ஏ.ஆர்.ரஹ்மான் வழக்கறிஞர் எச்சரிக்கை | ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாகும் ‛ஸ்டார்' பட நடிகை | நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படப்பிடிப்பு நிறைவு பெற்றது | துப்பாக்கிய பிடிங்க : விஜய்யின் பெருந்தன்மை - சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | விஷ்ணு விஷால் படத்தில் நிகழ்ந்த மாற்றம் | புஷ்பா 2 டிரைலர் - தெலுங்கை விட ஹிந்திக்கு அதிக வரவேற்பு | அட்லியின் அடுத்த படம் : வெளியானது புதிய அப்டேட் | அஜித்தின் குட் பேட் அக்லி படப்பிடிப்பு விரைவில் முடிவடைகிறது | சூர்யாவின் கர்ணா ஹிந்தி படம் டிராப்பா? | டில்லியில் சிறிய அளவில் பிறந்தநாள் கொண்டாடிய நயன்தாரா |
மலையாள திரையுலகில் முன்னணி தயாரிப்பாளராக இருப்பவர் சுரேஷ்குமார். இவர் சீனியர் நடிகை மேனகாவின் கணவர் மற்றும் நடிகை கீர்த்தி சுரேஷின் தந்தை என்கிற அடையாளங்களையும் கொண்டவர். பெரும்பாலும் மலையாள திரையுலகில் தயாரிப்பாளர்களுக்கு ஒரு பிரச்னை என்றால் இவரது குரல் தான் முதல் ஆளாக ஒலிக்கும். இந்தநிலையில் மலையாள திரையுலகில் வளர்ந்துவரும் இளம் நடிகர்கள் மீது பல குற்றச்சாட்டுகளை அடுக்கியுள்ளார் சுரேஷ்குமார்.
இதுபற்றி அவர் கூறும்போது, “இன்றைக்கு கேரவன் என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. முன்பெல்லாம் ஒரு படத்திற்கு ஒன்றிரண்டு கேரவன் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில் இன்று குறைந்தபட்சம் நான்கைந்து கேரவன்கள் ஒரு படப்பிடிப்பில் நிற்கின்றன. முன்னணி ஹீரோக்கள், ஹீரோயின்கள் மட்டுமே கேரவன் பயன்படுத்திய நிலையில் தற்போது ஒரு படத்தில் நடித்த ஹீரோ கூட கேரவன் வேண்டும் என்கிறார். அதுமட்டுமல்ல படப்பிடிப்பு நடக்கும் இடங்களுக்கு அருகில் கேரவன் செல்ல முடியாமல் சற்று தொலைவில் இருந்தால் கூட அங்கிருந்து இறங்கி நடந்து படப்பிடிப்பிற்கு செல்வதற்கு கூட அவர்கள் விரும்புவதில்லை. இதற்காக சில நடிகர்கள் லொக்கேஷனையே மாற்றச் சொல்லி முரண்டு பிடிப்பதாக தயாரிப்பாளர் சங்கத்திற்கு சில குற்றச்சாட்டுகள் அவ்வப்போது வருகின்றன.
அதுமட்டுமல்ல ஒரு படத்தில் இரண்டு அல்லது மூன்று வளரும் ஹீரோக்கள் நடித்தாலும் அவர்களுக்குள் ஒரு கேரவனை பகிர்ந்து கொள்ளவும் மனப்பான்மை கொஞ்சம் கூட இல்லை. ஆளுக்கு ஒரு கேரவன் வேண்டும் என கேட்கிறார்கள். பல வருடங்களுக்கு முன் மோகன்லால், மம்முட்டி இவர்கள் இணைந்து நடித்த சமயத்தில் கூட, ஒரே கேரவனை மட்டுமல்ல தாங்கள் தங்கியிருந்த ஓட்டல் அறையை கூட பகிர்ந்துகொண்டு பயன்படுத்தினார்கள். ஆனால் இன்று ஒரு வளரும் இளம் நடிகர் கூட தான் தங்குவதற்கு ஹோட்டலில் இரண்டு அறைகள் கேட்கிறார் என்னும் அளவிற்கு நிலைமை மோசமாக இருக்கிறது.
குறிப்பாக இப்போது உள்ளவர்கள் பலரும் நடிகராகும் ஆர்வத்துடன் சினிமாவிற்குள் நுழைகிறார்கள் என்றால் அவர்களது முதல் குறிக்கோள் பணமாகத்தான் இருக்கிறது. நடிப்பின் மீதான அர்ப்பணிப்பு என்பது அதற்கு அடுத்தது தான். தயாரிப்பாளர்களை பற்றி அவர்கள் கொஞ்சமும் சிந்திப்பதில்லை. அப்படி தயாரிப்பாளர்களிடம் கடுமையாக நடந்துகொண்ட இரண்டு இளம் நடிகர்கள் மிகப்பெரிய குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகி அவர்கள் மீது தடை விதிக்கும் அளவுக்கு நிலைமை சீரியஸாக சென்றது.
இன்னும் சில நாட்களில் இது பற்றியெல்லாம் பேசுவதற்கு தயாரிப்பாளர்கள் சங்கம் கூட்டம் நடத்த இருக்கிறது. அதில் சில புதிய முடிவுகள் எடுக்கப்பட இருக்கின்றன” என்று கூறியுள்ளார் சுரேஷ்குமார்.