மாரீசன் படம் ஜூலை மாதம் வெளியாகிறது | ஊட்டி பூங்காக்களில் சினிமா படப்பிடிப்புக்கு தடை | ஓடிடியில் ஜொலிக்குமா யோகி பாபுவின் 'லெக் பீஸ்' | இளம் பெண் பலாத்காரம்: பாலிவுட் இயக்குனர் கைது | பிளாஷ்பேக்: ஒரே படத்தில் கடவுளாக நடித்த சிவாஜி, ரஜினி, கமல் | அதிரடி காட்டும் விமலின் ஓம் காளி ஜெய் காளி | பிளாஷ்பேக்: எம்ஜிஆர் நடிக்க, கருணாநிதி வசனம் எழுதிய புராண படம் | வீர தீர சூரன் 5 நாள் வசூல் முழு விவரம் | சர்ச்சைகளுக்கிடையில் 200 கோடி வசூல் கடந்த 'எல் 2 எம்புரான்' | பிளாஷ்பேக்: “படித்த பெண்” திரைப்படப் பாடலும், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரமும் |
நட்பு மற்றும் குடும்ப உறவுகளின் மேண்மை, உணர்வு ஆகியவற்றை பிரதிபலிக்கச் செய்யும் வகையில் குடும்பப் பாங்கான திரைப்படங்களை மட்டுமே தந்து, தனக்கென ஒரு தனி முத்திரை பதித்து, தமிழ் திரையுலகில் கோலோச்சி நின்ற இயக்குநர்தான் இயக்குநர் விக்ரமன். 1960களில் எப்படி ஒரு இயக்குநர் திலகம் கே எஸ் கோபாலகிருஷ்ணனோ, அதுபோல் 1990களில் அவருடைய இடத்தை நிறைவு செய்யும் வண்ணம் தமிழ் திரையுலகில் தடம் பதித்து, குடும்பங்கள் கொண்டாடி மகிழ்ந்த பல வெற்றித் திரைப்படங்களைத் தந்தவர் இவர்.
1989ல் இயக்குநர் ஆர் பார்த்திபனின் “புதிய பாதை” திரைபடத்தில் அவருடைய உதவியாளராக பணிபுரிந்து, 1990ல் தயாரிப்பாளர் ஆர் பி சௌத்ரியின் தயாரிப்பில் “புது வசந்தம்” என்ற வெற்றித் திரைப்படத்தை இயக்கியதன் மூலம் ஒரு இயக்குநராக அறிமுகமானார். நடிகர்கள் முரளி, கார்த்திக், சரத்குமார், ஆர் மாதவன், சூர்யா என அனைத்து முன்னணி நாயகர்களையும் தனது இயக்கத்தில் நடிக்க வைத்து எண்ணற்ற வெற்றித் திரைப்படங்களைத் தந்த இவரது படைப்புகளில் ஒன்றுதான் 2002ஆம் ஆண்டு வெளிவந்த வெற்றித் திரைப்படமான “உன்னை நினைத்து”.
1990களில் அறிமுகமாகி ஒரு அடிதடி நாயகனாகவே பார்க்கப்பட்டு வந்த நடிகர் விஜய்யை, தனது “பூவே உனக்காக” திரைப்படத்தின் மூலம், ஒரு தென்றல் போன்ற, குளிர்ந்த நீரோடை போன்ற மென்மையான நாயகன் கதாபாத்திரத்தில் நடிக்க வைத்து, நடிகர் விஜய்யின் வேறொரு பரிமாணத்தைத் தமிழ் திரையுலகிற்கு காட்டி பிரமிக்கச் செய்திருந்தார் இயக்குநர் விக்ரமன். 2002ஆம் ஆண்டு இவரது இயக்கத்தில் வெளிவந்த “உன்னை நினைத்து” திரைப்படத்தின் இவரது நாயகன் தேர்வாக இருந்தவரும் நடிகர் விஜய்தான். அவரை வைத்து சில நாட்கள் படமாக்கப்பட்ட நிலையில், உருவாக்கத்தின் போது ஏற்பட்ட சில வேறுபாடுகள் காரணமாக அப்படத்திலிருந்து விலகும் நிலைக்கு உள்ளானார் நடிகர் விஜய்.
அதன் பிறகு இயக்குநர் விக்ரமனின் உடனடி தேர்வாக பார்க்கப்பட்டவர் நடிகர் பிரஷாந்த். அதுவும் முடியாமல் போக, நடிகர் சூர்யா “உன்னை நினைத்து” திரைப்படத்தின் நாயகனாக ஒப்பந்தம் செய்யப்பட்டு நடித்திருந்தார். மலேஷியா, தாய்லாந்து, ஸ்ரீலங்கா போன்ற அயல்நாடுகளுக்குச் சென்று படப்பிடிப்பு நடத்திய இயக்குநர் விக்ரமனின் முதல் திரைப்படமாகவும் இத்திரைப்படம் இருந்தது. 2002 மே 10 அன்று வெளிவந்த இத்திரைப்படம் வணிக ரீதியாக மிகப் பெரிய வெற்றியை பெற்றுத் தந்ததோடு, நடிகர் சூர்யாவின் ஆரம்ப கால வெற்றித் திரைப்படங்களில் ஒன்றாகவும் இருந்து, அவருடைய வெள்ளித்திரைப் பயணத்திற்கு மேலும் வலு சேர்த்த திரைப்படமாகவும் பார்க்கப்பட்டது.