என் படங்களுக்காக ரசிகர்களை எதிர்ப்பார்ப்புடன் காத்திருக்க வைப்பேன்! - விஷ்ணு விஷால் | விளையாட்டால் நிகழும் பிரச்னையே ‛கேம்' : சொல்கிறார் ஷ்ரத்தா ஸ்ரீநாத் | நெல் விவசாயத்தில் இறங்கிய நயன்தாரா பட இயக்குனர் | தெலுங்கில் முதல் முறையாக நுழைந்த அக்ஷய் கன்னா ; சுக்ராச்சாரியார் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் | கன்னட நடிகர் தர்ஷனுக்கு தனிமை சிறை ஏன்? நீதிமன்றத்தில் மனு தாக்கல் | 'திரிஷ்யம் 3' ; ஜீத்து ஜோசப் வெளியிட்ட முதல் புகைப்படம் | ஜீவாவின் 'தலைவர் தம்பி தலைமையில்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது! | காதலில் கரைபவர் வெகு சிலரே : தனுஷின் ‛தேரே இஷ்க் மே' டீசர் வெளியீடு | கமல் பிறந்தநாள் : ரீ-ரிலீஸாகும் ‛நாயகன்' | படிப்புக்கும் நடிப்புக்கும் சம்பந்தமில்லை: பள்ளிகால அனுபவம் பகிர்ந்த அனுபமா பரமேஸ்வரன் |
வெள்ளித்திரையின் மூலம் ஆன்மீகத்தின் உன்னதத்தை சொல்லித்தந்து, பரம்பொருளை கண்முன் காட்டி, திரைமொழி வாயிலாக இறைமொழியை உணரச் செய்து, புராண திரைப்படங்களின் புகழ் மிக்க இயக்குநராக உயர்ந்து நின்றவர்தான் 'அருட்செல்வர்' இயக்குநர் ஏ பி நாகராஜன். சமூக மற்றும் புராண கதைகளின் நாயகனாக நடிகர் திலகம் சிவாஜிகணேசனை வைத்து இவர் தயாரித்து, இயக்கிய பெரும்பாலான திரைப்படங்கள் மாபெரும் வெற்றித் திரைப்படங்களாகவே அமைந்திருந்தன. “வடிவுக்கு வளைகாப்பு”, “குலமகள் ராதை”, “நவராத்திரி” போன்ற சமூக கதைகளின் வெற்றியைத் தொடர்ந்து, “சரஸ்வதி சபதம்”, “கந்தன் கருணை”, “திருவருட் செல்வர்”, “திருமால் பெருமை” என இவரும், சிவாஜியும் இணைந்து தந்த புராண வெற்றித் திரைப்படங்களின் வரிசையில் வந்து, 'வெள்ளி விழா' கொண்டாடிய ஒரு திரைப்படம்தான் “திருவிளையாடல்”.
சிவாஜியின் 100வது திரைப்படமான “நவராத்திரி”யின் வெற்றியைத் தொடர்ந்து, ஏ பி நாகராஜன், தயாரிப்பாளர் ஏ எம் ஷாகுல் ஹமீத் இருவரும் இணைந்து தயாரித்த திரைப்படம்தான் இந்த “திருவிளையாடல்”. இத்திரைப்படத்திற்கு இவர்கள் முதலில் வைத்த பெயர் “சிவலீலா”. இறைவன் சிவபெருமான் மனித வடிவில் பூமியில் அவதரித்து, பல தோற்றங்களில் வந்து, தனது பக்தர்களை சோதிப்பது போல், நான்கு குருங்கதைகளாக சொல்லப்பட்ட இத்திரைப்படத்தின் கதை, திருவிளையாடல் புராணத்தால் ஈர்க்கப்பட்ட ஒன்று.
அதில் ஒன்றுதான் இறைப்பணி ஒன்றே மூச்சென வாழ்ந்து, ஈசனைத் துதிபாடும் பாணபத்திரர் மற்றும் இருமாப்பு கொண்டு, தான் என்ற கர்வம் தலைக்கேறி, தனது இசை வல்லமையால் பாண்டிய ராஜ்ஜியத்தையே கைப்பற்ற நினைக்கும் திறமையான பாடகர் ஹேமநாத பாகவதர். இந்த இருவருக்குமிடையே இசைப் போட்டி நடக்க இருப்பதாக பாண்டிய சபையில் அறிவிப்பு வெளியாகும் முன், ஹேமநாத பாகவதர் பாண்டிய மன்னனின் அரசவையில் நிகழ்த்தும் ஒரு மாபெரும் இசை நிகழ்ச்சியாக வரும் பாடல்தான் “ஒரு நாள் போதுமா? இன்றொரு நாள் போதுமா?” என்ற பாடல். இந்தப் பாடலைப் பாட இயக்குநர் ஏ பி நாகராஜனின் முதல் தேர்வாக இருந்தவர் பின்னணிப் பாடகர் 'இசைமணி' சீர்காழி எஸ் கோவிந்தராஜன்.
இந்தப் பாடலைப் பாட அவர் மறுப்பு தெரிவிக்க, பின்னர் பாடல் இன்னொரு இசைமேதையான எம் பாலமுரளி கிருஷ்ணாவிடம் சென்றது. தோடி, தர்பார், மோகனம், கானடா ஆகிய ராகங்களை உள்ளடக்கி, 'திரையிசைத் திலகம்' கே வி மகாதேவன் உருவாக்கித் தந்த இந்தக் காவிய மயமான ராகமாலிகைப் பாடலை, பாலமுரளி கிருஷ்ணா தனது தேனினும் இனிய குரல்வளத்தாலும், நடிகர் டி எஸ் பாலையா அவருக்கே உரித்தான அபாரமான உடல் மொழியாலும் சிறப்பித்துத் தந்து, இன்றும் கேட்போரை மெய்மறக்கச் செய்யும் ஒரு இசைப் பொக்கிஷமாக நிலைத்து நிற்கின்றது என்பதில் எந்த ஐயமும் இல்லை. 1965ஆம் ஆண்டு வெளிவந்த இத்திரைப்படம் ஒரு வெள்ளிவிழா திரைப்படமாக தனது வெற்றியைப் பதிவு செய்து, ஆண்டுகள் 60 ஆன போதிலும் இன்றும் மக்களால் ஆராதிக்கப்பட்டு வரும் ஒரு போற்றுதலுக்குரிய ஆன்மீக கலைச் சித்திரமாக இருந்து வருவதே இந்த “திருவிளையாடல்” திரைப்படத்தின் தனிச்சிறப்பு.