'சேம் சேஞ்சர்' சென்னை விழாவில் விஜய் கலந்து கொள்வாரா? | அஜித்தின் விடாமுயற்சி எப்போது ரிலீஸ்? | ''15 வருட காதல்'': ரகசியம் பகிர்ந்த கீர்த்தி சுரேஷ் | சத்தமின்றி திருமணம் செய்த சாக்ஷி அகர்வால் | சசிகுமார் - சிம்ரனின் ‛டூரிஸ்ட் பேமிலி' படப்பிடிப்பு முடிவடைந்தது | நேரம் சோதிக்கிறது… : வருத்தத்தில் சிலம்பரசன் | 5 வருடங்களுக்கு பிறகு கதையின் நாயகனாக ஷாம் | விடாமுயற்சி - டிரைலரை வெளியிட்டு ரசிகர்களை அமைதிப்படுத்த முயற்சி | விவேக் பிரசன்னா நாயகனாக நடிக்கும் 'ட்ராமா' | பிளாஷ்பேக் : ஒலிம்பிக்கில் ஒலித்த இளையராஜா பாடல் |
பழுத்த கல்வி ஞானமோ, பெரிய பொருளாதாரப் பின்புலமோ இல்லாமல் ஒரு சாதாரண மில் தொழிலாளி என்ற பின்னணியோடு கலைத்துறையில் கால் பதித்து, இந்திய சினிமாவே உற்று நோக்கும் வகையில் யானை, குதிரை, சிங்கம், ஆடு, மாடு, பாம்பு என ஏராளமான விலங்குகளையும், பிராணிகளையும் திரைத்துறையில் பயன்படுத்தும் புதிய உத்தி ஒன்றைக் கையாண்டு, ரசிகர்களை மகிழ்விக்கும் வண்ணம் பல வெற்றிப் படங்களைத் தயாரித்து, பெரும் தயாரிப்பாளராக உருவெடுத்தவர், எம் ஜி ஆரின் உற்ற தோழர், அவரை வைத்து அதிக திரைப்படங்களை தயாரித்த தயாரிப்பாளர் என்ற பெருமைக்கும் உரியவரான சாண்டோ எம் எம் ஏ சின்னப்ப தேவர், தனது “தேவர் பிலிம்ஸ்” தயாரிப்பில் எம் ஜி ஆர் தவிர்த்து பிற நடிகர்களை வைத்தும் ஏராளமான வெற்றிப் படங்களை தந்திருக்கின்றார்.
படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் சம்பளத்தை மொத்தமாக முன்னமே கொடுத்து ஒப்பந்தம் செய்யும் ஒரு தனித்துவமிக்க பாணி இவரது பாணி. இத்தகைய சிறப்புகளும், பெருமைகளும் ஒருங்கே அமையப் பெற்ற தீவிர முருக பக்தரான சாண்டோ எம் எம் ஏ சின்னப்ப தேவர், “தாய் சொல்லைத் தட்டாதே”, “தாயைக் காத்த தனயன்”, “குடும்பத் தலைவன்”, “தர்மம் தலைகாக்கும்”, “நீதிக்குப் பின் பாசம்”, “வேட்டைக்காரன்”, “தொழிலாளி”, “கன்னித்தாய்”, “முகராசி”, “தனிப்பிறவி”, “தாய்க்குத் தலைமகன்”,”விவசாயி”, “தேர்த்திருவிழா”, “காதல் வாகனம்”, “நல்ல நேரம்” என்று எம் ஜி ஆரை நாயகனாக வைத்து எடுத்த அனைத்து படங்களிலும் நடிகர் எஸ் ஏ அசோகனுக்காக ஒரு முக்கியத்துவம் வாய்ந்த, அழுத்தமான கதாபாத்திரத்தை அவர் தர தவறியதே இல்லை.
அந்த வகையில், தனது தயாரிப்பில் உருவாகிக் கொண்டிருந்த “தாயைக் காத்த தனயன்” படப்பிடிப்பின்போது, “நீதான் மர்லின்மன்றோ! நீதான் சோபியா லாரன்! பிரமாதமா நடிச்சுட்டே போ…” என்று படத்தில் நடித்துக் கொண்டிருந்த நடிகர் அசோகனைக் கட்டிப்பிடித்து பாராட்ட, ஒரு கணம் திடுக்கிட்டு, திகைத்துப்போன நடிகர் அசோகன், “இவங்க எல்லாம் நடிகைகள்” என்று கூற, அட… இதெல்லாம் ஆம்பளைங்க பேரு இல்லையா? நல்லா… பெருசா இருக்கே ஆம்பளைங்க பேருதான்னு நான் நெனச்சேன் என்றாராம் தேவர்.
சிரிப்பை அடக்க முடியாத நடிகர் அசோகன், “மார்லன் பிராண்டோ, சிட்னி பாய்ட்டர்னு சொல்லுங்க” என்று சொல்ல, சரி விடு, நீ நல்லா நடிச்சே! நான் பாராட்டினேன்! என்று சிரித்தாராம் சாண்டோ எம் எம் ஏ சின்னப்ப தேவர். “உதட்டில் இருந்து வரும் வார்த்தைகளில் ஒளிந்திருப்பது அல்ல உண்மையான பாராட்டு. உள்ளத்தின் கிளர்ச்சிகளிலிருந்து வெளிப்படும் உண்மையான அன்பே உயர்வான பாராட்டு என்பதை உணர்த்தும் ஒரு உன்னதமான நிகழ்வுதான் இந்த நிகழ்வு.