பிளாஷ்பேக் : எம்.ஜி.ஆருடன் வாள் சண்டை போட்ட நடிகை | பிளாஷ்பேக் : எம்.ஜி.ஆருடன் மவுன யுத்தம் நடத்திய ஏ.எல்.சீனிவாசன் | ''அப்பா ஒரு குழந்தை; ஆதாரமற்ற வதந்திகளை பரப்பாதீர்கள்'' - ஏ.ஆர்.ரஹ்மான் மகன் வேதனை | அழகுக்காக ஸ்ரீதேவி பட்ட சிரமம் : போனி கபூர் தகவல் | 'வேவ்ஸ்' ஓ.டி.டி., தளம் : பிரசார் பாரதி துவக்கம் | நவ.26ம் தேதியில் விடுதலை-2 படத்தின் இசை வெளியீட்டு விழா | தெலுங்கில் அறிமுகமாகும் மமிதா பைஜூ | திருமணத்திற்கு தயாராகும் தமன்னா | திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த சந்தானம் | நடிகை சீதா வீட்டில் நகை திருட்டு : போலீசில் புகார் |
“காதோடுதான் நான் பாடுவேன் மனதோடுதான் நான் பேசுவேன்” என்று தமிழ் திரையிசை ரசிகர்கள் ஒவ்வொருவரின் மனதிலும் தனது சிருங்காரப் குரலால் திரையிசை ராணியாக வாழும் எல்ஆர் ஈஸ்வரியின் 84வது பிறந்த தினம் இன்று…திரையிசை உலகின் 'வானம்பாடி'யாக வலம் வரும் எல்ஆர் ஈஸ்வரியை பற்றி பார்க்கலாம்....
* நகைச்சுவை, காதல், சிருங்காரம், சோகம், பக்தி, ஹம்மிங் என எந்த வகை பாடலாக இருந்தாலும் தனது குரல் இனிமையால் கவர்ந்தார்.
* ராமநாதபுரம் மாவட்டம், இளையான்குடியை சேர்ந்த ஆண்டனி தேவராஜ் - ரெஜினா மேரி நிர்மலா தம்பதியரின் மகளாக 1939ல் டிசம்பர் 07ம் தேதி, சென்னையில் பிறந்தார். இவரது இயற்பெயர் லூர்து மேரி ராஜேஸ்வரி.
* பள்ளி படிக்கும் காலங்களிலேயே இசை ஆர்வம் கொண்ட எல்ஆர் ஈஸ்வரி பள்ளி கலை நிகழ்ச்சிகளில் பாடியும் இருக்கிறார்.
* 1954ல் எஸ்வி வெங்கட்ராமன் இசையில் வெளிவந்த “மனோகரா” திரைப்படத்தில் ஜிக்கி பாடிய “இன்ப நாளிதே இதயம் பாடுதே” என்ற பாடலில் முதன் முதலாக தனது தாயுடன் இணைந்து கோரஸ் பாடி, தனது திரையிசைப் பயணத்தை துவக்கினார்.
* 1958ல் “நல்ல இடத்து சம்மந்தம்” படத்தில் கேவி மகாதேவன் இசையில் “இவரேதான் அவரு அவரேதான் இவரு” என்ற பாடலை பாடியதன் மூலம் தனிப்பாடகியாக அறியப்பட்டார்.
* இந்தப் பாடலுக்குப் பின் எல் ராஜேஸ்வரியாக இருந்த இவரை எல்ஆர் ஈஸ்வரியாக்கினார் இயக்குனர் ஏபி நாகராஜன்.
* 1961ல் விஸ்வநாதன் - ராமமூர்த்தி இசையில் “பாசமலர்” படத்தில் இவர் பாடிய “வாராயோ தோழி வாராயோ” என்ற பாடல் திருப்புமுனை தந்தது.
* தொடர்ந்து இவரது குரலில் “அம்மம்மா கேளடி தோழி”, “ஆட வரலாம் ஆடவரெல்லாம்”, “பளிங்கினால் ஒரு மாளிகை” போன்ற பாடல்கள் இவரது குரலின் வெவ்வேறு பரிமாணங்களை காட்டத் துவங்கின.
* பாடும் முறை, வார்த்தை உச்சரிப்பு, ஹம்மிங் போன்றவற்றில் மற்ற பெண் பாடகர்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டவராக திகழ்ந்தார்.
* “கல்லெல்லாம் மாணிக்கக் கல்லாகுமா”, “பவளக்கொடியிலே முத்துக்கள் கோர்த்தால்”, “மாணிக்கத் தொட்டில் இங்கிருக்க”, போன்ற பல பாடல்கள் இவரது ஹம்மிங்கால் அடையாளம் காணப்பட்ட பாடல்கள் என்றால் அது மிகையன்று.
