'சாமி, திருப்பாச்சி' புகழ் நடிகர் கோட்டா சீனிவாசராவ் காலமானார் | 300 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'வாயாடி பெத்த புள்ள' | யு டியூப் தளத்தில் 'டாப் வியூஸ்' பெற்ற தமிழ் பாடல்கள் : ஒரு ரீவைண்ட்…! | 23 நாளில் படப்பிடிப்பு... ரூ.25 லட்சத்தில் படம் : வியக்க வைக்கும் ‛மாயக்கூத்து' | ராஜா சாப் படத்தில் விக் வைத்து நடிக்கிறாரா பிரபாஸ்? : ரசிகர்களுக்கு எழுந்த புதிய சந்தேகம் | ராமாயணா முதல் பாகத்தில் யஷ் வருவது வெறும் 15 நிமிடங்கள் தான் | மலையாளத்தில் டைம் ட்ராவல் பின்னணியில் உருவாகும் 'ஆடு 3' | சுதீப்பின் 47வது படம் அறிவிப்பு : ஜூலையில் துவங்கி டிசம்பரில் ரிலீஸ் | குழந்தையை தத்தெடுத்து வளர்க்க திட்டமிடும் ஸ்ருதிஹாசன் | அட்லி இயக்கும் விளம்பரத்தில் நடிக்கும் ரன்வீர் சிங், ஸ்ரீ லீலா |
கடந்த சில நாட்களுக்கு முன்பு தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டன. இந்த விருது பட்டியலில் சிறந்த குழந்தைகளுக்கான படம் என்ற பிரிவு இடம் பெறவில்லை. இதற்கு முன் இந்த பிரிவில் விருதுகள் வழங்கப்பட்டு வந்தது. ஆனால் இப்போது அறிவிக்கப்படவில்லை. இதுகுறித்து தமிழ் இயக்குனரும், சமீபத்தில் 'சாட் பூட் த்ரி' என்ற குழந்தைகள் படத்தை தயாரித்து இயக்கி வெளியிட்டவருமான அருண் வைத்யநாதன் தனது ஆதங்கத்தை வெளியிட்டுள்ளார்.
அவர் வெளிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: குழந்தைகளுக்கான ஒரு நல்ல படத்தை, ஜனரஞ்சகமாகக் கொடுக்க வேண்டும் என்று பல நல உள்ளங்கள் எனக்கு உறுதுணையாய் இருக்க 'ஷாட் பூட் த்ரீ'யை எடுத்து, பகீரதப் பிரயத்தனம் செய்து ரிலீஸ் செய்தோம். கொரியா, அட்லாண்டா, கனடா, நேபால், பாரிஸ், வேல்ஸ் என்று பல உலகத் திரைப்பட விழாக்களில் தேர்வாகி சிறந்த திரைப்படத்திற்கான விருதையும் நான்கு சர்வதேச விழாக்களில் வென்றோம்.
நானும் எனது குழுவும் மிக ஆர்வமாக குழந்தைகளுக்கான தேசிய விருது அறிவிக்கும் அந்நாளை மிக ஆர்வத்துடன் எதிர்பார்த்துக் காத்திருந்தோம். இன்று அனைவரும் கொண்டாடும் ரிஷப் ஷெட்டி சில ஆண்டுகளுக்கு முன்னால் அவர் இயக்கிய படத்துக்கு, சிறந்த குழந்தைகள் படத்துக்கான தேசிய விருது வாங்கியவர்தான். தேசிய விருது, இது போன்ற முயற்சிகளுக்கு ஒரு ஊக்கமாக இருக்கும்.
ஏற்கனவே வியாபார சந்தையில் குழந்தைகளுக்கான படத்தை எடுப்பவர்கள் பிழைக்கத் தெரியாதவர்கள் என்று ஒரு அழகான பட்டம் சுமத்தப்பட்டு, என்னைப் போன்றோருக்கு கரும்புள்ளி செம்புள்ளி அலங்காரம் செய்யப்பட்டுக் கொண்டிருக்கும் வேளையில், குழந்தைகளுக்கான பிரிவே இல்லாமல் தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டிருப்பது, நெஞ்சில் சம்மட்டி அடியாய் இறங்கியுள்ளது.
நான் மட்டுமல்ல, குரங்குபெடல், கிடா என்று இன்னும் சில குழந்தைகள் படம் எடுத்தவர்களும் கண்டிப்பாய் அதிர்ச்சி அடைந்திருப்பார்கள். அழுத குழந்தைக்குத்தான் பால் கிடைக்கும் என்பார்கள், எங்களது கண்களில், கண்ணீர் வெள்ளம் போல் கரையோடுகிறது. நல்லதோர் வீணை செய்தே, அதை நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ? இந்த நிலை குறித்து அனைவரும் உரக்க கருத்துகளைப் பதிவு செய்யுங்கள். இல்லாவிட்டால் அருகி வரும் படங்களில் குழந்தைகளுக்கான படங்களும் சேரும். அந்தப் பாவம் நம் அனைவரையும் சேரும். தேசிய விருது என்பது குழந்தைகள் படத்திற்கான ஒரு முக்கியமான ஆக்ஸிஜன்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
அருண் வைத்தியநாதன் அச்சமுண்டு அச்சமுண்டு, நிபுணன், பெருச்சாழி(மலையாளம்) உள்ளிட்ட பல படங்களை இயக்கியவர்.