பிளாஷ்பேக்: காட்சியும், கானமும் “நான் பாடும் பாடல்” | உழைக்கும் கரங்கள், உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன், பீஸ்ட் - ஞாயிறு திரைப்படங்கள் | சிரிப்பிற்கு தனி அடையாளம் தந்த நடிகர் மதன் பாப் காலமானார் | அதிரடி மாஸ் காட்டும் ரஜினியின் ‛கூலி' பட டிரைலர் | சூர்யாவின் 46வது படத்தில் இணைந்த பவானிஸ்ரீ | முதல் தேசிய விருது : அட்லிக்கு நன்றி தெரிவித்த ஷாருக்கான் | கிளைமேக்ஸ் மாற்றப்பட்டு ரீ-ரிலீஸ் ஆன தனுஷ் படம் : இயக்குனர் கோபம் | துள்ளுவதோ இளமை அபினய்க்கு என்னாச்சு : லிவர் ஆபரேசனுக்காக காத்திருக்கிறார்? | கூலிக்கு ஏ சான்றிதழ், 2:48 நிமிடம் நீளம் : இதெல்லாம் பட வசூலை பாதிக்குமா? | கொலை செய்யப்பட்ட தமிழ் ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த தேசிய விருது |
ஒரு சினிமாவின் வெற்றி தோல்வி என்பதை தீர்மானிப்பதில் பெரும் பங்கு வகிப்பது கதை என்றால், அந்தக் கதையையே தூக்கி நிறுத்தக் கூடிய இசைக்கும் பெரும் பங்கு உண்டு என்பது சினிமாவை நேசிக்கும் ஒவ்வொருவரும் அறிந்ததே. பார்வையாளர்களின் மனங்களை ஈர்க்காத கதையம்சம் கொண்ட சில திரைப்படங்கள் கூட, அதன் வலுவான பின்னணி இசையாலும், இனிமையான பாடல்களினாலும் பெரும் வெற்றியைப் பெற்றிருக்கின்றன. 1980களில் 'இசைஞானி' இளையராஜாவின் இசைக்காகவே ஓடிய திரைப்படங்கள் கூட ஏராளம் உண்டு, அந்த அளவு தமிழ் திரையிசை நம்மை ஆக்கிரமித்திருக்கின்றது என்பது யாரும் மறுக்க இயலாத உண்மை.
அப்படிப்பட்ட தமிழ் திரையிசைப் பாடல்களை வழங்கும் இசை ஜாம்பவான்களோ அல்லது கவிஞர் பெருமக்களோ, தங்களது சொந்த வாழ்வில் சந்தித்திருந்த அனுபவங்களையே, அந்தப் படத்தின் பாடல் காட்சியோடு தொடர்புபடுத்தி, சுவைபட வழங்கி, அவற்றைப் பெரும் வெற்றிப் பாடல்களாக்கித் தந்திருப்பதையும் நாம் அறிவோம். அப்படி ஒரு இசைக் கலைஞரின் வாழ்வில் நடந்த ஒரு சம்பவத்தை மனதிற் கொண்டு, அதை தனது படத்தில் இடம் பெற்ற ஒரு பாடல் காட்சியோடு தொடர்புடையதாக்கி, 'இசைஞானி' இளையராஜாவின் இசைவார்ப்பில் அந்த சூழலுக்கானப் பாடலைக் கேட்டுப் பெற்று, பெரும் வெற்றியை சுவைத்தவர்தான் இயக்குநர் ஆர் சுந்தர்ராஜன்.
1983ம் ஆண்டு கோவை தம்பியின் “மதர்லேண்ட் பிக்சர்ஸ்” சார்பில், சிவக்குமார், அம்பிகா, மோகன் ஆகியோர் நடிக்க, இயக்குநர் ஆர் சுந்தர்ராஜன் இயக்கிய திரைப்படம்தான் “நான் பாடும் பாடல்”. 'இசைஞானி' இளையராஜாவின் இசையில் அத்தனைப் பாடல்களும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்திருந்த இத்திரைப்படத்தில் இடம்பெற்ற ஒரு பாடல்தான் எஸ் ஜானகியின் குரலில் வெளிவந்த “பாடவா உன் பாடலை” என்ற பாடல். ஒரு மிகச்சிறந்த இசைக் கலைஞரின் வாழ்வில் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் தாக்கத்தில்தான் இந்தப் பாடலுக்கான காட்சியையே வடிவமைத்திருந்ததாக படத்தின் இயக்குநரான ஆர் சுந்தர்ராஜனே ஒரு நேர்காணலில் குறிப்பிட்டிருக்கின்றார்.
1980ம் ஆண்டு நடிகரும், தயாரிப்பாளருமான கே பாலாஜியின் தயாரிப்பில் வெளிவந்த “சுஜாதா” என்ற திரைப்படத்தில் இடம் பெற்ற “நீ வருவாய் என நான் இருந்தேன்” என்ற ஒரு அற்புதமான பாடலைப் பாடிய பின்னணிப் பாடகி கல்யாணி மேனனின் கணவர், இந்திய கடற்படையின் அதிகாரியாக பணியாற்றி, இளம் வயதிலேயே மரணித்தவர்.
சிறு வயதிலேயே கணவனை இழந்த மறைந்த பின்னணிப் பாடகி கல்யாணி மேனன் அவர்களின் வாழ்வில் நிகழ்ந்த இந்த நிகழ்வினை மனதிற் கொண்டுதான், தனது “நான் பாடும் பாடல்” திரைப்படத்தில் நடிகை அம்பிகா ரிக்கார்டிங் தியேட்டரில் பாடுவதுபோல் வரும் “பாடவா உன் பாடலை” என்ற பாடல் காட்சியில், அவரது கணவராக நடித்திருக்கும் நடிகர் மோகன், மனைவியின் பாடல் பதிவினை பார்ப்பதற்காக காரில் வேகமாக வருவது போலவும், விபத்தில் சிக்கி உயிரிழந்து விடுவதுபோலவும் காட்சிப்படுத்தியதாக அவரே ஒரு நேர்காணலில் கூறியிருக்கின்றார். கற்பனையில்; தோன்றும் காட்சியை விட, காதால் கேட்டு, கண்களால் பார்த்துணர்ந்த ஒரு உண்மை நிகழ்வினை காட்சி வடிவாக்கித் தரும்போது, அது நமக்குள் ஏற்படுத்தும் தாக்கம் என்பது, காலம் கடந்தும் நினைவு கூறத் தக்க ஒன்றாக மாறிவிடும் என்பதற்கு இந்தப் “பாடவா உன் பாடலை” என்ற பாடல் ஒரு சான்று என்றால் அது மிகையன்று.