வசூல் கொட்டுது... : 10 நாளில் ரூ.552.70 கோடியை குவித்த ‛துரந்தர்' | ஹனி ரோஸின் ‛ரேச்சல்' படம் ரிலீஸ் ஒத்திவைப்பு | அரசு பேருந்தில் திரையிடப்பட்ட திலீப் திரைப்படம் ; பெண் பயணியின் எதிர்ப்பால் நிறுத்தம் | புத்தாண்டு தினத்தில் அஜித் 64வது பட அறிவிப்பு வெளியாகிறதா? | நான் அழுதால் நீங்கள் சிரிப்பீர்கள் ; சல்மான்கான் வெளிப்படை பேச்சு | கருப்பு படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய ஜீ தமிழ் சேனல் | மதுப்பழக்கம் துவங்கியது புகுந்த வீட்டில் தான்; நடிகை ஊர்வசி | எம்ஜிஆர் நினைவுநாளில் 'வா வாத்தியார்' வருகிறார்…??? | தயாரிப்பாளர்கள் இல்லாமல் நடந்த 'அகண்டா 2' சக்சஸ் மீட் | பலாத்காரத்துக்கு திட்டமிட்டவர்களும் தண்டிக்கப்பட வேண்டும் : மஞ்சு வாரியர் |

நடிப்புடன் பின்னணி பாடும் ஆற்றல் பெற்ற எம் கே தியாகராஜ பாகவதர், பி யூ சின்னப்பா, டி ஆர் மகாலிங்கம் போன்ற திரைக் கலைஞர்களின் வரிசையில் முக்கியமான ஒரு திரைக்கலைஞராக அன்று பார்க்கப்பட்டவர்தான் 'நடிப்பிசைப் புலவர்' என தமிழ் திரையுலகினாரால் கொண்டாடப்பட்ட நடிகர் கே ஆர் ராமசாமி.
1935ம் ஆண்டு வெளிவந்த “மேனகா” என்ற திரைப்படத்தில் ஒரு சிறிய வேடமேற்று வெள்ளித்திரையில் நடிக்க ஆரம்பித்த இவர், ஆரம்பத்தில் டி கே எஸ் நாடகக் குழுவில் நடித்துக் கொண்டிருந்தார். அப்போதே இவரது நடிப்பைப் பார்த்து வியந்து பாராட்டியவர்கள்தான் பின்னாளில் புகழ் பெற்ற இயக்குனர்களாகவும், நடிகர் திலகம் சிவாஜிகணேசனின் முதல் படமான “பராசக்தி”யை இயக்கிய இயக்குனர்களாகவும் அறியப்பட்ட கிருஷ்ணன்-பஞ்சு என்ற இரட்டையர்.
கே ஆர் ராமசாமியின் கணீர் குரலையும், பாடும் ஆற்றலையும், அற்புதமான நடிப்பையும் கண்டு வியந்த கிருஷ்ணன்-பஞ்சு என்ற இந்த இரட்டையர், சரியான வாய்ப்பு கிடைத்தால் எம் கே தியாகராஜ பாகவதரைப் போல் இவராலும் வெற்றி என்ற இலக்கை எளிதில் பெற முடியும் என்பதை அப்போதே கணித்திருந்தனர். இயக்குநர் பி என் ராவிடம் உதவியாளர்களாக பணிபுரிந்து வந்த இந்த இரட்டையர், தங்களுக்கு ஒரு படத்தை இயக்கும் வாய்ப்பு கிட்டினால், கே ஆர் ராமசாமியைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் நினைத்திருந்தனர். அப்படி ஒரு நல் வாய்ப்பும் அவர்களைத் தேடி வந்தது.
“லியோ பிலிம்ஸ்” என்ற தயாரிப்புப் பதாகையின் கீழ் டி பாலாஜி சிங் தயாரித்து, இயக்கிய திரைப்படமாக வெளிவந்த திரைப்படம்தான் “பூம்பாவை”. இத்திரைப்படத்தின் மூலமாகத்தான் கிருஷ்ணன்-பஞ்சு என்ற புகழ் பெற்ற இரட்டை இயக்குனர்கள் தமிழ் திரையுலகிற்கு இயக்குனர்களாக அறிமுகமானார்கள். 'நடிப்பிசைப் புலவர்' கே ஆர் ராமசாமிக்கு பொருத்தமான ஒரு கதையைத் தேர்ந்தெடுத்து, அதில் அவரையே முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க வேண்டும் என்ற தங்களது விருப்பத்தை தயாரிப்புத் தரப்பினரிடம் இயக்குனர்கள் கிருஷ்ணன்-பஞ்சு முன் வைக்க, அவர்களது விருப்பம் ஏற்றுக் கொள்ளப்பட்டு, படப்பிடிப்பும் ஆரம்பமானது.
சிலப்பதிகாரத்தின் 'பூம்பாவை' கதையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட இத்திரைப்படம்தான் 'நடிப்பிசைப் புலவர்' கே ஆர் ராமசாமி நாயகனாக நடித்து வெளிவந்த முதல் திரைப்படம். திருஞான சம்பந்தர் கதாபாத்திரத்தில் கே ஆர் ராமசாமியும், பூம்பாவை என்ற நாயகி கதாபாத்திரத்தில் யு ஆர் ஜீவரத்தினமும் நடிக்க, இயக்குனர்கள் கிருஷ்ணன்-பஞ்சுவின் மேற்பார்வையின் கீழ் டி பாலாஜி சிங் தயாரித்து இயக்கிய இத்திரைப்படம் 1944ம் ஆண்டு வெளிவந்து, பெரும் வெற்றியைப் பெற்றது.
'நடிப்பிசைப் புலவர்' கே ஆர் ராமசாமியை நாடறியும் நடிகனாக்கிய இந்தப் “பூம்பாவை” திரைப்படத்தில் இடம் பெற்ற பாடல்களில் பெரும்பான்மையான பாடல்களை தனது வெண்கலக் குரலில் பாடி, அன்றைய ரசிகர்களை தன்பால் ஈர்த்திருந்ததோடு, இதோ எம் கே தியாகராஜ பாகவதருக்கு மாற்றாக ஒருவர் வந்துவிட்டார் என்ற பேச்சும் ரசிகர்கள் மத்தியில் எழத்தான் செய்திருந்தது.




