கடந்த சில வருடங்களுக்கு முன்பு விஜய் சேதுபதி, திரிஷா நடிப்பில் வெளியான '96' திரைப்படம் ஒரு மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது. குறிப்பாக இளைஞர்கள் கொண்டாடும் ஒரு பீல் குட் படமாக இது மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. 90களில் நடக்கும் ஒரு காதல் கதையாக இந்த படத்தை உருவாக்கி இருந்தார் இயக்குனர் பிரேம்குமார். இந்த படம் அவருக்கு மிகப்பெரிய பெயரையும் பெற்றுத் தந்தது.
இதனைத் தொடர்ந்து கார்த்தி, அரவிந்த்சாமி நடிப்பில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு 'மெய்யழகன்' என்கிற படத்தையும் இயக்கி வெளியிட்டார் பிரேம்குமார். இந்த நிலையில் தனது அடுத்த படத்திற்கான வேலைகளில் இருக்கும் பிரேம்குமார் சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசும்போது, மலையாள திரைப்படங்கள் மீதான தனது ஆர்வம் குறித்து பகிர்ந்து கொண்டார்.
“நான் மோகன்லால், மம்முட்டி ஆகியோரின் படங்களை பார்த்து தான் வளர்ந்தேன். அவர்களுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் மற்றும் பஹத் பாசில், துல்கர் சல்மான் போன்ற இப்போதைய தலைமுறை நடிகர்களுடனும் பணியாற்ற வேண்டும் என விரும்புகிறேன். ஒருவேளை 90களின் காலகட்டத்தில் நான் இருந்து இதே 96 திரைப்படத்தை எடுத்திருந்தால் நிச்சயம் அதில் மோகன்லால், ஷோபனா ஜோடியை தான் நடிக்க வைத்திருப்பேன். எப்போதுமே அவர்கள் மிகச் சிறந்த ஜோடி” என்று கூறியுள்ளார்.