தெலுங்கில் சுகுமார் டைரக்சனில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா இணைந்து நடித்துள்ள படம் புஷ்பா. செம்மரக்கடத்தல் பின்னணியில் இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள இந்தப்படத்தின் முதல் பாகம் வரும் டிச-17ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்தப்படத்தை இந்தி மற்றும் தென்னிந்திய மொழிகள் நான்கிலும் சேர்த்து பான் இந்தியா படமாக வெளியிட ஏற்பாடுகள் நடந்து வந்தன. இந்தநிலையில் இந்தப்படத்தின் இந்தி வெர்ஷனை தியேட்டர்களில் வெளியிட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதால் இந்தப்படம் பான் இந்தியா ரிலீஸ் என்கிற பெருமையை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதற்கு முன்னதாக, இந்தியில் டப் செய்யப்பட்டு நேரடியாக யூடியூப்பில் வெளியிடப்பட்ட அல்லு அர்ஜுனின் படங்கள் கொரோனா முதல் அலையின் தாக்கம் துவங்கிய காலகட்டத்தில் மில்லியன் கணக்கில் ரசிகர்களால் பார்க்கப்பட்டு ஆச்சர்யத்தை ஏற்படுத்தின. அதை கணக்கில் கொண்டு புஷ்பா படம் ஆரம்பித்த சமயத்திலேயே, தங்களை தேடிவந்த பிரபல இந்தி யூடியூப் சேனல் ஒன்றுக்கு ஒரு குறிப்பிட்ட தொகைக்கு இந்தி உரிமையை விற்று விட்டார் புஷ்பா படத்தின் தயாரிப்பாளர்.
ஆனால் படம் இரண்டு பாகங்களாக உருவான நிலையில் தற்போது அல்லு அர்ஜுனின் மார்க்கெட்டை இந்தியிலும் நிலைநிறுத்தும் விதமாக தியேட்டர்களில் புஷ்பா படத்தை ரிலீஸ் செய்யலாம் என அல்லு அர்ஜுன் தரப்பில் நினைக்க, படத்தை வாங்கிய யூடியூப் சேனலோ தியேட்டர் ரிலீஸுக்கு மறுத்துவிட்டது.
படத்தின் தயாரிப்பாளர் வேறு ஒருவராக இருந்தாலும், அல்லு அர்ஜுனின் தந்தை அல்லு அரவிந்தும் கூட பாலிவுட்டில் தனக்குள்ள செல்வாக்கை பயன்படுத்தி புஷ்பா படத்தை தியேட்டரில் வெளியிட முயற்சித்தும் அல்லது கொடுத்த உரிமையை திரும்ப வாங்க முயற்சித்தும் கூட எந்த பலனும் ஏற்படவில்லை. இதனால் புஷ்பா தென்னிந்திய மொழிகளில் மட்டுமே வெளியாகும் என சொல்லப்படுகிறது. இதன்மூலம் பான் இந்தியா ரிலீஸ் என்கிற அந்தஸ்த்தை புஷ்பா இழந்துவிட்டது என்றே சொல்லலாம்.