''அப்பா ஒரு குழந்தை; ஆதாரமற்ற வதந்திகளை பரப்பாதீர்கள்'' - ஏ.ஆர்.ரஹ்மான் மகன் வேதனை | அழகுக்காக ஸ்ரீதேவி பட்ட சிரமம் : போனி கபூர் தகவல் | 'வேவ்ஸ்' ஓ.டி.டி., தளம் : பிரசார் பாரதி துவக்கம் | நவ.26ம் தேதியில் விடுதலை-2 படத்தின் இசை வெளியீட்டு விழா | தெலுங்கில் அறிமுகமாகும் மமிதா பைஜூ | திருமணத்திற்கு தயாராகும் தமன்னா | திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த சந்தானம் | நடிகை சீதா வீட்டில் நகை திருட்டு : போலீசில் புகார் | சமந்தா சொல்வது உண்மைதான் : அர்ஜுன் கபூர் ஒப்புதல் | சர்ச்சைகளை நீர்த்துப்போக செய்யும் விதமாக தயாராகிறதா மோகன்லால் - மம்முட்டி படம்? |
தமிழ் திரையுலகின் தனிப்பெரும் ஆளுமையாய் இருந்து வந்த 'மக்கள் திலகம்' எம்ஜிஆர், ஏவிஎம் தயாரிப்பு நிறுவனத்திற்காக நடித்துக் கொடுத்த ஒரே திரைப்படம் “அன்பே வா”. இது வழக்கமான எம்ஜிஆர் திரைப்படங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்ட கதையம்சத்தோடு வெளிவந்து வெற்றி வாகை சூடிய படமாகும்.
“கம் செப்டம்பர்” என்ற ஆங்கில திரைப்படத்தின் பாதிப்பில் எடுக்கப்பட்ட திரைப்படம்தான் இந்த “அன்பே வா”. இந்த படத்தைப் பொறுத்தவரை, எம்ஜிஆரின் திரைப்படத்தை தயாரிக்கும் ஏவிஎம் என்பதை விட, ஏவிஎம்மின் திரைப்படத்தில் எம்ஜிஆர் என்பதே உண்மையாக இருந்தது. இன்னும் சொல்லப் போனால் எம்ஜிஆரின் தலையீடே இல்லாமல் வெளிவந்த திரைப்படமாகவும் இத்திரைப்படத்தைச் சொல்லலாம். அந்த அளவிற்கு எம்ஜிஆர் முழு ஒத்துழைப்பு தந்து நடித்துக் கொடுத்த படம்தான் “அன்பே வா”.
1966ம் ஆண்டு பொங்கல் திருநாளன்று வெளியான இத்திரைப்படத்தின் வெளிப்புறப் படப்பிடிப்பு முழுவதும் சிம்லா மற்றும் ஊட்டியிலும், ஏனைய காட்சிகள் எல்லாம் ஏவிஎம் படப்பிடிப்புத் தளத்திலேயே எடுத்து முடிக்கப்பட்டு வெளியிடப்பட்டது. எம்ஜிஆர், சரோஜா தேவி, எஸ்ஏ அசோகன், நாகேஷ், மனோரமா, டிஆர் ராமச்சந்திரன், டிபி முத்துலட்சுமி என குறிப்பிடும்படியான ஒருசில முக்கிய கதாபாத்திரங்களோடு, துணை நடிகர்களும் இணைந்து பணிபுரிந்த மாபெரும் வண்ணக் காவியம்தான் “அன்பே வா”.
இயக்குநர் ஏ சி திருலோகசந்தரின் நேர்த்தியான இயக்கம், ஒளிப்பதிவாளர் ஏ மாருதி ராவின் கண்களுக்கு குழுமையான, ஆங்கிலப் படங்களுக்கு இணையான ஒளிப்பதிவு, வாலியின் காவிய மயமான பாடல் வரிகள், இசையமைப்பாளர் எம்எஸ் விஸ்வநாதனின் மேதமையில் விளைந்த மெல்லிசை கானங்கள் என அனைத்தும் இணைந்து, இமயத்தின் உச்சிக்கே அழைத்துச் சென்றது “அன்பே வா” என்ற இந்த அற்புத திரைக்காவியத்தை.
