டாக்சிக் படத்தில் இணைந்த ருக்மணி வசந்த் | அர்ஜூன் தாஸிற்கு ஜோடியான ஐஸ்வர்ய லட்சுமி | வடிவேலு - பஹத்பாசிலின் ‛மாரீசன்' ஆகஸ்ட் 22ல் ஓடிடியில் வெளியாகிறது! | இது ஆரம்பம்தான்: கலக்கலான புகைப்படங்களை வெளியிட்ட ஆர்த்தி ரவி! | எனக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது! ஓப்பனாக பேசிய சம்யுக்தா | என்னது, தீபாவளிக்கு இந்த படங்கள் மட்டுமே ரிலீஸா? | ஆக் ஷனுக்கு மாறும் ஹீரோயின்கள் | இந்த வாரம் இரண்டே படம் ரிலீஸ்… | மகா அவதார் நரசிம்மா: பட்ஜெட் 15 கோடி, வசூல் 250 கோடி | சினிமாவில் இருப்பவர்களே சினிமாவை அழிக்கின்றனர்: இயக்குனர் பேரரசு வேதனை |
உச்ச ஸ்தாயியில் அநாயசமாக பாடும் வல்லமை பெற்ற பாடகராகவும், நடிகராகவும் அறியப்பட்டு, புகழ் கொடி நாட்டிய நடிகர்தான் டி ஆர் மகாலிங்கம். 1940களில் இவரது நடிப்பில் வெளிவந்த “ஸ்ரீவள்ளி”, “நாம் இருவர்”, “ஞான சௌந்தரி”, “வேதாள உலகம்” என பல படங்கள் வெளிவந்து வெற்றி வாகை சூடிய நிலையில், தானும் சொந்தப் படம் எடுக்க வேண்டும் என்ற ஆசை உருவானது டி ஆர் மகாலிங்கத்திற்கு. அதன்படி “ஸ்ரீ சுகுமார் புரொடக்ஷன்ஸ்” என்ற பெயரில் படக் கம்பெனி ஒன்றையும் ஆரம்பித்தார்.
1947ல் ஏ வி எம் தயாரிப்பில் வெளிவந்து வெற்றி பெற்ற “நாம் இருவர்” என்ற திரைப்படத்தில் அவர் ஏற்று நடித்திருந்த கதாபாத்திரத்தின் பெயர் 'சுகுமார்'. அப்போது அவருக்குப் பிறந்திருந்த அவரது ஆசை மகனுக்கும் 'சுகுமார்' என்ற பெயரையே நாமகரணமாக்கியிருந்தார். 'சுகுமார்' ராசியான பெயர் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை வேரூண்றியிருந்தது டி ஆர் மகாலிங்கத்துக்கு.
1950ஆம் ஆண்டு தனது “ஸ்ரீ சுகுமார் புரொடக்ஷன்ஸ்” சார்பில் அவர் தயாரித்து, நடித்து வெளியிட்ட திரைப்படம்தான் “மச்சரேகை”. படத்தின் நாயகியாக முதலில் நடிகை அஞ்சலிதேவியை ஒப்பந்தம் செய்து, அவரை வைத்து சில அடிகள் எடுத்திருந்த நிலையில் அவரை ரத்து செய்துவிட்டு, பின் நடிகை எஸ் வரலக்ஷ்மியை படத்தின் நாயகியாக்கினார். நாட்டைக் கைப்பற்றிக் கொண்ட ஒரு சர்வாதிகாரியின் ஆட்சிக் கொடுமையைத் தாங்காமல் மக்கள் கிளர்ச்சி செய்ய, அந்தக் கிளர்ச்சிக்கு தலைமை தாங்கும் 'மச்சராஜா' என்ற நாயகன் கதாபாத்திரத்திலும், சர்வாதிகாரியான வில்லன் கதாபாத்திரத்திலும் டி ஆர் மகாலிங்கமே நடித்திருந்தார்.
நாயகி எஸ் வரலக்ஷ்மியின் சிறுவயது பாத்திரத்திற்கு அவரது தங்கை விமலாவும், சிறு வயது மச்சராஜா கதாபாத்திரத்திற்கு அன்றைய குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான விஜயநிர்மலாவும் நடித்திருந்தனர். இந்த விஜயநிர்மலாதான் பின்னாளில் “எங்க வீட்டுப் பெண்” என்ற திரைப்படத்தில் நாயகியாக உயர்வு பெற்று, பின் “சித்தி”, “பந்தயம்”, “நீலகிரி எக்ஸ்பிரஸ்”, “பணமா பாசமா”, “சோப்பு சீப்பு கண்ணாடி”, “உயிரா மானமா”, “அன்பளிப்பு”, “என் அண்ணன்”, “ஞான ஒளி” என எண்ணற்ற தமிழ் திரைப்படங்களிலும் தெலுங்கு மற்றும் மலையாள மொழிகளிலும் நடித்து பிரபலமானதோடு, 44 திரைப்படங்களையும் இயக்கி, அதிக திரைப்படங்களை இயக்கிய பெண் இயக்குநர் என்று கின்னஸ் உலக சாதனை புத்தகத்திலும் இடம் பெற்றிருந்தார்.
“மச்சரேகை” திரைப்படம் டி ஆர் மகாலிங்கம் எதிர்பார்த்த அளவு பெரிய வெற்றியை ஈட்டித் தரவில்லை. இருந்தாலும் 'சுகுமார்' என்ற பெயர் ராசியில் டி ஆர் மகாலிங்கத்திற்கு இருந்த நம்பிக்கை மட்டும் அவர் மனதை விட்டு அகலவேயில்லை. தொடர்ந்து “மோகன சுந்தரம்”, “சின்னதுரை”, “விளையாட்டு பொம்மை” என தனது “ஸ்ரீ சுகுமார் புரொடக்ஷன்ஸ்” சார்பில் படங்களை தயாரித்து வெளியிட்டுக் கொண்டேதான் இருந்தும் வந்தார்.