பெண்கள் அரசியல் கூட்டங்களுக்கு செல்லக்கூடாது: அம்பிகா அட்வைஸ் | நயன்தாரா வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் | பிளாஷ்பேக்: மம்பட்டியான் பாணியில் உருவான 'கரிமேடு கருவாயன்' | பிளாஷ்பேக்: தமிழ், பெங்காலியில் உருவான படம் | கார்த்தி நடிக்கும் ‛வா வாத்தியார்' ரிலீஸ் தேதி அறிவிப்பு | தமிழகம் பக்கமே வரலை... ஆனாலும் தமிழில் ஹிட் | பக்தி மயத்தில் கோலிவுட் பார்ட்டிகள் | ‛‛2 ஆயிரம் சம்பளம் கேட்டேன், 4 லட்சம் கொடுத்தார் நட்டி'': சிங்கம்புலி நெகிழ்ச்சி | சொந்த செலவில் பிளைட்டில் வந்து ரஞ்சித்துக்கு உதவிய விஜய்சேதுபதி | கன்னடத்தில் அதிக வசூல் படங்கள் : இரண்டாம் இடம் பிடித்த 'காந்தாரா சாப்டர் 1' |
“அவளும் பெண்தானே” என்ற திரைப்படத்தை இயக்கியதன் மூலம், 1970களின் மத்தியில் ஒரு இயக்குநராக தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர்தான் இயக்குநர் துரை. “ஒரு குடும்பத்தின் கதை”, “ரகுபதி ராகவ ராஜாராம்”, “பாவத்தின் சம்பளம்”, “சதுரங்கம்”, “ஆயிரம் ஜென்மங்கள்”, “நீயா?”, “மரியா மை டார்லிங்”, “கிளிஞ்சல்கள்”, “துணை” என சிவாஜி, ரஜினி, கமல், முத்துராமன், மோகன் போன்ற பல முன்னணி நாயகர்களை வைத்து இவர் இயக்கிய திரைப்படங்கள் ஏராளம் என்றாலும், இன்றும் கலையுலகமும், தமிழ் திரைப்பட ரசிகர்களும் இவரை நினைவில் கொள்ளத்தக்க, இவர் தந்த ஒரு கலைப்படைப்பாக வெளிவந்து சாதனை படைத்த திரைப்படம்தான் “பசி”.
வணிக ரீதியான திரைப்படங்களை மட்டுமே இயக்கி வந்த இயக்குநர் துரை, பாடல்கள், நடனக் காட்சிகள் போன்ற வணிக நோக்கம் கொண்ட அம்சங்களிலிருந்து சற்று விலகி, 1979ஆம் வருடத்தில், ஒரு யதார்த்த சினிமாவாக, வித்தியாசமாகத் தர நினைத்த ஒரு திரைப்படம்தான் இந்த “பசி” திரைப்படம், சென்னை நகர குடிசைப் பகுதி மக்களின் வாழ்வியலின் சில கோணங்களை, ஒரு தனித்துவத்தோடு தந்து வெற்றி கண்டிருந்தார். “காமுகனுக்கோ காமப்பசி, கோதைக்கோ மானப்பசி, குழந்தைக்கோ வயிற்றுப்பசி, காலனுக்கோ மரணப்பசி” என்று படத்தின் டைட்டிலில் காட்டி, இறுதியில் எல்லாம் விதி என்பதாக முடித்திருப்பார் இயக்குநர் துரை. இந்தப் படத்தில் நடித்ததற்காக அகில இந்திய சிறந்த நடிகைக்கான தேசிய விருதினைப் படத்தின் நாயகியான மறைந்த நடிகை ஷோபாவிற்குப் பெற்றுத் தந்தது இத்திரைப்படம்.
நகைச்சுவை நடிகர் செந்திலின் கலைப் பயணத்திற்கு ஒரு தொடக்கப் புள்ளியாக அமைந்திருந்ததும் இத்திரைப்படமே. படத்தில் நடிகை ஷோபாவின் தோழி கதாபாத்திரத்தில் நடித்திருந்த அறிமுக நடிகை சத்யா, இத்திரைப்படத்திற்குப் பின் 'பசி' சத்யா என அழைக்கப்பட்டு, இன்று வரை ஒரு வெற்றிகரமான திரைக்கலைஞராக கலைப்பணியும் ஆற்றி வருகின்றார். நடிகர் விஜயன், டில்லி கணேஷ், பிரவீணா பாக்யராஜ், எஸ் என் பார்வதி, சுருளிராஜன் ஆகியோர் நடித்திருந்த இத்திரைப்படம், 1979ம் ஆண்டு வெளிவந்து, பல திரையரங்குகளில் 100 நாள்களைக் கடந்து ஓடி, பெரும் வெற்றியைப் பெற்றுத் தந்திருந்தது.
இதனைத் தொடர்ந்து புதிதாக ஏதாவது சொல்ல வேண்டும் என்ற ஆர்வத்தின் காரணமாக இயக்குநர் துரை எடுத்து, தோல்வியைத் தழுவிய திரைப்படங்கள்தான் “காடு”, “மயில்” போன்ற திரைப்படங்கள். “பசி” திரைப்படத்திற்கு முன்னரும், அதன் பின்னரும் பல திரைப்படங்களை உருவாக்கியிருந்தும், படத்தின் இயக்குநரான துரையை, இயக்குநர் 'பசி' துரை என்றே கலையுலகிலும், ரசிகர்கள் மத்தியிலும் அடையாளப்படுத்திவிட்டுச் சென்ற ஒரு திரைப்படமாகவும் அமைந்ததுதான் இந்தப் “பசி” திரைப்படம். இத்திரைப்படத்தின் நினைவு மட்டுமே இயக்குநர் துரைக்கு நிரந்தரமாகியும் போனது என்றால் அது மிகையன்று.