பிளாஷ்பேக் : மூன்று முதல்வர்களை இயக்கியவர் : கே.சங்கர் நூற்றாண்டு நினைவு | அடுத்த வாரம் 'கருப்பு' வெளியீட்டுத் தேதி அறிவிப்பு? | கதாநாயகியும் பாடலும் இல்லாத படத்தில் ஜெய் | 'ஸ்லம்டாக் மில்லியனர்' மூலம் இப்போதும் ராயல்டி பெறும் அனில் கபூர் | ஐட்டம் டான்ஸ் ஆடி இருப்பது நிகிலா விமல் அல்ல வேதிகா ; உடைத்த சஸ்பென்ஸ் | சிம்பு படத்தில் நெல்சனுக்கு பதிலாக அஸ்வத் மாரிமுத்து | 69 வயதில் சூப்பர் ஹீரோவாக நடிக்கும் ஜாக்கி ஷெராப் | 18 ஆண்டுகளுக்குபின் “தாம் தூம்” ஏப்ரல் 10ம் தேதி ரீ-ரிலீஸ் | 'காலா' படத்தில் நடித்ததற்காக ஹிந்தி நடிகரை கடிந்துகொண்ட நானா படேகர் | சினிமா அற்புதமான தொழில்: விஜய்சேதுபதி அனுபவ பேச்சு |

எம் ஜி ஆர் நடித்து, வெளிவந்த அவரது 136 திரைப்படங்களில் ஒரு புராண இதிகாச கதையில் அவர் நடித்து, இறுதியில் அவரது கதாபாத்திரம் இறப்பது போல் காட்சிப்படுத்தப்பட்டு, அதை அவரது ரசிகர்களும் ஏற்றுக் கொள்ளத்தக்க படமாக்கப்பட்டு, ஒரு பெரும் வெற்றியைப் பதிவு செய்த திரைக்காவியமாக வெளிவந்து, ரசிகர்களால் இன்றும் பெரிய அளவில் ரசிக்கப்பட்டு வரும் ஒரு திரைப்படம்தான் “மதுரை வீரன்”.
தமிழ் சினிமாவின் முதல் பேசும்பட நாயகி என பெயர் பெற்ற டி பி ராஜலக்ஷ்மி நடித்து, இயக்கி, 1939ல் வெளிவந்த “மதுரை வீரன்” திரைப்படத்தின் கதையை மீண்டும் “கிருஷ்ணா பிக்சர்ஸ்” சார்பில் தயாரித்து, 1956ம் ஆண்டு தமிழ் புத்தாண்டு வெளியீடாக வெளியிட்டனர். இந்த “மதுரை வீரன்” திரைப்படத்தில் மதுரை வீரனாக மக்கள் திலகம் எம் ஜி ஆரும், பொம்மியாக பி பானுமதியும், வெள்ளையம்மாவாக நடிகை பத்மினியும் நடித்திருந்தனர்.
எம் ஜி ஆரும் நடிகை பத்மினியும் இணைந்து நடித்த முதல் திரைப்படமாக வெளிவந்த இத்திரைப்படத்தின் திரைக்கதை வசனத்தை முதன் முதலாக வடிவமைத்துத் தந்திருந்தவர் கவிஞர் கண்ணதாசன். மேலும் எம் ஜி ஆர், நடிகை பத்மினி ஆகியோரின் திரைப்பயணத்தில் ஒரு மைல்கல் திரைப்படமாக அமைந்த இந்த “மதுரை வீரன்” திரைப்படம், 36 திரையரங்குகளில் 100 நாள்களுக்கும் மேல் ஓடியது. மதுரை சிந்தாமணி திரையரங்கில் 200 நாள்களையும் கடந்து ஓடி வெள்ளி விழா கண்டது.
இத்திரைப்படத்தின் வெற்றி விழா மதுரையில் நடந்த போது, மதுரை முத்து இவ்விழாவில் எம் ஜி ஆருக்கு தங்கவாள் ஒன்றை பரிசளித்துப் பெருமைப்படுத்தினார். பின்னாளில் இந்திய-சீன யுத்தத்தின் போது, அந்த தங்கவாளை ஏலம் விட்டு, அதன் மூலம் பெறப்பட்ட பணத்தை, யுத்த நிவாரண நிதிக்காக எம் ஜி ஆர் வழங்கினார் என்பது குறிப்பிடத் தகுந்த ஒன்று.
படத்தின் தயாரிப்பு நிறுவனமான “கிருஷ்ணா பிக்சர்ஸ்” அதுவரை காணாத ஒரு பெரும் லாபத்தை இப்படத்தின் மூலம் ஈட்டியது. திரையில் மதுரை வீரனாக எம் ஜி ஆரைக் கண்ட ஏழை, எளிய மக்கள் மெய்சிலிர்த்துப் போனதோடு, படத்தின் இறுதிக் காட்சியில் மதுரை வீரன், தனது மனைவியரான பொம்மி மற்றும் வெள்ளையம்மா ஆகியோரோடு மரணித்து சொர்க்கலோகம் செல்வது போன்ற காட்சியைக் கண்டு பரவசமடைந்தனர். இப்படி வரலாற்று சிறப்பு மிக்க, எளிய மக்களின் காவல் தெய்வமாக வணங்கப்பட்டு வரும் “மதுரை வீராசாமி”யாக நடித்திருந்த மக்கள் திலகம் எம் ஜி ஆரின் திரை வரிசையில், இத்திரைப்படம் ஒரு போற்றுதலுக்குரிய அந்தஸ்தைப் பெற்ற காவியப் படைப்பாக இன்றும் ரசிகர்களின் மனங்களில் நிலைத்து நிற்கின்றது என்றால் அது மிகையன்று.