ஸ்பெயினிலும் சாதித்த அஜித் அணி: 3ம் இடம் பிடித்து அசத்தல் | அக்டோபர் 5ம் தேதி முதல் பிக்பாஸ் சீசன்- 9 ஆரம்பம்! | பிரபாஸின் ‛தி ராஜா சாப்' படத்தின் டிரைலர் நாளை மாலை வெளியாகிறது! | என் சாம்பியனுக்கு அருகில் இருக்கிறேன்! - புகைப்படங்களுடன் ஷாலினி வெளியிட்ட பதிவு | பிளாஷ்பேக்: 'ஜுபிடர் பிக்சர்ஸ்' நிறுவனம் தயாரிக்க ஆசைப்பட்டு, முடியாமல் போன திரைப்படம் | 'ஓஜி' வரவேற்பு: பிரியங்கா மோகன் தெரிவித்த நன்றி | ‛தி பாரடைஸ்' படத்திலிருந்து மோகன் பாபு பர்ஸ்ட் லுக் வெளியானது! | தெலுங்கு படத்தின் தமிழ் ரீமேக்கிற்கு இசையமைக்கும் ஜி.வி. பிரகாஷ்! | ‛நோ' சொன்ன ருக்மணி வசந்த்.. ‛எஸ்' சொன்ன கீர்த்தி சுரேஷ்! | இளவட்ட இயக்குனர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் நடிகை |
தமிழில் பேசும் படம் அறிமுகமான முதல் இருபத்தைந்து ஆண்டுகளில் கலையுலகிலும், சினிமா ஆர்வலர்கள் மத்தியிலும் அதிகம் பேசப்பட்ட, காணப்பட்ட பெயர் என்றால் அது 'ஜுபிடர் பிக்சர்ஸ்' என்றால் அது மிகையன்று. எம் சோமசுந்தரமும், எஸ் கே மொய்தீனும் இணைந்து தயாரித்து, 1935ல் “மேனகா” என்ற ஒரு சமூகத் திரைப்படத்தைத் தந்தனர். பின்னர் 'ஜுபிடர் பிக்சர்ஸ்' என்ற தயாரிப்பு நிறுவனம் ஒன்றை ஆரம்பித்து, “கண்ணகி”, “ஸ்ரீமுருகன்”, “அபிமன்யூ”, “வேலைக்காரி”, “கன்னியின் காதலி”, “மர்மயோகி”, “மனோகரா” என பல அற்புதமான திரைப்படங்களைத் தயாரித்தும் வெளியிட்டனர்.
மு கருணாநிதி, எஸ் டி சுந்தரம் போன்றோர் கதை வசனகர்த்தாக்களாக உருவானதும், கவிஞர் கண்ணதாசன் திரைப்படப் பாடலாசிரியராக அறிமுகமானதும், எம் ஜி ஆர், எம் என் நம்பியார், எஸ் ஏ நடராஜன், நரசிம்ம பாரதி போன்ற நாடக நடிகர்கள் சினிமா பிரவேசத்தை துவக்கியதும், ஏ எஸ் ஏ சாமி, ஏ காசிலிங்கம் போன்றோர் இயக்குநர்களாக உயர்வு பெற்றதும் 'ஜுபிடர் பிக்சர்ஸ்' என்ற இந்த ஆரம்பப் புள்ளியிலிருந்துதான். இப்படி பலருடைய கலையுலகப் பிரவேசத்திற்கு வித்திட்ட இந்த 'ஜுபிடர் பிக்சர்ஸ்', 1951ம் ஆண்டு தயாரித்து வெளியிட்ட திரைப்படம்தான் 'கைதி'.
இந்தப் படத்தின் இயக்குநரான வீணை எஸ் பாலசந்தர், படப்பிடிப்பின் போது, 'ஜுபிடர் பிக்சர்ஸ்' தயாரிப்பாளர் சோமுவிடம், எனக்கு ஏழு வயதிருக்கும் போது, ஓர் ஆங்கிலத் திரைப்படம் சென்னைக்கு வந்திருந்தது. அந்தப் படத்தை நான் பார்த்ததிலிருந்து என் மனதின் அடித்தளத்தில் அப்படியே அந்த திரைப்படத்தின் மையக் கரு பதிந்து விட்டது. நாளாக நாளாக என் வயதுடன் அந்த மையக் கருத்தும் வளர்ந்து விட, ஒரு நாள் அதுவே முழுக் கதையாக உருப் பெற்றும் விட்டது என சொல்ல, கதையைச் சொல்லுங்கள் என தயாரிப்பாளர் சோமு கேட்க, கதையைச் சொன்னார் வீணை எஸ் பாலசந்தர்.
நான் எத்தனையோ மர்மக் கதைகளைக் கேட்டிருக்கின்றேன். ஆனால் இவ்வளவு அற்புதமாக எந்தக் கதையும் இருந்ததில்லை. இதை நான் படமாக எடுக்க ஆசைப்படுகின்றேன். ஆனால் இப்போது 'ஜுபிடர் பிக்சர்ஸ்' பொருளாதார நிலை பற்றி உங்களுக்கு நன்றாகவே தெரியும். நீங்கள் சொன்ன இந்தக் கதையை படமாக எடுப்பதற்கு அதிகமான பணம் செலவிட வேண்டும். அந்த அளவிற்கு செலவிட இப்போது என்னிடம் பணம் இல்லையே என சொல்லி வருந்தியிருக்கின்றார் 'ஜுபிடர் பிக்சர்ஸ்' தயாரிப்பாளர் சோமு.
அந்தத் திரைப்படம்தான் பின்னாளில் வீணை எஸ் பாலசந்தரே தயாரித்து இயக்கியிருந்த “நடு இரவில்” என்ற திரைப்படம். பிரிட்டிஷ் எழுத்தாளர் அகதா கிறிஸ்டி எழுதிய “அண்ட் தென் தேர் வேர் நன்” என்ற ஆங்கில நாவலை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட இத்திரைப்படத்தை, 1964-65 காலகட்டங்களில் தயாரித்து, இயக்கி, பின் விநியோகஸ்தர்கள் யாரும் வாங்க முன் வராததால், வீணை எஸ் பாலசந்தரே விநியோக உரிமையையும் கையில் எடுத்து, நம்பிக்கையோடு படத்தை 1970ல் வெளியிட்டார். படம் தரமான வெற்றியையும் பெற்றுத் தந்தது வீணை எஸ் பாலசந்தருக்கு.