நான் ஒரு சீரியல் டேட்டர் : தனிப்பட்ட வாழ்க்கை பற்றி ‛ஓப்பனாக' பேசிய ரெஜினா | விஜய்யின் கடைசி படம்: நாளைதான் அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ராதிகாவுடன் விராட் கோலி எடுத்த செல்பி | 'வணங்கான்' படத் தலைப்பு விவகாரம்: உயர்நீதிமன்றம் நோட்டீஸ் | அடுத்தடுத்து விலையுர்ந்த சொகுசு கார்களை வாங்கிய அஜித் | மற்ற மொழித் தயாரிப்பாளர்களுக்கு ஆதரவு தரும் ஹீரோக்கள் | பிளாஷ்பேக் : நெருடலான கதையை நேர்த்தியாய் சொல்லி, நெஞ்சம் நிறையச் செய்த 'சாரதா' | சீரியலை விட்டு விலகிய சாய் காயத்ரி: சோகத்தில் ரசிகர்கள் | பிறந்தநாள் கொண்டாடிய திவ்யா கணேஷ்! குவியும் வாழ்த்துகள் | அஷ்வத் - கண்மணி ஹல்தி புகைப்படங்கள் வைரல்! |
வெகுசில படங்கள் மட்டுமே நமக்கு ஒரு வாழ்வியல் அனுபவத்தை பரிசாக அளிக்கும். திரைப்படம் பார்த்துவிட்டு வெளியேறும் பார்வையாளனுக்கு கதை மாந்தர்களும் உரையாடிக் கொண்டே வருவது போன்ற ஒரு பிரமையை ஏற்படுத்தும் திரைப்படம் 'மேற்குத்தொடர்ச்சி மலை'.
2018ல் வெளியானது. கேரள மாநில 21 வது சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு, பஞ்சாப் மாநிலத்தில் 'பயாஸ்கோப்' உலக திரைப்பட விழாவில் சிறந்த ஒளிப்பதிவிற்கான விருது, திருச்சூர் திரைப்பட விழாவில் இந்திய அளவிலான சிறந்த அறிமுக இயக்குனருக்கான விருது பெற்றது. சிங்கப்பூர் தெற்காசிய சர்வதேச திரைப்பட விழா, சிகாகோ தெற்காசிய திரைப்பட விழாவுக்கும் தேர்ந்தெடுக்கப்பட்டது.
இத்திரைக்கதையில் 'ஈஸ்வரி' கதாபாத்திரம் தன் தாயின் போராட்ட குணத்தின் வெளிப்பாடு எனக்கூறும் திரைப்பட இயக்குனர் லெனின்பாரதி, எளிய மக்களின் வாழ்வியலை சிறந்த படைப்புகளாக அர்ப்பணிப்பதே எனது நோக்கம் என்கிறார். அவர் அளித்த பேட்டி..
எளிய மக்களின் வாழ்வியலை படைப்புகளாக தருகிறீர்களே
தேனி மாவட்டம் கோம்பை நான் பிறந்த ஊர். என் தந்தை ரெங்கசாமி, தாய் ஈஸ்வரி. நிலமற்ற விவசாய கூலிகள். அடுத்த தலைமுறைக்கு எதாவது செய்ய வேண்டும் என்ற வேட்கையில் தினந்தினம் உழைத்திடும் வைராக்கியம், போராட்ட குணம் நிறைந்தவர், கடுமையான உழைப்பாளி எனது தாய். அதனாலேயே எனக்கும் அந்த குணம் தொற்றிக் கொண்டது.
தந்தைக்கு திரைக்கதை, நாடகங்களில் ஈடுபாடு அதிகம். அதன் வெளிப்பாடுதான் நான் இன்று இயக்குனராக காரணம். எனது தந்தைக்கான கதாபாத்திரமாக முதலில் இயக்கிய 'மேற்கு தொடர்ச்சி மலை'யின் ரெங்கசாமி கதாபாத்திரத்தையும் திரைக்கதையில் சேர்த்துள்ளேன். 2020 டிசம்பரில் என் தாய் இந்த மண்ணுலகை விட்டு பிரிந்தார். நான் இயக்கிய திரைப்படம் வெளியான நாள் அன்று அவர் பார்த்தார். தனது மகன் வெற்றி பெற்றான் என்பதை தாண்டி, சக நிலமற்ற ஏழை விவசாய கூலிகள் அடுத்த தலைமுறைக்கான வெற்றியை பெற்றுவிட்டதாக அவர் மகிழ்ச்சி அடைந்த அந்நாளை என் வாழ்நாளில் மறக்க முடியாத, மறக்கக்கூடாத தினமாக கருதுகிறேன். அதனால் எளிய மக்களின் வாழ்வியலை சிறந்த திரைப்படங்களாக படைத்து, வணிக நோக்கம் இன்றி இச்சமூகத்திற்கு அர்ப்பணிக்க வேண்டும் என்று விரும்புகிறேன்.
தற்போது படித்த புத்தகம்
கன்னட பெண் எழுத்தாளரான நேமிசந்த்ரா 'யாத்வஷேம்' நாவலை எழுதியுள்ளார். கே.நல்லதம்பி மொழி பெயர்த்துள்ளார். இரண்டாம் உலகப்போரில் சிக்கிய சிறுமியும், பெற்றோரும் இந்தியா வருகின்றனர். தந்தை இறந்துவிட அச்சிறுமி ஒரு வீட்டில் வளரும் சூழ்நிலை ஏற்படுகிறது. அச்சிறுமி அவ்வீட்டில் நடக்கும் அடக்கு முறைகளையும், ஹிட்லரின் அடக்குமுறைகளையும் ஒப்பிட்டு பார்க்கும். பின் அச்சிறுமி தான் விட்டு வந்த சகோதரன், சகோதரியை பார்ப்பதற்காக மீண்டும் சென்று அவர்களை மீட்பதுதான் நாவலின் மையக்கரு. 'அகிம்சையே உயர்ந்த தர்மம்' என முழங்கும் இந்தியாவில் எண்ணற்ற சூழ்நிலையில் ஆதிக்கவாதிகளாக பல 'ஹிட்லர்'கள் தென்படுகின்றனர் என்பதை அப்பட்டமாக இந்நாவல் நமக்கு உணர்த்தும்.
'கேரளா ஸ்டோரி' பார்த்துவிட்டீர்களா
இல்லை. படக்குழு வழங்கும் தகவல்களும், நீதிமன்றத்தில் அவர்கள் 'கற்பனை கதை' எனவும், விளம்பரத்தில் உண்மை கதை அடிப்படையில் உருவாக்கியது என கூறுவதும் முரண்பட்ட தகவல்களாக உள்ளன.
'யாத்திசை', பொன்னியின் செல்வன் 2 படங்கள் குறித்து
மன்னராட்சி குறித்த திரைப்படங்களை பார்க்க எனக்கு விருப்பம் இல்லை. அதற்கான நேரமும் என்னிடம் இல்லை.
உங்கள் புதிய திரைப்படம் குறித்து
இயக்குனர் பா.ரஞ்சித்தின் 'நீலம்' தயாரிப்பு நிறுவனம் சார்பில், ஒரு எளிய சமூகத்தின் வாழ்வியலை மையமாக வைத்து திரைபடத்தை இயக்கி முடித்துள்ளேன். இறுதிக்கட்ட பணிகள் நடந்து வருகிறது. இப்பணிகள் முடிந்த பின், 'புதிய திரைப்படம்' இயக்குவது குறித்து ஆலோசிக்க உள்ளேன்.