பாலிவுட்டில் தடம் பதிப்பாரா ஜூனியர் என்டிஆர் | மோசடி வழக்கை சட்டப்படி சந்திப்பேன் : சாம் சி.எஸ் | பூமிகா ஆசை நிறைவேறுமா? | ஹீரோ இல்லாமல் நடந்த 'ஹரிஹர வீரமல்லு' பட விழா | ஜெயிலர் 2வில் மோகன்லால் இருக்கிறாரா? | விஜய் தரப்பின் பிரஷரால் வேகம் எடுக்கும் 'ஜனநாயகன்' | எனக்குள் அந்த தீ எரியும் வரை சினிமாவில் நடித்துக்கொண்டே இருப்பேன்! - கமல்ஹாசன் சொன்ன பதில் | தயாரிப்பாளர் ராஜேஷ் நடிக்கும் படத்தின் டைட்டில் 'அங்கீகாரம்'! பர்ஸ்ட் லுக் வெளியானது!! | 50வது படத்தில் வித்தியாசமான திருநங்கை வேடம்! - சிம்பு வெளியிட்ட தகவல் | கேன்ஸில் பிரதிபலித்த ‛சிந்தூர்' : பார்வையாளர்களை கவர்ந்த ஐஸ்வர்யா ராய், அதிதி ராவ் |
தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்திற்கும், பெப்சி அமைப்புக்கும் இடையில் மோதல் உச்சகட்டத்தை அடைந்துள்ள நிலையில் பாரதிராஜா தலைமையிலான நடப்பு தயாரிப்பாளர் சங்கம், ஒருங்கிணைந்து செயல்படுவோம் வாருங்கள் என்று தயாரிப்பாளர் சங்கத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.
இது தொடர்பாக தயாரிப்பாளர் சங்கத்திற்கு, நடப்பு தயாரிப்பாளர் சங்கம் எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது: தமிழ் சினிமா கடந்த மூன்று மாதங்களில் 72 திரைப்படங்களை வெளியிட்டுள்ளது. அதில் 5 படங்கள் தவிர மற்ற அனைத்தும் தோல்வி படங்களே. பல திரைப்பட தயாரிப்பாளர்கள் அவர்களின் மொத்த முதலீட்டையும் இழந்து, அவர்களுக்கு எவரின் ஆதரவும் கிடைக்காமல் தவித்து வருகிறார்கள். நமது தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்களை காக்க, நமது இரு சங்கங்களும் ஒருங்கிணைந்து செயல்படுவது இந்த கடுமையான சூழ்நிலையில் அவசியம்.
தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கத்தை பொறுத்தவரை, நாங்கள் அனைவரும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்துடன் சேர்ந்து பல முயற்சிகளை எடுக்க வேண்டும் என்று தான் கருதுகிறோமே தவிர, தனியாக நாங்கள் மட்டுமே அத்தகைய முயற்சிகள் எடுக்க வேண்டும் என்று எப்போதும் கருதியதில்லை.
கீழ்கண்ட முக்கியமான விஷயங்களில் நம் இரு சங்கங்களும் இணைந்து செயல்படுவது மிகவும் அவசியம்.
1. தமிழ் சினிமா மறுசீரமைப்பு திட்டங்களை முடிவு செய்து அனைத்து சங்கங்களுடன் (நடிகர் சங்கம் உட்பட) இணைந்து அமுல்படுத்தல் - அதன் மூலம் தயாரிப்பளர்களின் செலவுகளை கட்டுப்படுத்துதல்.
2. மலையாள சினிமா துறை போல விபிஎப் கட்டணங்களை கணிசமாக குறைக்க உடனடி முயற்சிகள் எடுப்பது.
3. திரைப்பட வெளியீட்டில் ஒழுங்குமுறையை கொண்டுவந்து, சிறு பட்ஜெட் படங்களுக்கும் சரியான வெளியீடும், வருமானமும் கிடைக்க வழி செய்தல்.
4. பைரஸி இன்றைக்கு மிகப்பெரிய அளவில் தமிழ் சினிமாவை அழித்து வருகிறது. அதை கட்டுக்குள் கொண்டு வர முயற்சிகள்.
5. நமது தயாரிப்பாளர்களின் திரைப்படங்களின் டிஜிட்டல், ஓடிடி வியாபாரங்களில் நமது சங்கங்கள் உதவியாய் இருக்க தேவைப்படும் முயற்சிகள்.
6. பெப்சியுடன் இணைந்து திரைப்பட தயாரிப்பில் செலவுகளை குறைக்கும் வழிமுறைகளை உண்டாக்குதல்.
சினிமாத்துறை தற்போது உள்ள மோசமான சூழ்நிலையில், பெரிய முதலீட்டு படங்கள் மட்டுமல்லாது, சிறு முதலீட்டுப் படங்களும் பயனடையும் வகையில் நாம் ஒருங்கிணைந்து செயல்பட்டு, பெப்சியுடன் இணைந்து, ஒரு கூட்டு நடவடிக்கை குழுவை அமைத்து அனைத்து சங்கங்களின் ஒத்துழைப்புடன், தமிழ் சினிமாவில் தற்போது தேவைப்படும் மாற்றங்களை கொண்டு வருவது மிகவும் அவசியம் என்று கருதுகிறோம்.
தமிழ் சினிமாவின் வளர்ச்சிக்கான முக்கிய வழிகளை நமது இரு சங்கங்களும் உருவாக்க வேண்டிய இந்த நேரத்தில், இன்னொமொரு தொழிலாளர் சம்மேளனத்தை உருவாக்க தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் முயற்சிப்பது எந்த வகையிலும், தமிழ் சினிமாவுக்கு பயன் தராது. அதற்கான தேவையும் இல்லை. அது நமது செயல்பாடுகளை திசை திருப்பி விடும்.
நம் இரு சங்கங்களும் பெப்சியுடன் இணைந்து, தேவைப்படும் மாற்றங்களை கொண்டு வருவதே, விரைவான மாற்றங்களுக்கு வழி என்று நாங்கள் உறுதியாக கருதுகிறோம். இதை செயல்படுத்த, தங்களுக்கு வேறு ஏதேனும் பிரச்சனைகள் இருந்தால், அதை பேசி தீர்க்கவும் நாங்கள் தயாராக இருக்கிறோம். தயாரிப்பாளர் சங்கத்துடன் இணைந்து செயல்பட, நடப்பு தயாரிப்பாளர் சங்கம் தயாராக உள்ளது என்பதை தங்களுக்கு தெரிவித்துக் கொள்கிறோம்.
தமிழ் சினிமாவின் நலனுக்காக, எங்களின் ஆலோசனைகளை மனதில் கொண்டு, நல்ல முடிவெடுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.