லக்கி பாஸ்கர் இயக்குனருடன் சூர்யா கூட்டணி | அல்லு அர்ஜுன் விவகாரம் : களமிறங்கிய தில் ராஜு | பிளாஷ்பேக் : அப்பா சிவகுமார் அடிவாங்குவதை பார்த்து கதறி துடித்த கார்த்தி | ஜனவரி 27 முதல் சுற்றுப்பயணத்தை துவங்கும் விஜய்! - நடிகர் தாடி பாலாஜி வெளியிட்ட தகவல் | பிளாஷ்பேக் : என்.எஸ்.கிருஷ்ணன் நடித்த 'ஸ்பூப்' கதை | பாலிவுட் பாடகர் முகமது ரபியின் வாழ்க்கை சினிமா ஆகிறது | அப்பாவாக போகும் ரெடின் கிங்ஸ்லி! | தமிழ் தயாரிப்பாளர்கள் கன்னட சினிமாவுக்கு வர வேண்டும் : கிச்சா சுதீப் அழைப்பு | தெறி படத்தை விட வசூலில் பின்தங்கிய பேபி ஜான்! | வாரணாசியில் சாய் பல்லவி சாமி தரிசனம் |
பாரதிராஜா இயக்கத்தில், இளையராஜா இசையமைப்பில் 1990ம் ஆண்டு வெளிவந்த படம் என் உயிர்த் தோழன். அந்தப் படத்தில் கதாநாயகனாக அறிமுகமானவர் பாபு. அப்படத்திற்கு வசனம் எழுதியவரும் அவர்தான்.
அடுத்து விக்ரமன் இயக்கத்தில் வெளிவந்த பெரும்புள்ளி, கோபி பீம்சிங் இயக்கத்தில் வெளிவந்த தாயம்மா படங்களிலும் கதாநாயகனாக நடித்தார். அதற்கடுத்து அவர் நாயகனாக நடித்து வந்த மனசார வாழ்த்துங்களேன் படத்தில் ஒரு சண்டைக் காட்சியில் நடித்த போது ஏற்பட்ட விபத்தில் படுகாயமடைந்து படுத்த படுக்கையானார். முதுகுத்தண்டில் பாதிப்பு, நரம்பு பாதிப்பு ஆகியவை ஏற்பட்டு அவரால் நடமாட முடியாத நிலை ஏற்பட்டது.
அதன்பின் ஓரளவிற்கு நடமாட முடிந்து, ராதாமோகன் இயக்கத்தில் பிரகாஷ்ராஜ் நடித்து வெளிவராமலேயே போன அனந்தகிருஷ்ணா என்ற படத்திலும் வசனம் எழுதினார். பின்னர் மீண்டும் உடல்நலம் பாதிக்கப்பட்டு படுக்கையிலேயே தன்னுடைய காலத்தை தள்ள வேண்டிய சூழ்நிலை அவருக்கு ஏற்பட்டது.
தற்போது அவருடைய மருத்துவ சிகிச்சைகளுக்கான செலவுகள் மிகவும் அதிகமாகி வருவதால் திரையுலக நண்பர்களிடம் அதற்கான கோரிக்கைகளை அவர் வைத்துள்ளார்.
சமீபத்தில் இயக்குனர் பாரதிராஜாவும் பாவுவைச் சென்று சந்தித்துள்ளார். அந்த வீடியோவும் வெளியில் வந்துள்ளது. சில மூத்த பத்திரிகை நண்பர்களைச் சந்தித்து தனது நிலை குறித்து மிகவும் வருத்தத்துடன் பேசியுள்ளார்.
பொதுவாக சினிமாவில் ரிஸ்க்கான சண்டைக் காட்சிகளை டூப் வைத்துதான் நாயகர்கள் நடிப்பார்கள். அதற்கான பயிற்சி பெற்ற டூப் என அழைக்கப்படும் திறமைசாலியான சண்டைக் கலைஞர்கள் முடிந்தவரையில் காயம் இல்லாமல் சண்டை செய்வார்கள். ஆனால், தான் நடிக்கும் காட்சி நன்றாக வர வேண்டும் என்று பாபு நினைத்த காரணத்தால் அன்று டூப் வைக்காமல் தானே அந்தக் காட்சியில் நடித்திருக்கிறார். அதுதான் அவரை இந்த நிலைமைக்கு கொண்டு வந்துவிட்டது. அன்று மட்டும் அவர் கொஞ்சம் யோசித்திருந்தால் பாபு ஒரு இயக்குனராக, நடிகராக இன்று வெற்றிகரமாக வலம் வந்து கொண்டிருப்பார் என அவருடன் பழகியவர்கள் தெரிவிக்கிறார்கள்.
திரையுலகத்தைச் சேர்ந்தவர்கள் பாபுவுக்கு உதவி செய்ய முன் வர வேண்டும் என்ற கோரிக்கையையும் அவருடைய நண்பர்கள் முன் வைக்கிறார்கள்.
தமிழ்நாடு சட்டமன்ற சபாநாயகராகவும், அமைச்சராகவும், எம்எல்ஏவாகவும் இருந்த மறைந்த ராஜாராமின் உறவினர்தான் பாபு என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று.