இந்த வண்ணமயமான காதல் காவிய படத்தில் எம்ஜிஆரின் அறிமுகப் பாடலாக மலைப்பிரதேமான சிம்லாவில் எம்ஜிஆர் பாடி வருவதுபோல் வரும் “புதிய வானம் புதிய பூமி” என்ற பாடலை பதிவு செய்தனர். பாடலைக் கேட்ட ஏவி மெய்யப்ப செட்டியார் முதல் படக்குழுவினர் அனைவருக்கும் பாடல் பிடித்துப் போய்விட்டது. படப்பிடிப்பிற்குச் செல்ல தயாராக இருந்த நிலையில் ஏவிஎம் குமரனிடம் எதற்கும் எம்ஜிஆரிடம் பாடலைப் போட்டுக் காட்டி அவருடைய அனுமதியையும் பெற்றுவிடுவது நல்லது எனக் எம்எஸ் விஸ்வநாதன் கூற, வேறொரு படப்பிடிப்பில் இருந்த எம்ஜிஆரை ஏவிஎம் குமரனும், ஏவிஎம் சரவணனும் சந்தித்து விபரத்தைக் கூறினர். பாடல் செட்டியாருக்கு பிடித்திருக்கிறதா? என எம்ஜிஆர் கேட்க, அனைவருக்கும் பிடித்திருக்கிறது என்ற பதிலை சொன்னவுடன் எம்ஜிஆரும் பச்சைக் கொடி காட்டி விட்டார்.
முழுப்படப்பிடிப்பும் முடிந்து படம் தணிக்கைச் சான்றிதழ் பெற, தணிக்கை குழுவிற்கு சென்றது. அங்கு படத்தைப் பார்த்த தணிக்கை குழுவினர், “புதிய வானம் புதிய பூமி” பாடலில் வரும் “உதய சூரியனின் பார்வையிலே உலகம் விழித்துக் கொண்ட வேளையிலே” என்ற வரியில் வரும் உதயசூரியன் என்ற சொல்லை ஏற்றுக் கொள்ள மறுப்பு தெரிவித்தனர். அந்த சொல்லை மட்டும் படத்தின் காட்சியோடு நீக்க வேண்டும் என கூற, படத் தயாரிப்புத் தரப்பிலிருந்து எவ்வளவோ எடுத்துக் கூறியும் அதில் உறுதியாக இருந்தது தணிக்கை குழு.
பாடலாசிரியர் வாலியிடம் இந்த குறிப்பிட்ட பாடலின் வரி, எடுக்கப்பட்ட காட்சிக்கு நீங்கள் எழுதிய பாடல் வரியா? அல்லது நீங்கள் பாடல் எழுதிய பின் இந்தக் காட்சி படமாக்கப்பட்டதா? என கேட்க, நான் எழுதிய பிறகு எடுக்கப்பட்டதுதான் இந்தக் காட்சி என வாலியும் கூற, தணிக்கை குழு காட்சியோடு அந்த சொல்லையும் நீக்கினால்தான் அனுமதி தர முடியும் என உறுதிபட கூறிவிட்டனர்.
மீண்டும் தயாரிப்பு தரப்பு தணிக்கை குழுவிடம் பேசி, வார்த்தையை வேண்டுமானால் மாற்றி விடுகின்றோம் காட்சியை எதற்கு நீக்க வேண்டும்? என கோரிக்கை வைக்க, அதற்கு சம்மதம் தெரிவித்த தணிக்கை குழுவிடம் பாடலில் இடம்பெற்ற உதயசூரியன் என்ற சொல்லிற்கு இணையாக வாலி எழுதித் தந்த பல சொற்களில் தேர்ந்தெடுத்ததுதான் “புதிய சூரியன்”. அதன்பின் பாடலில் இருந்த உதயசூரியன் என்ற சொல்லை நீக்கி, மீண்டும் பின்னணிப் பாடகர் டிஎம் சவுந்தரராஜனை வரவழைத்து, “புதிய சூரியனின் பார்வையிலே உலகம் விழித்துக் கொண்ட வேளையிலே” என பாடவைத்து பதிவு செய்து படத்தை வெளியிட்டனர்.