'சேம் சேஞ்சர்' சென்னை விழாவில் விஜய் கலந்து கொள்வாரா? | அஜித்தின் விடாமுயற்சி எப்போது ரிலீஸ்? | ''15 வருட காதல்'': ரகசியம் பகிர்ந்த கீர்த்தி சுரேஷ் | சத்தமின்றி திருமணம் செய்த சாக்ஷி அகர்வால் | சசிகுமார் - சிம்ரனின் ‛டூரிஸ்ட் பேமிலி' படப்பிடிப்பு முடிவடைந்தது | நேரம் சோதிக்கிறது… : வருத்தத்தில் சிலம்பரசன் | 5 வருடங்களுக்கு பிறகு கதையின் நாயகனாக ஷாம் | விடாமுயற்சி - டிரைலரை வெளியிட்டு ரசிகர்களை அமைதிப்படுத்த முயற்சி | விவேக் பிரசன்னா நாயகனாக நடிக்கும் 'ட்ராமா' | பிளாஷ்பேக் : ஒலிம்பிக்கில் ஒலித்த இளையராஜா பாடல் |
2024ம் ஆண்டு தமிழ் சினிமா ஒரு பெரும் சாதனையைப் படைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. பல முன்னணி நடிகர்களின் படங்கள் இந்த ஆண்டில் வெளிவந்தது. ஆனால், எதிர்பார்ப்புகள் அனைத்துமே ஏமாற்றத்தில் தான் முடிவுக்கு வந்தன. ஒரு படம் கூட 500 கோடி ரூபாய் வசூலைத் தாண்டவில்லை. ஓரிரு படங்களைத் தவிர அதிக வசூலைப் பெற்ற படங்கள் கூட லாபத்தைக் கொடுக்கவில்லை என்பதுதான் உண்மை. இந்த ஆண்டு அஜித், சிம்பு உள்ளிட்ட ஒரு சில முன்னணி நடிகர்களின் படங்கள் வெளியாகவில்லை. ஆனால், அடுத்த வருடம் அனைத்து நடிகர்களின் படங்களுமே கண்டிப்பாக வந்துவிடும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
அப்படி ரசிகர்களிடம் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள சில படங்கள் என்னென்ன என்று பார்ப்போம்.
விடாமுயற்சி
2024ம் ஆண்டில் அஜித் நடித்து ஒரு படம் கூட வெளியாகவில்லை. அந்தக் குறையைப் போக்குவதற்கே 2025ம் ஆண்டு பொங்கல் தினத்தில் அஜித்தின் 'விடாமுயற்சி' வெளியாக உள்ளது. அஜித்தை முதன் முறையாக இயக்குகிறார் மகிழ் திருமேனி. 25 வருடங்களுக்கு முன்பு வெளிவந்த ஹாலிவுட் படமான 'பிரேக்டவுன்' படத்தின் தழுவல்தான் இந்தப் படம் என்கிறார்கள். அஜித் நடித்த ஒரு படம் வெளிவந்து இரண்டு வருடங்கள் ஆகிவிட்டதால், படம் எப்படியிருந்தாலும் அஜித் ரசிகர்ணகள் கொண்டாடித் தீர்ப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை.
வணங்கான்
பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடித்துள்ள படம். தமிழ் சினிமாவில் மாறுபட்ட படங்களைக் கொடுப்பவர் என்று பெயரெடுத்தவர் பாலா. அவருடைய இயக்கத்தில் முதல் முறையாக அருண் விஜய் நடித்துள்ளார். ஐந்து வருட இடைவெளிக்குப் பிறகு பாலா இயக்கத்தில் வெளிவர உள்ள படம். பாலா திரையுலகில் இயக்கினராக அறிமுகமாகி 25 வருடங்கள் ஆகிவிட்டது. இந்தக் கால ரசிகர்களுக்கு ஏற்றபடியான படமாக 'வணங்கான்' படத்தைக் கொடுத்திருப்பாரா என்பது விரைவில் தெரிந்துவிடும். இருந்தாலும் அவர் படம் மீதான நம்பிக்கை அதிகமாகவே உள்ளது.
