அட்லியின் அடுத்த படம் : வெளியானது புதிய அப்டேட் | அஜித்தின் குட் பேட் அக்லி படப்பிடிப்பு விரைவில் முடிவடைகிறது | சூர்யாவின் கர்ணா ஹிந்தி படம் டிராப்பா? | டில்லியில் சிறிய அளவில் பிறந்தநாள் கொண்டாடிய நயன்தாரா | 2024ல் அதிகம் பேர் பார்த்த படமாக 'அமரன்' | வாரணாசி கோவிலுக்கு சென்று வழிபட்ட ஸ்ரீலீலா | சங்கராந்தியில் ஒரு 'ஷங்கரா'ந்தி : கேம் சேஞ்சர் டப்பிங்கில் வியந்த எஸ்.ஜே.சூர்யா | 6 வருடங்களில் 6வது முறையாக பஹத் பாசிலுடன் இணைந்த இயக்குனர் | நான் தற்கொலை செய்தால் அரசு தான் பொறுப்பு : நடிகர் முகேஷ் மீது பாலியல் புகார் அளித்த நடிகை விரக்தி | தம்பிக்கு கை கொடுத்தவர்கள் அண்ணனை கவிழ்த்தது ஏன் ? வைராலகும் மீம்ஸ் |
நாடகம், சினிமா, சட்டம், அரசியல், பத்திரிகை என பல துறைகளிலும் தடம் பதித்து நிபுணத்துவம் பெற்றவரும், "அரசியல் நய்யாண்டி"யின் ஆணி வேருமான நடிகர் சோவின் 6ம் ஆண்டு நினைவு தினம் இன்று... கலை, அரசியல் உலகின் சகாப்தமான ‛சோ' ராமசாமியின் நினைவலைகளை பார்க்கலாம்...
* 1934ல் அக்., 5ம் தேதி, சென்னையில் ஸ்ரீநிவாச ஐயர் - ராஜம்மாள் தம்பதியினருக்கு மகனாக சோ பிறந்தார். இவரது இயற்பெயர் ஸ்ரீநிவாச ஐயர் ராமசாமி.
* சென்னை பிஎஸ் உயர்நிலைப் பள்ளியில் பள்ளிப் படிப்பையும், லயோலா, விவேகானந்தா கல்லூரியில் பட்டப்படிப்பையும் முடித்தார்.
* சென்னை சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்ற இவர், 1957 முதல் 1962 வரை 5 ஆண்டு சென்னை ஐகோர்ட்டில் வக்கிலாகவும் வேலை பார்த்தார்.
* டிடிகே நிறுவனங்களின் சட்ட ஆலோசகராகவும் இருந்துள்ளார். "கல்யாணி" என்ற மேடை நாடகத்தின் மூலம் நாடக நடிகராகவும் அறியப்பட்டார்.
* பகீரதன் என்பவர் எழுதிய "தேன் மொழியாள்" என்ற நாடகத்தில் இவர் ஏற்று நடித்த கதாபாத்திரத்தின் பெயர் 'சோ'. பின்னாளில் அதுவே அவரது பெயராக நிலைத்தது.
* "பெற்றால்தான் பிள்ளையா" என்ற மேடை நாடகத்தில் கார் மெக்கானிக்காக நடித்திருந்தார் சோ. அதே நாடகம் "பார் மகளே பார்" என்ற பெயரில் திரைப்படமாக வந்தபோதும் அதே கார் மெக்கானிக்காக நடித்து சினிமாவில் அறிமுகமானார்.
* தொடர்ந்து "மறக்க முடியுமா", "தேன்மழை", "நினைவில் நின்றவள்", "மனம் ஒரு குரங்கு", "கலாட்டா கல்யாணம்", "பொம்மலாட்டம்" என ஏராளமான படங்களில் நகைச்சுவை நடிகராக வலம் வந்தார்.
