விளம்பரத்திற்காக விபரீதத்தை விலைக்கு வாங்கும் தியேட்டர்கள்
04 ஏப், 2022 - 12:40 IST
சென்னை : சமீபகாலமாக பிரபல நடிகர்களின் படங்களின் டீசர், டிரைலர்களை தங்களது தியேட்டர்களில் திரையிடுகிறேன் என்ற பெயரில் பப்ளிசிட்டி செய்து விபரீதத்தை விலைக்கு வாங்கி வருகின்றனர் தியேட்டர்கள் உரிமையாளர்கள்.
ரஜினிகாந்த், விஜய், அஜித் போன்ற பல முன்னணி நடிகர்களின் படங்கள் வெளியாகும் சமயத்தில் சம்பந்தப்பட்ட நடிகர்களின் ரசிகர்கள் உற்சாக மிகுதியில் திளைப்பர். படம் சம்பந்தப்பட்ட பல விஷயங்களை சமூகவலைதளங்களில் டிரெண்ட் செய்வதோடு தியேட்டர்களில் பேனர், பிளக்ஸ் என்று தங்களது கொண்டாட்டத்தை வெளிப்படுத்துவர். இப்போது ரசிகர்களை தாண்டி தியேட்டர் உரிமையாளர்களை இதுபோன்ற கொண்டாட்டத்திற்கு வழி வகுத்து அதில் உள்ள அசம்பாவிதங்களை உணராமல் வம்பை விலைக்கு வாங்கி வருகின்றனர்.
சமீபகாலமாக பிரபல நடிகர்களின் படங்களின் டீசர், டிரைலர்களை தங்களது தியேட்டர்களில் திரையிடுவதாக கூறி அதிகளவில் கூட்டத்தை ஏற்படுத்தி வருகின்றனர். இன்னும் சில தியேட்டர் உரிமையாளர்கள் தங்கள் தியேட்டர்களின் வளாகத்தில் பெரிய எல்இடி திரைகளை வைத்து டீசர், டிரைலர்களை திரையிட்டு கூட்டத்தை சேர்க்கின்றனர். இது ஒரு பக்கம் தங்களது தியேட்டர்களுக்கு ரசிகர்களை வர வைக்க ஒரு விதமான பப்ளிசிட்டி என்றாலும் இதில் உள்ள பிரச்னையை உணராமல் உள்ளனர் தியேட்டர்கள் உரிமையாளர்கள்.
நெல்சன் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே நடித்துள்ள பீஸ்ட் படத்தின் டிரைலர் கடந்த சனிக்கிழமை அன்று யு-டியூப்பில் வெளியானது. அந்த டிரைலரை சில தியேட்டர்களில் ரசிகர்களுக்காக இலவசமாகத் திரையிட்டனர். 500 பேர் அளவிற்கு அமரக் கூடிய தியேட்டர்களில் ஆயிரக்கணக்கானோரை உள்ளே அனுமதித்துள்ளன சில தியேட்டர்கள்.
திருநெல்வேலியில் உள்ள தியேட்டரில் இது போல டிரைலரைத் திரையிட்டுள்ளனர். நூற்றுக்கணக்கானோர் தியேட்டருக்குள் சென்று டிரைலரைப் பார்த்துள்ளனர். டிரைலர் திரையீடு முடிந்த பின் பார்த்தால் பெரும்பாலான இருக்கைகளை நாசம் செய்துள்ளனர் ரசிகர்கள். இதனால் அந்த தியேட்டர் உரிமையாளருக்கு பல லட்சம் நஷ்டமாகி உள்ளது.
