இளம் நடிகருடன் காதலா? - கோட் நடிகை விளக்கம் | ஏஆர் ரஹ்மான் பிரிவுக்கும், மோகினி டே பிரிவுக்கும் சம்பந்தம் இல்லை: சாய்ரா பானு வழக்கறிஞர் விளக்கம் | என் மகளை மீட்டு தந்தது செட்டிக்குளங்கரா தேவி தான் : நயன்தாரா அம்மா உருக்கம் | மலையாள வாரிசு வில்லன் நடிகர் மேகநாதன் மறைவு | கிஸ் படத்திலிருந்து அனிரூத் விலகலா? | சம்பந்தி இது சரியில்லை : ‛ராஜாகிளி' பட விழாவில் அர்ஜூன் கலாட்டா | ராம் பொதினேனிக்கு ஜோடியான பாக்யஸ்ரீ போர்ஸ் | சிவகார்த்திகேயனுக்கு வில்லனா? மறுப்பு தெரிவித்த விஷால் | ஹாலிவுட் மியூசிக் மீடியா விருது: ஆடுஜீவிதம் பின்னணி இசைக்காக வென்றார் ஏ.ஆர்.ரஹ்மான் | விஜய் 69வது படத்தில் இணையும் வரலட்சுமி |
காதல் பாடலாகட்டும்..., சிருங்கார பாடலாகட்டும்..., சோகப் பாடலாகட்டும்..., துள்ளல் போடும் ராப் பாடலாகட்டும்..., பக்தி மனம் கமலும் தெய்வீக பாடலாகட்டும்... எந்த மாதிரியான பாடல்களையும் தனது மயக்கும் குரலால் ரசிகர்களை ஈர்த்தவர்
எல்.ஆர்.ஈஸ்வரி. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, துளு மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் எண்ணற்ற பாடல்களை பாடி உள்ளார். 1939ம் ஆண்டு டிச., 7ல் பிறந்த இவர் இன்று(டிச.,7) தனது 82வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவரைப்பற்றிய சிறு தொகுப்பு....
சென்னை எழும்பூரில் உள்ள பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்தவர் எல்.ஆர்.ஈஸ்வரி. படிக்கும் காலங்களிலேயே பள்ளி நிகழ்ச்சிகளில் எல்லாம் பாடியிருக்கின்றார். ஜிக்கி பாடிய பச்சைக்கிளி பாடுது (அமரதீபம்) எனை ஆளும் மேரி மாதா (மிஸ்ஸியம்மா) போன்ற தமிழ் திரைப்படப் பாடல்களையும் பிரபலமான இந்தி படப்பாடல்களையும் எல்.ஆர்.ஈஸ்வரி பாடுவது வழக்கமாக இருந்தது. இவரது தாயார் ரெஜினா மேரி நிர்மலாவும், ஜெமினி ஸ்டூடியோவில் கோரஸ் பாடகராக இருந்து வந்ததால் பாடும் திறமை இவருக்கு இயற்கையாகவே இருந்தது.
தாயார் கோரஸ் பாட செல்லும் போதெல்லாம் கூடவே எல்.ஆர்.ஈஸ்வரியும் செல்வது வழக்கமாக இருந்தது. எஸ்.வி.வெங்கட்ராமனின் இசையில் 'மனோகரா' திரைப்படத்திற்காக 'இன்ப நாளிதே இதயம் பாடுதே' என்ற பாடலை ஜிக்கி பாட இருக்க, அன்று கோரஸ் பாட யாரும் கிடைக்கவில்லை. தன் அம்மாவிற்கு சொல்லி கொடுத்ததை எல்.ஆர்.ஈஸ்வரி பாடிக்கொண்டிருக்க இதை கவனித்த எஸ்.வி.வெங்கட்ராமன் எல்.ஆர்.ஈஸ்வரியை ஏதாவது பாட்டு பாட சொன்னார்.
லதா மங்கேஷ்கர் பாடிய 'பச்பன் கே தின் புலான தேனா' என்ற இந்தி படப்பாடலை எல்.ஆர்.ஈஸ்வரி பாடிக்காட்ட அன்றிலிருந்து எல்.ஆர்.ஈஸ்வரியும் கோரஸ் பாடகியாக தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்தப்பட்டார். எல்.ஆர்.ஈஸ்வரி முதன் முதலாக தனிப்பாடல் பாட வாய்ப்பளித்தவர் இசையமைப்பாளர் கே.வி.மஹாதேவன். 'நல்ல இடத்து சம்பந்தம்' என்ற படத்தில் 'இவரே தான் அவரு அவரே தான் இவரு' என்ற பாடலை பாடினார். 1958ல் வெளிவந்த இந்த திரைப்படத்தை இயக்கியவர் இயக்குநர் ஏ.பி.நாகராஜன்.
