பிளாஷ்பேக்: முத்தான மூன்று சுப்புலக்ஷ்மிகளை வெள்ளித்திரைக்குத் தந்த இயக்குநர் கே சுப்ரமணியம் | மீண்டும் புதிய படங்களில் நடிப்பதற்கு தயாராகும் கியாரா அத்வானி! | விரைவில் கைதி 2 : கார்த்தி கொடுத்த அப்டேட் | ‛வா வாத்தியார்' பட ரிலீசிற்கு தடை நீட்டிப்பு | ரத்னகுமாரின் '29' | ரக்ஷன், ஆயிஷாவின் ‛மொய் விருந்து' : முதல் பார்வை வெளியீடு | பிளாஷ்பேக்: படிக்க வந்த இடத்தில் நடிக்க வாய்ப்பு; “காதலிக்க நேரமில்லை” நாயகன் ஆனார் ரவிச்சந்திரன் | கதையின் நாயகன் ஆன சூரி பட இயக்குனர் | கார்த்திக்கு கதை சொன்ன நானி பட இயக்குனர் | வி சாந்தாராம் பயோபிக்கில் ஜெயஸ்ரீ கதாபாத்திரத்தில் தமன்னா |

தமிழ் சினிமா பேசத் தொடங்கிய ஆரம்ப காலங்களிலேயே, சட்டம் பயின்ற இயக்குநராக கலையுலகில் கால் பதித்தவர்தான் இயக்குநர் கே சுப்ரமணியம். அக்காலத்திலேயே சமூக சீர்திருத்தக் கருத்துக்களையும், தேசியவாத சிந்தனைகளையும் தனது படைப்புகளின் வாயிலாக உரக்கச் சொன்ன உன்னதமான படைப்பாளியாக அடையாளப்படுத்தப்பட்ட இவர்தான் தமிழ் சினிமா உலகின் முதல் சூப்பர் ஸ்டாரான எம் கே தியாகராஜ பாகவதரை வெள்ளித்திரை நாயகனாக அறிமுகம் செய்து வைத்தார்.
“பவளக்கொடி” என்ற அத்திரைப்படத்தில்தான் தனது வாழ்க்கைத் துணைவியும், நடிகையுமான எஸ் டி சுப்புலக்ஷ்மி அவர்களையும் நாயகியாக அறிமுகம் செய்து வைத்து, வெள்ளித்திரையில் மின்னச் செய்தார். அதன் பிறகு 1938ம் ஆண்டு தான் இயக்கிய “சேவாசதனம்” என்ற திரைப்படத்தின் மூலம் ஒரு திரை நட்சத்திரமாக இவரால் அறிமுகம் செய்து வைக்கப்பட்டவர்தான் திருமதி எம் எஸ் சுப்புலக்ஷ்மி.
1934ல் இயக்குநர் கே சுப்ரமணியத்தின் இயக்கத்தில் உருவாகிக் கொண்டிருந்த “பக்த குசேலா” என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது, அவரது கம்பெனி கார் ஓட்டுநராக பணிபுரிந்து வந்த நாகப்பட்டினத்தைச் சேர்ந்த முத்து அய்யர் என்பவரோடு படப்பிடிப்பைக் காண பன்னிரெண்டு வயது சிறுமி ஒருத்தி வந்திருக்க, மூக்கும், முழியுமாக சர்வலட்சணம் பொருந்தி இருந்த அந்த சிறுமியைக் கண்ட இயக்குநர் கே சுப்ரமணியம், ஓட்டுநர் முத்து அய்யரிடம் யார் என கேட்க, தனது உறவுக்காரப் பெண், தங்கை உறவு என அவரும் கூற, பின்னாளில் தான் இயக்கிய “பக்த சேதா” என்ற திரைப்படத்தில் அன்று சிறுமியாக பார்த்த அந்தப் பெண்ணையே நாயகியாக அறிமுகம் செய்து வைத்தார் இயக்குநர் கே சுப்ரமணியம்.
இவ்வாறு இதற்கு முன்பே சுப்புலக்ஷ்மி என்ற பெயர் கொண்ட இரண்டு நட்சத்திரங்கள் திரையுலகில் தடம் பதிக்க காரணமாயிருந்த இயக்குநர் கே சுப்ரமணியத்தின் மற்றொரு கலைப்படைப்பாக வெளிவந்ததுதான் இந்த “பக்த சேதா”.
இத்திரைப்படத்திலும் இவர் அறிமுகம் செய்து வைத்த நாயகியின் பெயர் சுப்புலக்ஷ்மி. பிரபல நடிகர்கள் எவரும் இல்லாமலேயே, புது முகங்களை வைத்தே ஒரு புராண திரைப்படத்தை எடுத்து வெற்றி பெறச் செய்ய முடியும் என்பதை இத்திரைப்படத்தின் மூலமாக நிரூபித்துக் காட்டியிருந்த இயக்குநர் கே சுப்ரமணியம் அறிமுகப்படுத்திய மூன்றாவது சுப்புலக்ஷ்மிதான் நடிகை ஜி சுப்புலக்ஷ்மி. பாபநாசம் சிவன், கொத்தமங்கலம் சுப்பு ஆகியோர் நடித்திருந்த இத்திரைப்படத்தில் ஜி சுப்புலக்ஷ்மி பாடிய “கண்டேன் கண்டேன் கமலப் பதமலர்” என்ற பாடல் மிகப் பெரிய ஹிட் பாடலாகவும் அமைந்து படத்தின் வெற்றிக்கு துணை நின்றது.