வீர தீர சூரன்
எஸ்யு அருண்குமார் இயக்கத்தில் விக்ரம், துஷாரா விஜயன் மற்றும் பலர் நடிக்கும் படம். படத்தின் முன்னோட்ட வீடியோ ஒன்று வெளிவந்து படம் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி உள்ளது. மதுரை பின்னணியில் அதிரடியான ஆக்ஷன் படமாக இருக்கும் எனத் தெரிகிறது. இயக்குனர் அருண்குமார் - விக்ரம் கூட்டணி முதன் முறையாக இணைந்திருக்கும் படம்.
இட்லி கடை
தனுஷ் இயக்கத்தில் உருவாகி வரும் 4வது படம். 'திருச்சிற்றம்பலம்' வெற்றிக் கூட்டணியான தனுஷ், நித்யா மேனன் மீண்டும் இந்தப் படத்தில் இணைந்துள்ளார்கள். இவர்கள் தவிர அருண் விஜய், பிரகாஷ்ராஜ், சமுத்திரக்கனி, ஷாலினி பாண்டே ஆகியோரும் நடிக்கிறார்கள். 2024ல் தனுஷ் இயக்கிய 'ராயன்' படம் 100 கோடி வசூலைக் கடந்தது. அதனால், இந்த 'இட்லி கடை' படம் மீதும் அதிக எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஏப்ரல் 10ம் தேதி வெளியீடு என்று தயாரிப்பில் இருக்கும் போதே அறிவித்துவிட்டார்கள்.
ரெட்ரோ
கார்த்திக் சுப்பராஜ் - சூர்யா கூட்டணி முதல் முறை இணைந்துள்ள படம். 2024ம் வருடம் சூர்யா பெரிதும் எதிர்பார்த்த 'கங்குவா' படம் வெற்றிகரமாக அமையவில்லை. அதனால், 'ரெட்ரோ' படத்தை நிறையவே எதிர்பார்க்கிறார். படத்தின் முன்னோட்ட வீடியோ, இது ஒரு அதிரடி ஆக்ஷன் மற்றும் காதல் படம் என சொல்கிறது. பூஜா ஹெக்டே படத்தின் கதாநாயகியாக நடித்துள்ளார். படத்தில் ஜோஜு ஜார்ஜ், ஜெயராம், பிரகாஷ்ராஜ், நாசர், கருணாகரன் என நிறைய பேர் நடித்திருக்கிறார்கள். கார்த்திக் சுப்பராஜ் வழக்கம் போல ஒரு மாறுபட்ட படத்தைக் கொடுத்திருப்பார் என எதிர்பார்க்கலாம்.
குட் பேட் அக்லி
2025ம் ஆண்டில் சில முன்னணி நடிகர்களின் இரண்டு படங்கள் வெளிவர வாய்ப்புள்ளது. 2024ல் அஜித் நடித்து ஒரு படம் கூட வராத நிலையில் 2025ல், 'விடாமுயற்சி, குட்பேட் அக்லி' ஆகிய படங்கள் வெளிவர உள்ளது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிக்கும் படம். இந்தப் படமும் கண்டிப்பாக ஆக்ஷன் படமாகத்தான் இருக்கப் போகிறது. 'விடாமுயற்சி' படத்திற்குப் பிறகு மீண்டும் அஜித்துடன் ஜோடி சேர்ந்து நடிக்கிறார் த்ரிஷா. ஆதிக் கடைசியாக இயக்கிய 'மார்க் ஆண்டனி' படம் 100 கோடி வசூலித்து வெற்றிப் படமானது. 'குட் பேட் அக்லி' படமும் வசூலில் சாதனை படைக்கும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
கூலி
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் படம். இந்தக் கூட்டணி பற்றிய அறிவிப்பு வந்த போதே எதிர்பார்ப்பு எகிறியது. 2025ம் ஆண்டில் அதிக வசூலைக் குவிக்கப் போகும் படமாக இது இருக்கும் என்று எப்போதோ பேச ஆரம்பித்துவிட்டார்கள். இதுவரை பார்க்காத ரஜினியை இந்தப் படத்தில் பார்க்கப் போகிறோம் என்ற நம்பிக்கையில் ரஜினி ரசிகர்கள் இருக்கிறார்கள். எந்த மாதிரியான ரஜினி படமாக இது இருக்கப் போகிறது என்பதுதான் பலரது எதிர்பார்ப்பு.
