சித்தார்த் நடிப்பில் வெளியான சித்தா படத்தை இயக்கியவர் எஸ்யு அருண்குமார். பண்ணையாரும் பத்மினியும் என்கிற கிராமத்து படத்தை கொடுத்த இவர் அடுத்ததாக சேதுபதி ஐபிஎஸ் என்கிற அதிரடி ஆக்ஷன் படத்தையும் கொடுத்தார். அதனால் இவர் சித்தா போன்ற படத்தை இயக்கிவிட்டு தற்போது வீர தீர சூரன் என்கிற ஆக்ஷன் படத்தை இயக்கியிருப்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை. அதே சமயம் சில வருடங்களாக விக்ரமுக்கு வெளியான படங்கள் எதுவும் பெரிய அளவில் கை கொடுக்கவில்லை. தங்கலான் படம் கூட விக்ரமின் நடிப்பிற்காக பேசப்பட்டதே தவிர அவருக்கு வெற்றிப்படமாக அமையவில்லை.
ஆனால் இந்த வீரதீர சூரன் திரைப்படம் குறித்து மிகுந்த எதிர்பார்ப்பு திரையுலகிலும் ரசிகர்களிடமும் இருந்து வருகிறது. சமீபத்தில் வெளியான இந்த படத்தின் டிரைலர் அந்த எதிர்பார்ப்பை இன்னும் அதிகப்படுத்தி உள்ளது. இந்த நிலையில் இந்த படம் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்த கைதி படத்தின் பாணியில் உருவாகியுள்ளதாக ஒரு தகவல் தெரிய வந்துள்ளது.
கைதி படம் ஒரே நாள் நள்ளிரவில் நடக்கும் அதிரடி ஆக்ஷன் கதையாக உருவாகி இருந்தது. அதேபோல தான் வீரதீர சூரன் படத்தின் கதையும் ஒரே நாள் இரவில் நடப்பது போன்று தான் உருவாக்கப்பட்டுள்ளதாம்.. படத்தின் பெரும்பாலான நாட்கள் படப்பிடிப்பு இரவிலேயே தான் நடந்துள்ளது. இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள மலையாள நடிகர் சுராஜ் வெஞ்சாரமூடு சமீபத்திய இந்த படத்தின் புரமோஷன் நிகழ்வில் பேசும்போது இந்த படத்தின் கதை ஒரே நாள் இரவில் நடக்கும் விதமாக உருவாகியுள்ளது. அது மட்டுமல்ல படம் பார்க்க வருபவர்கள் 10 நிமிடம் முன்கூட்டியே வந்து விடுங்கள். காரணம் படத்தின் முதல் ஷாட்டிலிருந்து கதை துவங்கி விடுகிறது. இது தியேட்டரில் பார்த்து ரசிக்க வேண்டிய ஒரு படம் என்று கூறியுள்ளது இன்னும் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி உள்ளது.