அது பற்றிய தகவல் சினிமா தியேட்டர் வட்டாரங்களில் பரவியது. பின் அது குறித்து தியேட்டர் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் பேசியுள்ளார். அதில் இம்மாதிரியான டிரைலர் திரையிடல்களை சம்பந்தப்பட்ட தியேட்டர்காரர்கள் நிறுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார். குறிப்பிட்ட அளவு மக்களே உள்ளே அமரக் கூடிய தியேட்டர்களில் இப்படி அளவுக்கதிகமாக மக்களை அனுமதிக்கக் கூடாது என்றும், அதனால் ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டால் அதற்கு தியேட்டர்காரர்களே பொறுப்பேற்க வேண்டிய சூழல் ஏற்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
பல வருடங்களுக்கு முன்பு 'இணைந்த கைகள்' படம் வெளிவந்த போது கோயம்பத்தூரில் உள்ள ஒரு தியேட்டரில் படம் பார்க்க கட்டுக்கடங்காத கூட்டம் வந்த போது நெரிசலில் சிக்கி இரண்டு பேர் மரணம் அடைந்தனர். அதன்பின் அந்த தியேட்டரின் லைசென்ஸ் ரத்து செய்யப்பட்டது. கடும் போராட்டத்திற்குப் பிறகே லைசென்ஸ் பெற முடிந்தது என்பதையும் ஞாபகப்படுத்தி உள்ளார். ரசிகர்களை மகிழ்விப்பதற்காக இப்படி நடந்து கொள்ளும் தியேட்டர்காரர்கள் அதனால் ஏதாவது அசம்பாவிதங்கள் நடந்தால் என்ன ஆகும் என்பதை யோசித்துப் பார்க்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.
திருப்பூர் சுப்பிரமணியம் சொல்வது நியாயமான ஒரு கோரிக்கை தான். திரைப்படங்களைத் திரையிட மட்டுமே தியேட்டர்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. டிரைலரைத் திரையிட எந்த அனுமதியும் வழங்கப்படுவதில்லை. 500 பேர் அமரும் இடத்தில் ஆயிரக்கணக்கானோர் வருவதை எப்படி அனுமதிக்கிறார்கள் என்று தெரியவில்லை. இப்படி நடந்து கொள்ளும் தியேட்டர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்குமா என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.
இதேப்பால் சென்னையில் உள்ள ரோகிணி திரையரங்க வளாகத்தில் பெரிய டிஜிட்டல் ஸ்கிரீன் அமைக்கப்பட்டு அங்கு 'பீஸ்ட்' டிரைலர் திரையிடப்பட்டது. நூற்றுக்கணக்கான ரசிகர்கள் ஒரே நேரத்தில் அந்த வளாகத்தில் திரண்டதால் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. சென்னையின் முக்கிய சாலையான பூந்தமல்லி நெடுங்சாலையில்தான் அந்த தியேட்டர் அமைந்துள்ளது. அலுவலகம் முடிந்து வீட்டுக்குச் செல்பவர்கள் அன்றைய தினம் அவஸ்தைப்பட்டுள்ளனர். இது போல தமிழகம் முழுவதும் பல தியேட்டர்களில் நடந்துள்ளது. ஒரே நேரத்தில் இவ்வளவு பேர் கூடுவதற்கு காவல்துறை அனுமதியைப் பெற்றார்களா என்பதும் தெரியவில்லை. ஆளும் கட்சியின் ஆதரவு தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கும் படம், முதல்வர் ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலினின் நிறுவனம் வெளியிடும் படம் 'பீஸ்ட்' என்பதால் காவல் துறை கடுமையாக நடந்து கொள்ளவில்லை என்றும் மக்கள் புலம்புகிறார்கள்.
டிரைலர் வெளியீட்டிற்கே இப்படி என்றால் படம் வெளியாகும் நாளில், அதிகாலை சிறப்புக் காட்சி என்ற பெயரில் இப்படம் வெளியாக உள்ள தியேட்டர் இருக்கும் ஏரியாக்களில் போக்குவரத்து பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. அதற்காவது காவல்துறையினர் முன்கூட்டியே நடவடிக்கை எடுப்பார்களா என்ற எதிர்பார்ப்பும் மக்களிடம் எழுந்துள்ளது.