* மற்ற நகைச்சுவை நடிகர்களிடமிருந்து முற்றிலும் மாறுபட்ட நடிப்பையும், உடல் மொழியையும், வசன உச்சரிப்பையும் வெளிப்படுத்தினார் சோ.
* அரசியல் கிண்டல், நய்யாண்டியோடு வந்த இவரது படங்களின் நகைச்சுவை, ரசிகர்கள் மட்டுமின்றி சக நடிகர்களையும் கவர்ந்தது.
* 1970ல் "துக்ளக்" என்ற பெயரில் வார இதழ் ஒன்றை துவங்கி, பத்திரிகை துறையில் தடம் பதித்தார்.
* அரசியல் தலைவர்களை தனக்கே உரித்தான நய்யாண்டியோடு விமர்சனம் செய்தார். உண்மை என தோன்றியதையும் எழுதத் தயங்கவில்லை அவரது பேனா.
* எம்ஜிஆர், சிவாஜி, ஜெமினி கணேசன், ஜெயலலிதா, ஜெய்சங்கர், முத்துராமன், ரஜினி, கமல் என பல பிரபலங்களுடன் 200 படங்கள் நடித்துள்ளார்.
* "முகமது பின் துக்ளக்", "உண்மையே உன் விலை என்ன?", "மிஸ்டர் சம்பத்", "யாருக்கும் வெட்கமில்லை" ஆகிய படங்களுக்கு கதை வசனம் எழுதி இயக்குனராகவும் தன்னை வெளிப்படுத்தினார்.
* "நீலகிரி எக்ஸ்பிரஸ்", "ஆயிரம் பொய்", "நிறைகுடம்", "பொம்மலாட்டம்", "நினைவில் நின்றவள்" ஆகிய படங்களுக்கு திரைக்கதை, வசனம் எழுதி உள்ளார்.
* 20 நாடகங்களை எழுதி, நடித்தும் இருக்கிறார். 27 டிவி தொடர்களுக்கு எழுதி, நடித்து சின்னத்திரையிலும் தனி முத்திரை பதித்தார் சோ.
* முன்னாள் முதல்வர் மறைந்த ஜெயலலிதாவின் நெருங்கிய நண்பரான இவர் அவருக்கு அரசியல் ஆலோசனைகளையும் வழங்கி உள்ளார்.
* எந்த அரசியல் கட்சையும் சாராதவராக இருந்த இவர் பா. ஜ.க., தலைவர்களிம் மட்டும் அதிகம் நெருக்கம் காட்டி வந்தார்.
* மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயால் மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு, 1999 முதல் 2005 வரை பொறுப்பு வகித்தார் சோ.
* "ஹால்டி காட்டி விருது", "வீர கேசரி" விருது, "கொயாங்கா விருது", "நச்சிக்கேதஸ் விருது" போன்ற விருதுகளை பெற்றுள்ளார்.
* 2016ல் உடல் நலம் பாதிக்கப்பட்டு, சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டசோ, சிகிச்சை பலனின்றி 82வது வயதில் காலமானார்.
* சோ மரணிப்பதற்கு இரு நாள் முன்னர் தான், ஜெயலலிதா அதே அப்பல்லோ மருத்துவமனையில் மரணித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
* சோவின் மரணத்திற்குப் பின் 2017ல் "பத்மபூஷண் விருது" வழங்கி இந்திய அரசு கவுரவித்தது.
* சோவின் அரசியல் நய்யாண்டியை எதிர்பார்த்த அரசியல் தலைவர்கள் ஏராளம் என்பது நிதர்சனமான உண்மை.
நடிகர், நாடக கதாசிரியர், வக்கீல், பத்திரிகையாளர், அரசியல் ஆலோசகர், திரைக்கதாசிரியர், இயக்குநர் என்று பல்துறை வல்லுநராக வாழ்ந்து காட்டிய சோ, கலை மற்றும் அரசியல் உலகின் ஒரு சகாப்தம் என்றால் அது மிகையன்று.