இயக்குனர் ராஜமவுலியின் பிரம்மாண்ட படங்களின் வெற்றிக்கு பின்னணியில் தூணாக இருந்து வித்தியாசமான கதைகளை உருவாக்கி தருவதில் முக்கிய பங்கு வகிப்பவர் அவரது தந்தையும், கதாசிரியருமான விஜயேந்திர பிரசாத். அந்த வகையில் ராஜமவுலிக்கு பதிலாக இவரே பல சமயங்களில் அவரது அடுத்த படங்கள் குறித்த அப்டேட்டுகளை வெளியிட்டு வருவதால் இவருக்கும் தனியாக ஒரு ரசிகர் கூட்டம் இருக்கிறது.
சமீபத்தில் இந்தியா முழுவதும் கவனம் ஈர்த்த அயோத்தியில் நடைபெற்ற ராமர் சிலை திறப்பு விழா நிகழ்வு குறித்து ஒரு பேட்டியின் போது விஜயந்திர பிரசாத் சில தகவல்களை பகிர்ந்து கொண்டார்.
ஆர்ஆர்ஆர் படத்தின் இறுதிக்காட்சியில் ராம் சரணை ராமர் போலவே சித்தரித்திருந்தார் விஜயேந்திர பிரசாத். அது குறித்து அவரிடம் கேட்கப்பட்டபோது, “அல்லூரி சீதாராம ராஜு என்கிற கதாபாத்திரமாகவே தான் உருவாக்கினாலும் அந்த இறுதிக்காட்சி அவரை ராமராகவே பலரையும் நினைத்துப் பார்க்க செய்துவிட்டது. குறிப்பாக வட இந்தியாவில் இது நன்றாகவே ஒர்க் அவுட் ஆகிவிட்டது. அதற்கு ராம்சரண் அணிந்திருந்த உடையும் ஒரு காரணம்” என்று கூறியுள்ளார்.
அத்துடன் நிறுத்திக் கொண்டிருந்தால் பரவாயில்லை. அடுத்து ஜூனியர் என்டிஆரின் கதாபாத்திரம் குறித்து அவர் குறிப்பிடும்போது அவர் நடித்த கொமரம் பீம் கதாபாத்திரம் மிக சாதாரண உடைகளுடன் மிகவும் எளிமையாக இருந்ததால் ரசிகர்களின் மனதில் வேறு விதமாக தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்றும் கூறியுள்ளார்.
அதுமட்டுமல்ல ஏற்கனவே படம் வெளியான சமயத்தில் ஒரு பேட்டியில் எந்த கதாபாத்திரம் ரசிகர்கள் மனதில் 100% தாக்கத்தை ஏற்படுத்தும் என கேட்கப்பட்ட கேள்விக்கு நிச்சயமாக ராம் சரணின் கதாபாத்திரம் தான் என்று பதில் அளித்ததையும் அவர் தற்போது நினைவு கூர்ந்தார். அவர் ராம்சரண் பற்றி உயர்வாகவும், அதேசமயம் ஜூனியர் என்டிஆர் பற்றி தாழ்வாகவும் கூறியதாக நினைத்த ஜூனியர் என்டிஆர் ரசிகர்கள் கோபம் அடைந்து அவரது பேச்சுக்கு சோசியல் மீடியாவில் தங்களது எதிர்ப்புகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.