தினமலர் விமர்சனம் » ஒருவர் மீது இருவர் சாய்ந்து
தினமலர் விமர்சனம்
திருமணத்திற்கு பின்னும், இணை பிரியாமல் இருக்க ஒரே கணவனைத் தேர்ந்தெடுக்கும் தோழிகளும், இடையில் மாட்டிக்கொண்டு முழிக்கும் காதலனும்...! கிட்டப்பா காலத்து காமெடி முடிச்சை, பழைய பாத்திரங்களில், புதிய முகங்களை கொண்டு ஈயம் பூச முயன்று, சொட்டையை ஓட்டையாக்கியிருக்கும் பாலசேகரன் படம்.
பழை நெடியை இன்னமும் அதிகமாக்க பாக்யராஜூம், விசுவும்! ஹாரிஸ் ஜெயராஜின் பழைய மெட்டுகள் போன்று இசை அமைத்திருக்கும் ஹரிஹரன்! லோ பட்ஜெட் என்பதால் எல்லாவற்றையும் "லோ ஆங்கிளில் எடுத்திருக்கும் விஜய் மகபால்! சரியும் கோபுரத்தைத் தள்ளிவிட இத்தனை பேரா?
கணேஷ் (லகுபரன்) எப்பொழுதும் நண்பர்களுடனும், காசுடனும் அலையும் இளைஞன். தொலைக்காட்சியில் வானிலை அறிக்கை வாசிக்கும் சவிதாவிடம் (சுவாதி), கணேஷ் காதல் மழை பொழிய, அவன் காதலை ஏற்றுக் கொள்ள சவிதா போடும் ஒரே முக்கிய நிபந்தனை... தன்னோடு, தன் உயிர்த்தோழி கவிதாவையும் (சானியா தாரா) கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என்பது தான்! இலவச இணைப்பாக வரும், முகமறியாத கவிதாவை ஏற்றுக் கொள்ள மறுத்து, சவிதாவையும் துறந்து, ஐதராபாத் போகும் கணேஷை சந்திக்கிறாள் ஒரு பெண். அவளேடு கணேஷூக்கு காதல் என லாஜிக்கில்லாமல் பம்முகிறது படம். கடைசியில் தன் இரண்டாவது காதலிதான் கவிதா என்பதும், சவிதா-கவிதா நாடகமே இது என்று அறியும் கணேஷ் என்ன செய்தான்? என்பது கொழ கொழ க்ளைமாக்ஸ்.
போக்குவரத்து போலீஸ் போல், முகத்தில் மாஸ்க் போட்டுக் கொள்ளும் அளவுக்கு தூசி பறக்கிறது படத்தில்! "லவ் டுடே" பாலசேகரன் இன்னமும் டுடேக்கு வரவில்லை என்பது தெளிவாகிறது. எந்த விஞ்ஞானியாவது கால இயந்திரத்தில் அவரை ஒரு இருபது வருடங்கள் முன்னே அழைத்து வந்தால் தமிழ் திரையுலகம் நன்றி கூறும்!
மொத்தத்தில், "ஒருவர் மீது இருவர் சாய்ந்து" - "சலிப்பு"