பிளாஷ்பேக் : ஓவிய நாயகன் ஒளியின் நாயகனான பின்னணி | திரிசூலம், சூர்யவம்சம், விக்ரம் - ஞாயிறு திரைப்படங்கள் | ஏ.ஆர்.ரஹ்மான் வழக்கறிஞர் எச்சரிக்கை | ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாகும் ‛ஸ்டார்' பட நடிகை | நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படப்பிடிப்பு நிறைவு பெற்றது | துப்பாக்கிய பிடிங்க : விஜய்யின் பெருந்தன்மை - சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | விஷ்ணு விஷால் படத்தில் நிகழ்ந்த மாற்றம் | புஷ்பா 2 டிரைலர் - தெலுங்கை விட ஹிந்திக்கு அதிக வரவேற்பு | அட்லியின் அடுத்த படம் : வெளியானது புதிய அப்டேட் | அஜித்தின் குட் பேட் அக்லி படப்பிடிப்பு விரைவில் முடிவடைகிறது |
1960களின் மத்தியில் தமிழ் திரையுலகம் கண்டறிந்த ஒரு தரமான திரைக்கலைஞர்தான் நடிகர் சிவகுமார். “என்றும் மார்க்கண்டேயன்” என அழைக்கப்படும் இவர், வெள்ளித்திரையில் நுழைந்து காவியம் படைப்பதற்கு முன் ஓவியம் தீட்டி அதன் மூலம் காவியம் படைத்தவர். கோவை மாட்டம் சூலூருக்கு அருகிலுள்ள காசிக் கவுண்டன் புதூர்தான் இவரது பிறப்பிடம். பழனிச்சாமி என்ற இயற்பெயரைக் கொண்ட இவர், காசிக் கவுண்டன் புதூரில் முதன் முதலாக பள்ளி இறுதித் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று, மேலும் படிக்க வேண்டும் என்ற ஆசை கொண்டிருக்க, இவரது குடும்ப ஆலோசகரான இவரது மாமா இவரை மில் வேலைக்கு போகுமாறு கூற, மனம் பதைத்தார் பழனிச்சாமி. படிக்கும் காலங்களிலேயே ஓவியக் கலையின் மீது நாட்டம் கொண்டிருந்த இவர், சினிமா பத்திரிகைகளில் வரும் ஜெமினிகணேசன், சாவித்திரி, எம் ஜி ஆர் ஆகியோரின் படங்களை தத்ரூபமாக வரைந்து அவர்களுக்கு தபாலில் அனுப்பி வைப்பதையும் வழக்கமாக வைத்திருந்தார். ஓவியக் கலையை மேலும் பயில வேண்டும் என்ற ஆசையும் இவரிடம் மேலோங்கி இருந்தது.
ஓவியக்கலையின் மீது பழனிச்சாமி கொண்டிருந்த ஆர்வத்தைக் கண்ட அவரது மாமா, அக்கலையில் அவர் முன்னேற வழிவகையும் செய்ய முற்பட்டார். பழனிச்சாமியை அழைத்துக் கொண்டு சென்னையில் உள்ள தனது நண்பர் ஓ எஸ் பழனிச்சாமி கவுண்டர் என்பவரின் உதவியோடு நடிகர் திலகம் சிவாஜிகணேசனின் அறிமுகம் கிடைக்க, அவரிடம் தான் வரைந்த ஓவியங்களை பழனிச்சாமி காட்ட, பாராட்டிய நடிகர் சிவாஜிகணேசன் “மோகன் ஆர்ட்ஸ் கம்பெனி” என்ற நிறுவனத்தில் வேலையும் வாங்கித் தந்தார். சினிமா படங்களுக்கு பேனர் வரையும் வேலை பிடிக்காத பழனிச்சாமி அங்கிருந்து விலகி, சென்னை ஓவியக் கல்லூரியில் மாணவனாக சேர்ந்து அங்கு ஆறு ஆண்டுகள் பயிற்சியும் பெற்றார்.
ஓவியக் கல்லூரியின் ஆசிரியரான சந்தானராஜ், ஒரு முறை இவரைப் பார்த்து நீ நடிகனாக வந்தால் நிச்சயம் சோபிக்க முடியும் என்று கூற, பழனிச்சாமிக்கு சினிமா ஆசையும் தொற்றிக் கொண்டது. இது சம்பந்தமாக பலபேரை சந்தித்துப் பேசவும் செய்தார். இதற்கிடையில் இவரது உறவினர் ஒருவர் சென்னை வந்து படம் ஒன்று தயாரிக்க, அதில் பழனிச்சாமிக்கு ஒரு வேஷமும் தரப்பட்டது. இரட்டை இயக்குனர்கள் கிருஷ்ணன் பஞ்சு இயக்கிய இத்திரைப்படம் பின் வெளிவராமல் போனது.
ஓவியக் கல்லூரி படிப்பு முடிந்து ஊருக்குச் சென்ற பழனிச்சாமிக்கு, ஏ வி எம் தயாரிப்பு நிறுவனத்திலிருந்து ஒரு தந்தி வந்தது. அதன் மூலம் இயக்குநர் ஏ சி திருலோகசந்தர் இயக்கத்தில் 1965ம் ஆண்டு வெளிவந்த “காக்கும் கரங்கள்” என்ற திரைப்படத்தில் 'லட்சிய நடிகர்' எஸ் எஸ் ராஜேந்திரன் மற்றும் விஜயகுமாரி ஆகியோருடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு கிடைக்கப் பெற்று, ஒரு நடிகராக தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார் பழனிச்சாமி. அதன்பின் படத்தின் தயாரிப்பாளரான ஏ வி மெய்யப்ப செட்டியார் அவர்களின் புதல்வர்கள் கலந்தாலோசித்து, பழனிச்சாமி என்ற இவரது இயற்பெயரை சினிமாவிற்காக சிவகுமார் என மாற்றியமைத்தனர். புகை, மது போன்ற எந்த ஒரு தீய பழக்கத்திற்கும் ஆளாகாத சிவகுமார் என்ற இந்த சீர்மிகு நாயகனை, அன்று முதல் இன்று வரை என்றும் மார்க்கண்டேயனாகவே இந்த சினிமா உலகம் அவரை உச்சி முகர்ந்து வருகின்றது என்பதில் எந்த மாற்றமும் இல்லை.