கிரிக்கெட் வீரர் முரளிதரன் கதையை சினிமாவாக்க விடாமல் தடுத்தீர்களே.. அப்போது எங்கே போனது உங்கள் படைப்பு சுதந்திரம்?: அன்புமணி கேள்வி
19 நவ, 2021 - 06:51 IST
சென்னை : ‛‛இலங்கை கிரிக்கெட் வீரர் முரளிதரனின் வாழ்க்கை வரலாறை திரைப்படமாக எடுக்க முயற்சித்தபோது, தடுத்தீர்களே! அப்போது எங்கே போனது உங்கள் படைப்பு சுதந்திரம்" என்று சினிமா இயக்குனர் பாரதிராஜாவிடம் கேள்வி எழுப்பியுள்ளார் பா.ம.க எம்.பி., அன்புமணி.
சூர்யா நடித்து, தயாரித்து நவ., 2ல் ஓடிடியில் வெளியான படம் ‛ஜெய்பீம். இப்படத்திற்கு ஒருபக்கம் பாராட்டுகள் கிடைத்தாலும், கடுமையான சர்ச்சைகளையும் ஏற்படுத்தின. குறிப்பாக தங்களது சமூகத்தை இழிவுப்படுத்தியதாக பா.ம.க.வின் அன்புமணி மற்றும் வன்னியர் சங்க அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன.
இந்த விஷயத்தில் அன்புமணிக்கு பாரதிராஜா கடிதம் எழுதி இருந்தார். அதில், ‛‛ஒரு படைப்பின் சுதந்திரத்தை அதன்படியே விட்டுவிடுவது இன்னும் அதிகமான நல்ல படைப்புகளைக் கொண்டு வர உதவும். சினிமாவை விட இங்கு கவனம் செலுத்த நிறைய வேலைகள் இருக்கின்றன. தங்கள் தகுதிக்கு நீங்கள் இங்கு வரவேண்டாமே. எங்கள் திரைத்துறையை விட்டுவிடுங்கள். யாருக்குப் பயந்து படம் எடுக்க வேண்டும் எனத் தெரியவில்லை. இப்படியே போனால் ஒவ்வொரு அரசியல்வாதிகளின் வாசல்களிலும் எங்கள் படைப்பாளிகள் கதை சொல்லக் காத்திருக்க வேண்டுமோ என்ற அச்சம் ஏற்படுகிறது. நீங்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க மாற்றங்களும் செய்யப்பட்டிருக்கிறது. திரைத்துறையை அதன் இயல்பில் இயங்க விட கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்திருந்தார்
பாராதிராஜாவுக்கு பதிலளித்து அன்புமணி எழுதிய கடிதத்தின் சுருக்கம் வருமாறு....
ஒடுக்கப்பட்ட மக்கள் யாராக இருந்தாலும் அவர்களுடைய உரிமைகளுக்காக போராட வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்காது. ஜெய்பீம் படம் சர்ச்சை சாதிப் பிரச்னையோ, அரசியல் பிரச்சனையோ அல்ல. இது ஒரு சமூகப் பிரச்னை. வன்னியர் சமூகம் திட்டமிட்டு இழிவுபடுத்தப்படுவது தொடர்பான சமூகப் பிரச்னை. இந்தப் பிரச்னையில் உங்களுக்கும், திரைத்துறையினருக்கும் புரிதல் இல்லை என்பது வருத்தம் அளிக்கிறது.
ஜெய்பீம் படத்தில் சாதிவெறி பிடித்த, கொடுமைக்கார சைக்கோ காவல் உதவி ஆய்வாளர் (வில்லன்) இல்லத்தில் மாட்டியிருக்கும் காலண்டரில் வன்னியர்களின் அடையாளமான அக்னிக் குண்டம் இல்லாமல் நீங்கள் போற்றி வணங்கும் தேசியமும், தெய்வீகமும் எனது இரண்டு கண்கள் என்று முழக்கமிட்ட முத்துராம லிங்கத்தேவரின் படம் இருந்தால் நீங்களும், தேவர் சமுதாயமும் சும்மா இருப்பீர்களா? அல்லது கொங்கு மக்களால் கடவுளுக்கு இணையாக வழங்கப்படும் வீரத்தின் விளைநிலம் தீரன் சின்னமலையின் உருவப்படம் அச்சிடப்பட்ட நாட்காட்டி இருந்திருந்தால் அவர்கள் கொதித்து எழுந்து இருக்க மாட்டார்களா? அண்ணல் அம்பேத்கரின் புகைப்படம் இருந்திருந்தால் என்னவாகி இருக்கும்? படைப்புச் சுதந்திரம் என்று சும்மா இருந்திருப்பீர்களா? ஆனால் ஒன்றை மட்டும் சொல்கிறேன், மேற்கண்டவற்றில் எந்தக் காட்சி அந்தப் படத்தில் இடம் பெற்றிருந்தாலும் அதை கண்டித்தும் முதல் குரல் என்னிடமிருந்துதான் வந்திருக்கும்.
