என்பதை இதை விட சிறப்பாகச் சொல்லிவிட முடியாது. அது உயிரை எடுப்பதற்கு அல்ல, ஒரு உயிரைக் கொடுப்பதற்கு என எளிமையாக, ஆனால் அழுத்தமாக, உணர வைக்கிறார்கள்.

மிஷ்கின், ராம், பூர்ணா ஆகியோரது நடிப்பில் ஓவர் ஆக்டிங் கொஞ்சம் ஓவராகவே உள்ளது. அதைக் குறைத்திருந்தால் இன்னும் யதார்த்தம் கிடைத்திருக்கும். பெரிய திருப்பங்கள் இல்லாத திரைக்கதை, ஆனாலும் தொய்வில்லாமல் வேகமாக நகர்கிறது.. டாம் அன்ட் ஜெர்ரி கார்ட்டூன் போன்று ஒருவரை மற்றொருவர் துரத்தித், துரத்தி ஓடும் கதைதான். சில விஷயங்கள் குறையாகத் தெரிந்தாலும் தமிழ் சினிமாவில் உண்மையிலேயே மாறுபட்ட படங்கள் வராதா என்று ஏங்கும் சினிமா ரசிகர்களுக்கு சவரக்கத்தி ஒரு சாகசம்தான்.

சவரக்கத்தி - கூர்மை

 

பட குழுவினர்

சவரக்கத்தி

  • நடிகர்
  • நடிகை
  • இயக்குனர்

மேலும் விமர்சனம் ↓