* வட்டார மொழிப் பாடல்களான “முத்துக் குளிக்க வாரீகளா”, “எழந்தப்பழம் எழந்தப்பழம்” போன்ற பாடல்கள் இவரது குரலினிமையால் மண்ணின் மணம் பரப்பியதோடு, திரையிசை ரசிகர்களின் மனம் கவர்ந்த பாடலாக இன்றும் நிலைத்திருக்கின்றன.
* 150 இசைக்கலைஞர்களைக் கொண்டு இசைக்கப்பட்ட “பட்டத்து ராணி பார்க்கும் பார்வை” என்ற “சிவந்த மண்” படப்பாடலை ஒரே டேக்கில் பாடி அசத்தினார்.
* “சிவந்த மண்” படம் ஹிந்தியில் “தர்த்தி” என்ற பெயரில் எடுத்த போது இதே பாடலை எல்ஆர் ஈஸ்வரியைப் போல் தன்னால் பாட முடியாது என்று கூறி எல்ஆர் ஈஸ்வரியை நேரில் சந்தித்து பாராட்டியும் சென்றார் ஹிந்தி பின்னணிப் பாடகி லதா மங்கேஷ்கர்.
* ஜெயலலிதாவிற்கு இவரது குரல் பொருந்தியதோடு, அவருக்காக இவர் பாடிய பாடல்கள் அனைத்தும் மிகப்பெரிய வெற்றியை பெற்றன.
* “ருக்குமணியே பர பர பர”, “என் உள்ளம் உந்தன் ஆராதனை”, “கேட்டுக்கோடி உருமி மேளம்”, “அடடா என்ன அழகு”, “நான் கண்ட கனவில் நீ இருந்தாய்”, “பால் தமிழ் பால்” போன்ற பாடல்கள் ஜெயலலிதாவிற்காக இவர் பாடிய பாடல்களில் குறிப்பிடும்படியானவை.
* டிஎம் சௌந்தர் ராஜனோடு “அவளுக்கென்ன அழகிய முகம்”, பிபி ஸ்ரீநிவாஸ் உடன் “ராஜ ராஜ ஸ்ரீராணி வந்தாள்”, எஸ்பிபியுடன் “ஆரம்பம் இன்றே ஆகட்டும்”, கேஜே ஏசுதாஸ் உடன் “ஹலோ மை டியர் ராங் நம்பர்”, ஜெயசந்திரனுடன் “மந்தார மலரே மந்தார மலரே”, ஜேபி சந்திரபாபுவுடன்; “பொறந்தாலும் ஆம்பளையா பொறக்க கூடாது” என இவர் இணைந்து பின்னணி பாடாத ஆண் பாடகர்களே இல்லை.
* “கட்டோடு குழலாட ஆட”, “மலருக்கு தென்றல் பகையானால்”, “தூது செல்ல ஒரு தோழி”, “கடவுள் தந்த இரு மலர்கள்”, “உனது மலர் கொடியிலே” என பி சுசிலாவுடன் இவர் குழைந்து பாடிய காலத்தால் அழியா காவியப் பாடல்கள் பல உண்டு.
* மார்கழி மாதங்களில் இவர் குரல் ஒலிக்காத அம்மன் கோயில்களே இல்லை எனும் அளவிற்கு அம்மன் துதி பாடும் இவரது அம்மன் பாடல்கள் பிரசித்தி பெற்றவை.
* “மாரியம்மா எங்கள் மாரியம்மா”, “செல்லாத்தா செல்ல மாரியாத்தா”, “கற்பூர நாயகியே கனகவல்லி” போன்ற இவரது அம்மன் பாடல்கள், தெய்வ நம்பிக்கை அற்றவர்களையும் அசைத்துப் பார்க்கும் வல்லமை பெற்ற பாடல்கள்.
* இசைக்கு வயதில்லை என்பதை நிரூபிக்கும் வண்ணம், 2011ம் ஆண்டு “ஒஸ்தி” படத்தில் “கலசலா கலசலா”, 2012ல் “தடையறத் தாக்க” படத்தில் “நான் பூந்தமல்லி”, 2013ல் “ஆர்யா சூர்யா” படத்தில் “தகடு தகடு” 2020ல் “மூக்குத்தி அம்மன்' படத்தில் “ஆடிக் குத்து” என இன்றுவரை தனது இசைப்பயணத்தை தொடருகிறார்.
* தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என அனைத்து மொழிகளிலும் பாடி தனது கந்தர்வக் குரலால் ரசிக உள்ளங்களை வென்றெடுத்தார்.
முறையான சங்கீத பயிற்சி ஏதுமின்றி, முயற்சி ஒன்றையே மூலதனமாக்கி, முடியும் என்ற தன்னம்பிக்கை கொண்டு, இசை உலகின் முடிசூடா ராணியாக, தென்னிந்திய திரையிசை உலகின் 'வானம்பாடி'யாக வலம் வரும் எல்ஆர் ஈஸ்வரி, இசையோடு இசைந்து வாழ இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்.