வானளாவிய படைப்பு சுதந்திரம் சூர்யாவுக்கு மட்டும்தானா? இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனுடைய வாழ்க்கை வரலாற்றைத் திரைப்படமாக எடுக்க முனைந்த விஜய் சேதுபதிக்கு அந்தப் படைப்புச் சுதந்திரம் மறுக்கப்பட்டது ஏன்? கடுமையான கண்டனக் கடிதத்தைத் தாங்கள் தான் எழுதியிருந்தீர்கள், நினைவு இருக்கிறதா?
சமீபத்தில் வெளியான பேமிலி மேன் 2 வெப்சீரிஸ் முழுவதும் தடை செய்ய வேண்டுமென்று கடுமையான எச்சரிக்கை விடுத்தீர்கள். அப்பொழுது எங்கே போயிற்று உங்கள் படைப்புச் சுதந்திரம்? கர்ணன் படத்தில் 1997ஆம் ஆண்டு என்று இருந்ததை மாற்றி 1990-களின் இறுதியில்” என்று போட வைத்தபோது, என்னவாயிற்று உங்கள் படைப்புச் சுதந்திரம்?
படைப்புச் சுதந்திரம் என்ற பெயரில் ஒட்டுமொத்த சமுதாயத்தையும் இழிவுபடுத்தும் வகையில் வன்னியர்களுக்கு புனிதமான அக்னிக் குண்டத்தை வைத்து சத்ரியர் என்ற அடிக்குறிப்பு போட்டு கொலையாளிகளாகக் காண்பித்தால் அதற்கு நீங்களும், திரைத்துறையினரும் ஆதரவு அளிக்கிறீர்களா?
எலி வேட்டை என்ற பெயரில் படத்தைத் தொடங்கி, தயாரித்து முடிக்கும் தருவாயில் பரபரப்புக்காக ஜெய்பீம் ஆக்கி பெயர் அரசியல் செய்து வியாபாரமாக்கியது நாங்கள் அல்ல. அந்தோணிசாமி என்று பெயர் வைப்பதற்கு பயந்து குருமூர்த்தி என்று பெயர் அரசியல் செய்து குறவர் சமுதாயத்தை இருளர் சமுதாயமாக மாற்றி, வட தமிழகத்தில் உள்ள இரண்டு பெரிய சமுதாயத்திற்கும் சாதிக் கலவரத்தைத் தூண்டி பெயர் அரசியல் செய்தது திரையுலகம்தானே தவிர, அந்த இரண்டு சமுதாயங்கள் அல்ல.
கொலை செய்யப்பட்டவரும் வன்னியர் அல்ல, கொலை செய்தவரும் வன்னியர் அல்ல, கொலை செய்யப்பட்டவருக்காக வழக்காடியவரும் வன்னியர் அல்ல, உதவி செய்தவர்கள் மட்டுமே வன்னியர்கள் என்று உண்மை நிலவரம் இருக்கும்போது, எதற்கு வன்னியரின் சின்னமான அக்னிக் குண்டத்தை கொலையாளியின் வீட்டில் மாட்டி வைத்தீர்கள்? என்ற நியாயமான கேள்வி கூடவா உங்கள் மனங்களில் எழவில்லை.
இது வெறும் காலண்டர் தானே என்று நீங்கள் சாதாரணமாக நினைக்கலாம். சுட்டிக்காட்டிய உடன் அந்த காட்சி நீக்கப்பட்டு விட்டது என்று சப்பைக்கட்டு கட்டலாம். ஆனால் ஏன் அந்த அக்னிக் குண்டத்தை அங்கு வைத்தீர்கள்? என்ற கேள்விக்கு இன்னும் பதில் வரவில்லை. இந்த விஷயத்தை நான் சுட்டிக்காட்டியபோது படக்குழுவினர் வருத்தம் தெரிவித்திருந்தால், இந்த விவகாரம் அன்றே முடிவுக்கு வந்திருக்கும். வன்னியர்களின் மனக்காயங்களுக்கு மருந்து போடாமல் அவர்களின் மனத் தீயை அணைக்க முடியாது. இந்தப் பிரச்னைக்குத் தீர்வு எங்கள் கைகளில் இல்லை.
இவ்வாறு அன்புமணி தெரிவித்துள்ளார்.