இந்த படத்திலிருந்து தான் எல்.ராஜேஸ்வரி என்றிருந்த இவருடைய பெயர் எல்.ஆர்.ஈஸ்வரி என்று ஏ.பி.நாகராஜனால் மாற்றப்பட்டது. பிறகு 1961-ல் வெளிவந்த 'பாசமலர்' திரைப்படத்திற்காக எம்.எஸ்.விஸ்வநாதன் - ராமமூர்த்தி இவர்களது இசையில் வெளிவந்த 'வாராய் என் தோழி வாராயோ' என்ற பாடல் தான் இவரது திரைப்பயணத்தில் ஒரு திருப்புமுனைப்பாடலாக அமைந்தது. இந்தப் பாடலைக் கேட்ட இசையமைப்பாளர் கே.வி.மஹாதேவன் எல்.ஆர்.ஈஸ்வரியிடம்; ராஜா நீ தம்பி விசுகிட்ட பாடியிருக்க பாரு… 'வாராய் என் தோழி வாராயோ' என்று ஒரு பாட்டு அந்த பாட்டாலே உன் வருங்காலமே பிரகாசமாக ஆகப் போகிறது என்று கூறியிருக்கின்றார். அவரின் வாக்குப்படி பின்னாளில் பிரபல பாடகியாக வலம் வந்தார்.
நகைச்சுவைப் பாடல்களாகட்டும், காதல் பாடல்களாகட்டும், சிருங்காரப் பாடல்களாகட்டும், சோகப் பாடல்களாகட்டும், இல்லை வெறும் ஹம்மிங் ஆகட்டும் அனைத்திலும் தனக்கென ஒரு தணிப்பாணியை ஏற்படுத்தி தமிழ் திரையுலகில் சிம்மாசனமிட்டு அமர்ந்திருந்தார். டி.எம்.சௌந்தர்ராஜன் பி.பி.ஸ்ரீனிவாஸ், ஏ.எம்.ராஜா, சீர்காழி கோவிந்தராஜன், ஏ.எல்.ராகவன், ஜே.பி.சந்திரபாபு, சி.எஸ்.ஜெயராமன், திருச்சி லோகநாதன், எஸ்.சி.கிருஷ்ணன், கே.ஜே ஏசுதாஸ், எஸ்.பி.பாலசுப்ரமணியம், மலேசியா வாசுதேவன், ஜெயசந்திரன், பி.சுசிலா, எஸ்.ஜானகி, கே.ஜமுனா ராணி, எம்.எஸ்.ராஜேஸ்வரி, வாணி ஜெயராம், சூலமங்கலம், ராஜலஷ்மி போன்ற அன்றைய முன்னணி பாடகர்களுடன் சேர்ந்து பல பாடல்கள் பாடி தமிழ் நெஞ்சங்களை ஈர்த்திருக்கின்றார்.
மேலும் ஏராளமான பக்திப் பாடல்களும் பாடியிருக்கின்றார். குறிப்பாக அம்மன் பாடல்கள் என்றால் இன்றளவும் ரசிகர்கள் மனதில் எல்.ஆர்.ஈஸ்வரி நீக்கமற நிறைந்திருக்கின்றார் என்றால் அது மிகையல்ல. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, துளு மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் எண்ணற்ற பாடல்களை பாடி இன்றளவும் நம்மை மகிழ்வித்துக் கொண்டிருக்கின்றார். இந்த வயதிலும் இவர் பாடி வருகிறார். கடந்தாண்டு ஆர்.ஜே.பாலாஜி, நயன்தாரா நடித்து ஓடிடியில் வெளியான மூக்குத்தி அம்மன் படத்தில் மூக்குத்தி அம்மன் பாடலை பாடியிருந்தார்.
எல்.ஆர்.ஈஸ்வரி பாடிய பிரபல தமிழ் பாடல்கள்....