தக் லைப்
மணிரத்னம் இயக்கத்தில், கமல்ஹாசன், சிம்பு, த்ரிஷா மற்றும் பலர் நடிக்கும் படம். ஜுன் 5ம் தேதி படம் வெளியாகப் போகிறது என்று ஏற்கெனவே அறிவித்துவிட்டார்கள். கமல், சிம்பு முதல் முறையாக இணைந்து நடிக்கும் படம். 'நாயகன்' படத்திற்குப் பிறகு மணிரத்னம், கமல்ஹாசன் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. அப்படி நீண்ட இடைவெளிக்குப் பிறகு இணைந்த ஷங்கர், கமல்ஹாசன் கூட்டணி 2024ம் ஆண்டில் 'இந்தியன் 2' படத்தில் ஏமாற்றியது. அது போல 'தக் லைப்' படத்தில் நடக்காது என்ற நம்பிக்கை ரசிகர்களுக்கு இருக்கிறது. பொறுத்திருந்து பார்ப்போம்.
விஜய் 69
எச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம். பூஜா ஹெக்டே, பாபி தியோல் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். தீவிர அரசியலில் ஈடுபட உள்ளதால் இந்தப் படத்துடன் நடிப்புக்கு முழுக்கு போடுகிறார் விஜய். அதனால், இந்தப் படம் மீது இயல்பாகவே எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது. இந்தப் படமும் ஒரு அரசியல் கதை என்று சொல்கிறார்கள். 2026 சட்டசபைத் தேர்தலுக்கு முன்பு வர உள்ள படம், எனவே, அரசியல் வசனங்கள் காட்சிகள் எப்படி இருக்கப் போகிறது, ஏதேனும் அதிர்வலையை ஏற்படுத்துமான என அரசியல் வட்டாரங்களும் இந்தப் படத்தை எதிர்பார்க்கின்றன.
முருகதாஸ் - சிவகார்த்திகேயன், சுதா - சிவகார்த்திகேயன்
ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் படம் மீதும், சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் அவருடைய 25வது படம் மீதும் எதிர்பார்ப்புகள் இப்போதே ஏற்பட்டுள்ளது. 2024ல் அவர் நடித்து வெளிவந்த 'அமரன்' படம் 300 கோடிக்கும் அதிகமாக வசூலித்து மாபெரும் வெற்றி பெற்றதுதான் அதற்குக் காரணம். 2025ல் சினிமாவை விட்டு விஜய் விலகுவதால் சிவகார்த்திகேயனின் இந்த இரு படங்களின் வெற்றி மிக முக்கியமாகப் பார்க்கப்படும்.
2024ல் வெளிவந்த படங்களில் ஒன்று கூட 500 கோடி வசூலைக் கடக்கவில்லை என்பதை ஆரம்பத்திலேயே சொல்லியிருந்தோம். தெலுங்கு, கன்னடம், ஹிந்தி சினிமாக்கள் 1000 கோடி வசூலைக் கடந்துவிட்டன. தமிழ் சினிமாவில் மட்டும் அப்படி ஒரு வசூல் சாதனை இன்னும் நடைபெறவில்லை என மற்ற திரையுலக ரசிகர்கள் கிண்டலடிக்கும் ஒரு நிலைக்கு வந்துள்ளோம். 2025ல் வெளிவர உள்ள இத்தனை முக்கிய படங்களில் ஒன்றாவது அந்த ஏக்கத்தைப் போக்கி 1000 கோடி சாதனையைப் பெறும் என நம்புவோம்.