தகுதிக்கு உரிய சம்பளம் கேட்க தயங்குவதில்லை! - சொல்லுகிறார் பிரியாமணி | பிளாஷ்பேக்: தபால்காரர் தேர்வு செய்த தரமான பாடலுடன் வெளிவந்த “தங்கை” திரைப்படம் | 'பைசன்' படத்திற்கு முதல்வர் ஸ்டாலின் பாராட்டு | ஆதங்கத்துடன் புலம்பும் முகமூடி நடிகை | நடிகர்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் நடிகை | மலையூரு நாட்டாமை மனச காட்டு பூட்டாம..: ‛டூரிஸ்ட் பேமிலி' கமலேஷ் | அனுபமாவின் அனுபவம் | 59 நாட்களில் தமிழ் கற்றேன்: ‛செம்பருத்தி பூ' ஸ்வாதி | நான் ஏன் பிறந்தேன், முத்து, மார்கன் - ஞாயிறு திரைப்படங்கள் | மீண்டும் விளையாட்டு படத்தை கையில் எடுக்கும் அருண் ராஜா காமராஜ் |

தமிழ் திரையுலகின் தாய்வீடு என்றழைக்கப்படும் ஏ வி எம் தயாரிப்பு நிறுவனத்தின் செல்லப்பிள்ளையாக அறியப்பட்டவரும், உயரமான சரீரமும், உயர்ந்த கல்வி ஞானமும் கொண்டவருமான, ஒரு உற்சாகமிகு இயக்குநர்தான் இயக்குநர் ஏ சி திருலோகசந்தர். 1952ல் ஒரு உதவி இயக்குநராக திரைத்துறைக்கு அறிமுகமாகி, பின் ஏ வி எம் தயாரித்த “பார்த்தால் பசி தீரும்” திரைப்படத்தின் கதையை எழுதி, அதன் மூலம் ஏ வி எம்மின் அபிமானத்துக்குரிய இயக்குநராக உயர்ந்த இவர், ஏ வி எம்மின் பல படங்களை இயக்கியிருந்ததோடு, தனது சொந்தப் படத் தயாரிப்பு நிறுவனமான “சினிபாரத்” என்ற பதாகையின் கீழும் பல படங்களைத் தயாரித்து இயக்கி வெற்றி பெற்றவர். அந்த வகையில் நடிகரும், பிரபல தயாரிப்பாளருமான கே பாலாஜியின் தயாரிப்பில் வெளிவந்த “தங்கை” திரைப்படத்தை இயக்கியிருந்தவரும் இவரே.
இவரது இயக்கத்தில் நடிகர் திலகம் சிவாஜிகணேசன் நடித்த முதல் திரைப்படம் என்ற பெருமையோடு வெளிவந்த திரைப்படம்தான் இந்த “தங்கை” திரைப்படம். ஆரம்பத்தில் இத்திரைப்படத்தில் நடிப்பதற்கு சுணக்கம் காட்டியிருக்கின்றார் நடிகர் திலகம் சிவாஜிகணேசன். காரணம், குடும்ப உறவுகளின் பின்னணியில், அழுத்தமான கதைக் களங்களோடு, தனது உணர்ச்சி மிகு நடிப்பினை வெளிப்படுத்தி, பல வெற்றித் திரைப்படங்களைத் தந்து கொண்டிருந்த சிவாஜிக்கு, இந்தப் படத்தின் கதை ஆக்ஷன் வகையைச் சேர்ந்ததாக இருந்ததால், அவர் இந்தப் படத்தில் நடிக்கத் தயக்கம் காட்டியிருக்கின்றார். அதன் பின் படத்தின் தயாரிப்பாளரான நடிகர் கே பாலாஜி, இந்தப் படத்தில் நீங்கள் நடிப்பதன் மூலம் உங்களது பிம்பம் வேறொரு கோணத்தில் கட்டமைக்கப்படும் என்று கூறி, அதற்கான உறுதியையும், உத்தரவாதத்தையும் தந்த பின்னர் படத்தில் நடிக்க சம்மதித்திருக்கின்றார் நடிகர் திலகம் சிவாஜிகணேசன்.
ஆரூர்தாஸ் வசனம் எழுதிய இத்திரைப்படத்தின் பாடல்களை கவியரசர் கண்ணதாசன் எழுத, இசையமைத்திருந்தார் மெல்லிசை மன்னர் எம் எஸ் விஸ்வநாதன். படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அத்தனையும் படக்குழுவினரால் ஒரு மனதாக ஏற்கப்பட்டிருந்த நிலையில், ஒரு காட்சிக்கான பாடலின் மெட்டு மட்டும் தேர்வு செய்யப்படாத நிலையிலேயே இருந்து வந்தது. படத்தின் இசையமைப்பாளர், பாடலாசிரியர், தயாரிப்பாளர், இயக்குநர் என ஆளாளுக்கு ஒவ்வொரு மெட்டு பிடித்திருக்க, முடிவு எட்டப்படாத நிலையில், அங்கு தபால் கொடுக்க வந்த ஒரு தபால்காரரை அழைத்து, அந்தக் குறிப்பிட்ட பாடல் காட்சிக்காகப் போடப்பட்டிருந்த மெட்டுக்களை எல்லாம் வாசித்துக் காட்டி, உனக்கு எது பிடித்திருக்கிறது? என்று கேட்க, அந்த தபால்காரர் ஒரு மெட்டினைத் தேர்வு செய்து தந்திருக்கின்றார்.
பின் அந்த மெட்டிலையே பாடலை அமைத்துத் தந்தார் 'மெல்லிசை மன்னர்' எம் எஸ் விஸ்வநாதன். அப்படி அந்தத் தபால்காரர் தேர்வு செய்து தந்த அந்த மெட்டில் அமைந்த பாடல்தான் படத்தில் சிவாஜி வாயசைத்து நடித்து, டி எம் சவுந்தரராஜன் பாடி, சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த “கேட்டவரெல்லாம் பாடலாம், என் பாட்டுக்குத் தாளம் போடலாம்” என்ற பாடல்.