1. வாராய் என் தோழி வாராயோ - பாசமலர்
2. அம்மாடி கேளடி தோழி - கருப்பு பணம்
3. ஆடவரலாம் ஆடவரெல்லாம் - கருப்பு பணம்
4. கண்ணிரண்டும் மின்ன மின்ன - ஆண்டவன் கட்டளை
5. முத்துக்குளிக்க வாரியளா - அனுபவி ராஜா அனுபவி
6. அடி என்னடி உலகம் - அவள் ஒரு தொடர்கதை
7. நினைத்தாலே இனிக்கும் சுகமே - பில்லா
8. சந்திப்போமா இன்று சந்திப்போமா - சித்தி
9. சொர்கம் பக்கத்தில் - எங்க மாமா
10. மலருக்கு தென்றல் பகையானால் - எங்க வீட்டுப் பிள்ளை
11. கண்களும் காவடி - எங்க வீட்டுப் பிள்ளை
12. நான் மாந்தோப்பில் - எங்க வீட்டுப் பிள்ளை
13. மௌனம் தான் பேசியதோ - எதிர்காலம்
14. அதிசய உலகம் - கௌரவம்
15. சித்திரப் பூவிழி வாசலிலே - இதயத்தில் நீ
16. புத்திசிகாமணி பெற்ற பிள்ளை - இருவர் உள்ளம்
17. மெல்லப் பேசுங்கள் - காசேதான் கடவுளடா
18. மலரென்ற முகம் - காதலிக்க நேரமில்லை
19. கடவுள் தந்த இரு மலர்கள் - இரு மலர்கள்
20. செல்வங்கள் எங்கே - கண்ணம்மா
21. மின்மினியை கண்மணியாய் - கண்ணன் என் காதலன்
22. ஆரம்பம் இன்றே ஆகட்டும் - காவியத் தலைவி
23. துள்ளுவதோ இளமை - குடியிருந்த கோயில்
24. உன் விழியும் என் வாளும் - குடியிருந்த கோயில்
25. வருசத்த பாரு அறுபத்தி ஆறு - குமரிப் பெண்
26. யாரோ ஆட பிறந்தவர் யாரோ - குமரிப் பெண்
27. பட்டிக்காடா பட்டணமா - மாட்டுக்கார வேலன்
28. ஹலோ மை டியர் ராங் நம்பர் - மன்மத லீலை
29. வந்தால் என்னோடு இங்கே வா தென்றலே - நான்
30. அம்மனோ சாமியோ - நான்
31. நினைத்ததை நடத்தியே முடிப்பவன் - நம் நாடு
32. அடடா என்ன அழகு - நீ
33. எனக்கு வந்த இந்த மயக்கம் - நீ
34. ஓ… சின்னஞ்சிறு மலரை மறந்து விடாதோ - நீங்காத நினைவு
35. நீ நினைத்தால் - நிலவே நீ சாட்சி
36. இனிமை நிறைந்த உலகம் இருக்கு - நினைத்தாலே இனிக்கும்
37.; ஆனந்த தாண்டவமோ - நினைத்தாலே இனிக்கும்
38. ருக்குமணியே பர பர - ஒளி விளக்கு
39. நான் கண்ட கனவில் - ஒளி விளக்கு
40. ராஜ ராஜ ஸ்ரீ ராணி வந்தாள் - ஊட்டி வரை உறவு
41. உனது மலர் கொடியிலே - பாதகாணிக்கை
42. ஒன்று எங்கள் ஜாதியே - பணக்கார குடும்பம்
43. எலந்த பழம் எலந்த பழம் - பணமா பாசமா
44. முத்தமோ மோகமோ - பறக்கும் பாவை
45. வாங்கடி சிட்டுக்களா - பட்டினப் பிரவேசம்
46. நூறாண்டு காலம் வாழ்க - பேசும் தெய்வம்
47. பொறந்தாலும் ஆம்பளையா பொறக்க கூடாது - போலீஸ்காரன் மகள்
48. இது மார்கழி மாதம் - பிராப்தம்
49. கண்ணில் தெரிகின்ற வானம் - ரகசிய போலீஸ் 115
50. பால் தமிழ் பால் - ரகசிய போலீஸ் 115
51. நான் உயிருக்கு - ராஜா
52. என் உள்ளம் உந்தன் ஆராதனை - ராமன் தேடிய சீதை
53. முத்தாரமே உன் ஊடல் - ரங்கராட்டினம்
54. பொன்னழகு பென்மை சிந்தும் - ரிக்ஷாக்காரன்
55. சிலர் குடிப்பது போலே நடிப்பார் - சங்கே முழங்கு
56. நான் சொல்லித்தர என்ன உள்ளதோ - சங்கே முழங்கு
57. வெண்ணிலா முகம் - செல்வ மகள்
58. அவளுக்கென்ன அழகிய முகம் - சர்வர் சுந்தரம்
59. பெண்ணைப் பார்த்தும் ஏன் பேச்சு வரவில்லை - சாந்தி நிலையம்
60. பட்டத்து ராணி பார்க்கும் பார்வை - சிவந்த மண்
61. நீ என்னை விட்டு போகாதே - சிரித்து வாழ வேண்டும்
62. பாண்டியன் நானிருக்க - தில்லானா மோகனாம்பாள்
63. பன்சாயி காதல் பறவைகள் - உலகம் சுற்றும் வாலிபன்
64. தேனாற்றங்கறையினிலே - உத்தரவின்றி உள்ளே வா
65. கண்டாலும் கண்டேனே - வல்லவனுக்கு வல்லவன்
66. குடிமகனே பெருங்குடி மகனே - வசந்த மாளிகை
67. பளிங்குனால் ஒரு மாளிகை - வல்லவன் ஒருவன்
68. அம்மம்மா கன்னத்தில் - வல்லவன் ஒருவன்
69. யாரடி வந்தார் - வானம்பாடி
70. அங்கம் புதுவித அழகினில் - வீட்டுக்கு வீடு
71. காதோடுதான் நான் பாடுவேன் - வெள்ளி விழா
72. நீ என்பதென்ன - வெண்ணிறாடை
73. சீட்டுக்கட்டு ராஜா - வேட்டைக்காரன்
74. பார்வை ஒன்றே போதுமே - யார் நீ?
75. மூக்குத்தி அம்மனுக்கு... - மூக்குத்தி அம்மன்