என் கருத்துக்களை திட்டமிட்டே சர்ச்சை ஆக்குகிறார்கள் : ராஷ்மிகா ஆதங்கம் | பிளாஷ்பேக்: சிந்தைக்கும், செவிக்கும் விருந்தளித்த ஸ்ரீதரின் “சிவந்த மண்” | தனுஷை தொடர்ந்து நானியை இயக்கும் சேகர் கம்முலா | கூலி படம் இன்னொரு தளபதி : லோகேஷை கட்டிப்பிடித்து பாராட்டிய ரஜினி | சிவராஜ்குமாரை இயக்கும் தமிழ் இயக்குனர் | சாம் ஆண்டன் இயக்கத்தில் பிரபுதேவா, வடிவேலு | பவித்ராவுக்கு என்னாச்சு?: அவரே வெளியிட்ட விளக்கம் | மீண்டும் இணைந்த பிளாக் பட கூட்டணி! | இளையராஜா பாடலை பயன்படுத்த, வனிதாவுக்கு தடைவிதிக்க கோர்ட் மறுப்பு | விடைபெற்றார் நடிகை சரோஜாதேவி : சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம் |
சினிமா என்பது சூதாட்டம் கிடையாது, அது ஒரு கலை. சினிமா டிக்கெட்டிற்கு விதிக்கப்பட்டுள்ள 28 சதவீதம் ஜிஎஸ்டி.,யை மத்திய அரசு குறைக்க வேண்டும், இல்லாவிட்டால் சினிமாவை விட்டு விலகுவேன் என்று நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.
சினிமா டிக்கெட்டிற்கு 28 சதவீதம் ஜிஎஸ்டி விதிக்கப்பட்டுள்ளது. இதை குறைக்க வேண்டும் என திரைத்துறையினர் கோரிக்கை வைத்து வருகின்றனர். ஏற்கனவே தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் இதுதொடர்பாக மத்திய அரசு வேண்டுகோள் வைத்துள்ளார். இந்நிலையில், தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையும் ஜிஎஸ்டி.,யை குறைக்க வேண்டுகோள் விடுத்துள்ளது.
12 அல்லது 18ஆக குறையுங்கள்
இதுகுறித்து சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்தார் இதன் தலைவர் எல்.சுரேஷ், நடிகர் கமல், அபிராமி ராமநாதன் உள்ளிட்டவர்கள்... அப்போது பேசிய தலைவர் சுரேஷ், 28 சதவீதம் ஜிஎஸ்டி.,யால் சினிமா துறை மிகவும் பாதிக்கும். இதை 12 அல்லது 18 சதவீதமாக குறைக்க வேண்டும், இதுதொடர்பாக மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லியை சந்தித்து பேச உள்ளோம் என்றார்.
சினிமா சூதாட்டம் அல்ல, கலை
தொடர்ந்து பேசிய நடிகர் கமல்ஹாசன், "சினிமாத்துறை என்பது செய்தியை மக்களிடத்தில் கொண்டு போய் சேர்க்கும் ஒரு ஊடகம். எனக்கு நினைவு தெரிந்தது முதல் சினிமா பார்த்து வருகிறேன். நான் பேச கற்று கொண்டதே சினிமாவில் தான். சினிமா என்பது சூதாட்டம் கிடையாது அது ஒரு கலை. சினிமாவை சரியாகவும், தவறாகவும் பயன்படுத்திய அரசியல் தலைவர்கள் உள்ளார்கள். அதை இந்த உலகம் கண்டிருக்கிறது.
பாவப்பட்டியலில் சேர்த்து விடாதீர்கள்
ஹாலிவுட் படங்களுக்கு நிகராக ஜிஎஸ்டி., நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இப்படி அதிக வரி விதித்து சினிமா துறையை பாவப்பட்டியலில் சேர்த்து விடாதீர்கள். 28 சதவீதம் வரியால் சினிமா துறையில் கருப்பு பணபுழக்கம் தான் அதிகமாகும். 28 சதவீதம் வரியை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை தமிழ்நாட்டில் மட்டுமல்ல எல்லா மாநிலங்களிலும் எழுந்துள்ளது.
சினிமாவை விட்டே விலகுவேன்
இந்தியாவிற்கு உலகளவில் பெருமை சேர்ப்பது பிராந்திய மொழி படங்கள் தான். ஆகவே இதை கருத்தில் கொண்டு ஜிஎஸ்டி.,யை குறைக்க மத்திய அரசு பரிசீலனை செய்து, சினிமா துறையினரின் நியாயமான கோரிக்கையை ஏற்க வேண்டும். ஒருவேளை ஹிந்தி துறையினர் ஏற்று கொண்டாலும் நாங்கள் இதை ஏற்று கொள்ள மாட்டோம். மத்திய அரசு ஜிஎஸ்டி., வரியை குறைக்காவிட்டால் சினிமா துறையை விட்டே நான் விலகுவேன். இதை தவிர எனக்கு வேறு வழி தெரியவில்லை.
இவ்வாறு கமல் பேசினார்.