'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
நிஜ வாழ்வில் நிகழ்த்த இயலாத, காணமுடியாத சாகஸங்களைச் செய்யும் மாவீரனாக எம் ஜி ஆரை திரையில் கண்டுகளித்து, மெய்சிலிர்த்திருந்த தமிழ் மக்கள், தாங்கள் கர்ணபரம்பரையாக புராண, இதிகாச கதைகளில் கேட்டு பிரமித்துப் போயிருந்த ராமன், பீமன், அர்ஜுனன் ஆகியோருக்கு நிகரான வீரன் என எம் ஜி ஆரை திரையில் தரிசிக்கத் தொடங்கவும் செய்திருந்தனர் கிராமத்து வெகுஜன மக்கள்.
அனுபவம் என்ற ஆசானின் கரம் பற்றி, அடி ஒவ்வொன்றையும் கவனத்துடன் எடுத்து வைத்து கலையுலகில் பயணிக்கத் தொடங்கியிருந்த எம் ஜி ஆர், மக்களின் தேவை ஒரு மாவீரன் என்பதை நன்கு புரிந்து கொண்டு, தனது படங்களுக்கு மக்கள் அளித்து வரும் ஆதரவையும், வரவேற்பினையும் கருத்திற் கொண்டு, தனக்கென ஒரு தனி பாணியை உருவாக்கி, மெள்ள, மெள்ள அதனைக் கட்டமைக்கவும் தொடங்கியிருந்தார்.
அதற்கு முழு வடிவம் கொடுத்து, தனது சொந்தப் படமான “நாடோடி மன்னன்” திரைப்படத்தை தயாரித்து, அதனை உறுதியும் செய்திருந்தார். தொடர்ந்து அவரது படங்களுக்கு கிடைத்த அமோக வரவேற்பு, அபார வசூல், அவரை ஒப்பந்தம் செய்ய வரும் தயாரிப்பாளர்களிடம் கதை என்ன? என்று கேட்க ஆரம்பிக்க வைத்தது. கதையை கேட்டவுடனே அந்தப் படம் வெற்றி பெறுமா? பெறாதா? என்று கணித்துச் சொல்கின்ற அளவிற்கு ஆற்றலும் அவரிடம் வளர்ந்திருந்தது. அதற்கு நல்லதோர் உதாரணமாக வந்த திரைப்படம்தான் 1962ம் ஆண்டு டி ஆர் ராமண்ணா இயக்கத்தில் எம் ஜி ஆர் நடித்து வெளிவந்த “பாசம்” திரைப்படம்.
படத்தின் கதையை டி ஆர் ராமண்ணா எம் ஜி ஆரிடம் சொல்ல, கதையின் நாயகன் இறுதியில் துன்பியல் முடிவிற்கு ஆளாகின்றான். இதனை எனது ரசிகர்கள் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள் என எம் ஜி ஆர் மறுத்துக் கூற, எம் ஜி ஆரிடம் விவாதம் செய்ய தொடங்கினார் இயக்குநர் டி ஆர் ராமண்ணா. சரி அனுபவத்தில் அறிந்து கொள்ளட்டும் என எம் ஜி ஆரும் விட்டு விட, படமும் வெளியானது. கதாபாத்திரத்தின் தன்மை அறிந்து, உணர்ந்து, சிரமப்பட்டு எம் ஜி ஆர் தனது நடிப்பை வெளிப்படுத்தியிருந்தும் படம் படுதோல்வியை சந்தித்தது.
இந்த நிகழ்ச்சிக்குப் பின் தமிழ் திரையுலகில் எம் ஜி ஆரின் தீர்ப்புக்கு எதிர் பேச்சே இல்லாமல் போனதுமட்டுமின்றி, கதை, காட்சி, வசனம், பாடல், இசை, கேமரா கோணம் என அனைத்தையும் எவ்வாறு கையாள வேண்டும் என்பது கூட எம் ஜி ஆரின் கைவசமானது.