அரசியலில் இருந்து விலகிய பிறகும் விமர்சிக்கிறார்கள்: சிரஞ்சீவி பேச்சு | மதுரை மாநாடு நடப்பதென்ன... நடிகர், நடிகைகள் இணைகிறார்களா? | மூத்த நடிகையின் ஆசையை நிறைவேற்றிய முதல்வர் ஸ்டாலின் | அனுஷ்காவின் ‛காட்டி' டிரைலர் வெளியீடு : ரிலீஸ் தேதியும் அறிவிப்பு | ரவி மோகனை தொடர்ந்து சிவகார்த்திகேயனுக்கு வில்லனாகும் ஆர்யா | பராசக்தி படத்தில் நடிக்காதது ஏன் : லோகேஷ் கனகராஜ் விளக்கம் | ராம் சரண் படம் கைவிடப்பட்டது ஏன் : கவுதம் தின்னனூரி விளக்கம் | சிவகார்த்திகேயனின் மன அழுத்தத்தை போக்கும் பிள்ளைகள் | ‛கிங்டம்' படத்திற்கு எதிர்ப்பு : வருத்தம் தெரிவித்த படக்குழு | 23 ஆண்டுகளுக்கு பின் நாளை மறுநாள் ரீ-ரிலீஸ் ஆகிறது சுந்தரா டிராவல்ஸ் |
தெலுங்குத் திரையுலகத்தின் சீனியர் ஹீரோக்களில் ஒருவர் சிரஞ்சீவி. 2008ம் ஆண்டு பிரஜா ராஜ்ஜியம் என்ற கட்சியை ஆரம்பித்தார். 2009ல் நடந்த சட்டசபைத் தேர்தலில் இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு திருப்பதியில் வென்று எம்எல்ஏ ஆனார். பின்னர் 2011ம் ஆண்டு அவரது கட்சியை காங்கிரஸ் கட்சியுடன் இணைத்தார். 2012ம் ஆண்டு ராஜ்ய சபா எம்.பி ஆனார். பின்னர் மத்திய சுற்றுலாத் துறை இணை அமைச்சராக பதவியேற்று இரண்டு ஆண்டுகள் அந்தப் பதவியில் இருந்தார். 2014 முதல் தீவிர அரசியலில் இருந்து ஒதுங்க ஆரம்பித்தார். அதன்பின் 2017ல் மீண்டும் நடிக்க வந்து அரசியலை விட்டு முற்றிலும் ஒதுங்கினார்.
இந்நிலையில் அரசியலை விட்டு ஒதுங்கிய பின்னும் தான் விமர்சிக்கப்பட்டு வருவதாக சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் பேசியுள்ளார்.
“அரசியலில் இருந்து முற்றிலும் விலகிவிட்டேன். ஆனால், சமூக வலைதளங்களில் சிலர் கடுமையாகவும், தவறான கருத்துக்களுடனும் விமர்சிக்கிறார்கள். ஆனால், அரசியல் விமர்சனங்களுக்கு பதிலளிக்க வேண்டிய அவசியத்தை நான் ஒரு போதும் உணரவில்லை.
நான் செய்த சேவையும், பெற்ற அன்பும் பாசமும் எனக்கு கேடயமாக உள்ளன. நான் செய்த நன்மைகளைப் பற்றி நான் பேச வேண்டியதில்லை, அவை தானாகவே பேசும். சில அரசியல் தலைவர்களும் என்னைத் தொடர்ந்து விமர்சிக்கின்றனர்.
ஒரு அரசியல் தலைவர் எனக்கு எதிராக தேவையற்ற கருத்துக்களைத் தெரிவித்திருந்தார். பின்னர் ஒரு இடத்திற்கு அவர் சென்ற போது, ஒரு பெண்மணி, அவரை உணர்ச்சி பொங்க எதிர்கொண்டு, நீங்கள் ஏன் சிரஞ்சீவியைப் பற்றித் தவறாகப் பேச வேண்டும் என்று கேள்வி எழுப்பினார்.
அந்த வீடியோவைப் பார்த்து அவரைப் பற்றி நான் விசாரித்து தெரிந்து கொண்டேன். பல ஆண்டுகளுக்கு முன்பு சிரஞ்சீவி ரத்த வங்கி மூலம் அவரது குழந்தையின் உயிர் காப்பாற்றப்பட்டதாகவும், அதனால், அவர் என்னை மிகவும் மதிக்கிறேன் என்றும் அவர் கூறிய வார்த்தைகள் என் இதயத்தைத் தொட்டன. அந்தப் பெண்மணி அப்படி கேட்ட பிறகு அந்த அரசியல் தலைவர் ஒருபோதும் என்னைப் பற்றி விமர்சிக்கவில்லை. அரசியல்வாதிகளுக்கும் இதயம் உண்டு. ஒருவேளை அவர் கோபத்தில் அப்படி பேசியிருக்கலாம். ஆனால், வீட்டிற்குச் சென்ற பிறகு அவரது மனைவி கூட இனி அப்படி பேச வேண்டாம் என்று கூறியிருக்கலாம்.
சமூக வலைத்தள விமர்சனங்களுக்கு நான் எப்போதும் பதிலளிப்பதில்லை. ஏனெனில் என் நற்செயல்களும், ரசிகர்களின் அன்பும் எனக்கு பாதுகாப்பாக உள்ளன. நான் செய்தவற்றைப் பற்றி நான் பேச வேண்டியதில்லை, அவை எனக்காகப் பேசும். அதுதான் உண்மை,” என்று பேசியுள்ளார்.
1998ம் ஆண்டு 'சிரஞ்சீவி தொண்டு அறக்கட்டளை' என்பதை ஆரம்பித்தார் சிரஞ்சீவி. ரத்தம் இல்லாமல் எந்த ஒரு உயிரும் போகக் கூடாது என்பதுதான் அந்த அறக்கட்டளையின் நோக்கம். ரத்த வங்கி, கண் வங்கி ஆகியவை அந்த அறக்கட்டளை சார்பில் நடத்தப்படுகிறது. அறக்கட்டளையின் இணைய தகவல்படி 9 லட்சம் யூனிட்டிற்கு அதிகமான ரத்தம் பெறப்பட்டுள்ளதாகவும், அதில் 79 சதவீதம் ஏழைகளுக்கு இலவசமாக வழங்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்கள். 4580 ஜோடி கண்கள் தானமாகப் பெறப்பட்டு, அதன் மூலம் பார்வையற்ற 9,060 பேர் பார்வை பெற்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்கள்.
சிரஞ்சீவியைப் போலவே நடிகர் பாலகிருஷ்ணா அவர்களது குடும்பத்திற்குச் சொந்தமான பசவதாரகம் இந்தோ அமெரிக்கன் கேன்சர் மருத்துவமனை மூலம் ஏழைகளுக்கு இலவச மருத்துவ சிகிச்சை அளித்து வருகிறார்.
இவர்களைப் போல எந்த ஒரு தமிழ் நடிகரும் மருத்துவ சேவையில் இப்படி செய்ததில்லை என்பதை இங்கு குறிப்பிட்டாக வேண்டும்.