திருமணம் செய்யாதது ஏன்? மாஸ்டர் மகேந்திரன் | மலேசியாவில் 'ஜனநாயகன்' பாடல் வெளியீட்டு விழா: விஜய் குடும்பத்தினர் பங்கேற்பார்களா? | டிரெயின்-ல் ஸ்ருதிஹாசன் பாடிய கன்னக்குழிக்காரா | ரஜினிக்காக மட்டுமே அதை செய்தேன் : சொல்கிறார் உபேந்திரா | மறு தணிக்கைக்கு செல்லும் பராசக்தி | வருட இறுதியில் ஓடிடியில் மகிழ்விக்க வரிசைக்கட்டும் 'புதுப்படங்கள்'..! | குரு சோமசுந்தரம், அனுமோல் இணைந்து நடிக்கும் பாரிஸ் கபே | ஜனநாயகன் படத்தை தெலுங்கில் வெளியிடும் பிரபல நிறுவனம் | ‛ஆசாத் பாரத்' பற்றி நெகிழும் இந்திரா திவாரி | ஜெயிலர் 2 படத்தில் ஷாருக்கான் : உறுதிசெய்த பாலிவுட் நடிகர் |

இளையராஜா என்ற இசை ஆளுமை வளர்ந்து வந்து கொண்டிருந்த 70களின் பிற்பகுதியில் கதாசிரியர், தயாரிப்பாளர் மற்றும் இயக்குநருமான காரைக்குடி நாராயணன், தான் அடுத்து எடுக்கப் போகும் “அச்சாணி” என்ற திரைப்படத்திற்கு இசையமைக்க, சாந்தோமில் ஒரு சிறு வீட்டில் தனது சகோதரர்களான பாஸ்கர் மற்றும் கங்கை அமரனுடன் வசித்து வந்த இளையராஜாவை அணுகினார். தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ள அவர் முற்பட, அதற்கு முன்பே இளையராஜா உங்களை எனக்கு நன்றாக தெரியும். நீங்கள் பணிபுரிந்த “தேன் சிந்துதே வானம்” திரைப்படத்தில், வி குமாரின் இசையமைப்பில் வந்த “உன்னிடம் மயங்குகிறேன்” என்ற பாடலுக்கு நான் கிட்டார் வாசித்திருக்கின்றேன். எனவே உங்களைப் பற்றிய அறிமுகம் எனக்குத் தேவையில்லை என கூற, அதன்பின் தான் தயாரித்து, முதன் முதலாக இயக்கப் போகும் திரைப்படமான “அச்சாணி” என்ற திரைப்படத்திற்கு இசையமைப்பாளராக இளையராஜாவை ஒப்பந்தம் செய்தார் காரைக்குடி நாராயணன்.
கோடிகளில் புரண்டு கொண்டிருக்கும் இன்றைய திரையிசை உலகத்தை ஒப்பிடும்போது, அன்று இளையராஜா “அச்சாணி” திரைப்படத்தின் இசையமைப்பிற்கு சில லட்சங்களையாவது வாங்கியிருப்பார் என எண்ணத் தோன்றும். ஆனால் இளையராஜா வாங்கிய தொகை வெறும் 8000 மட்டுமே. ஸ்டீரியோ ரெக்கார்டிங்கில் பாடலை பதிவு செய்ய முடிவெடுத்து, அதற்காக அருணாச்சலா ஸ்டூடியோவும் ஒப்பந்தம் செய்யப்பட்டது. ஆனால் அங்கு ஸ்டீரியோ முறையில் பாடல் பதிவு செய்ய முடியாத நிலை ஏற்பட, பின் பிரசாத் ஸடூடியோவில் ஒரே ஒரு மணிநேரம் மட்டும் நேரம் ஒதுக்கித் தருமாறு கேட்டு, அந்த ஒரு மணிநேரத்தில் இரண்டு பாடல்களை பதிவு செய்ய வேண்டிய நெருக்கடியான நிலையில் இருந்தார் இசைஞானி இளையராஜா.
எஸ்பி பாலசுப்ரமணியம், பி சுசீலாவின் குரல்களில் “தாலாட்டு பிள்ளையுண்டு தாலாட்டு” என்ற பாடலை அவர்களை பாட வைத்து பதிவு செய்து அனுப்பிவிட்டார். அடுத்து எஸ் ஜானகியின் குரலில் பதிவு செய்ய வேண்டிய பாடல் பதிவின் போது பல்வேறு இடையூறுகள் தலைதூக்க, இசைக்குழுவினரைப் பார்த்து இளையராஜா கோபம் கொண்டார். அப்போது இசைக்குழுவினர் எஸ் ஜானகி அழுது கொண்டிருப்பதை இளையராஜாவிடம் தெரிவிக்க, ஜானகியிடம் சென்று இளையராஜா விபரம் கேட்டார். பாடிக்கொண்டிருக்கும் போது வந்த அழுகையை அடக்க முடியாத ஜானகி, அவரிடம் கொஞ்சம் அவகாசம் கேட்க, பின் ஜானகியை ஆசுவாசப்படுத்தி அவரையே பாட வைத்து இளையராஜா பதிவு செய்த பாடல்தான் “அச்சாணி” திரைப்படத்தில் வரும் “மாதா உன் கோவிலில் மணி தீபம் ஏற்றினேன்” என்ற பாடல்.
1978ம் ஆண்டு வெளிவந்த இத்திரைப்படத்தின் பாடல், இன்றும் கேட்போரின் மனங்களை கலங்க வைக்கும் பாடலாகவும், உறங்க வைக்கும் பாடலாகவும் இருந்து வருகிறது. ஒரு பின்னணிப் பாடகரையே நிலை குலையச் செய்யும் வகையில் ஒரு பாடல் உருவாகிறது என்றால், அந்தப் பாடல் என்ன ஒரு ஜீவனுள்ள பாடலாக இருந்திருக்க முடியும் என்பதற்கு சரியான உதாரணம்தான் 'இசைஞானி' இளையராஜாவின் இசையில் வந்த “மாதா உன் கோவிலில் மணிதீபம் ஏற்றினேன்” என்ற இந்தப் பாடல்.
1978ல் வெளிவந்த இந்தப் பாடலைப் பற்றி 2024ல் நாம் பேசுகின்றோம் என்றால், அன்றைய சக திரைக்கலைஞர்கள் ஒருவர் மீது ஒருவர் வைத்திருந்த நம்பிக்கை, மரியாதை, தொழிலின் மீது அவர்கள் காட்டிய அற்பணிப்பு என இவையெல்லாம் சேர்ந்து உருவானவைதான் இன்று நாம் கேட்டு, இன்புற்று மகிழும் இதுபோன்ற காலத்தை விஞ்சி நிற்கும் காவியப் பாடல்கள்.