தினமலர் விமர்சனம் » ஆதி பகவன்
தினமலர் விமர்சனம்
வழக்கமான ஆள்மாறட்ட கதை தான். அதை வித்தியாசமாக சொல்கிறேன் பேர்வழி... என்று வழக்கமான தனது வெற்றி பார்முலாவில் இருந்து விலகிபோய், விக்கித்துப்போய் நிற்கிறார் அமீர்...!!
தாய்லாந்து கேடி ஆதி, மும்பை தில்லாலங்கடி பகவான். ஆதி - பகவான் இருவருமே ஜெயம் ரவி தான் எனும் சூழலில், மும்பை போலீஸ் மொத்தத்திற்கு படியளக்கும் பகவானை தீர்த்துகட்டியே தீர வேண்டும் என்று போலீஸை நிர்பந்திக்கிறது மேலிடம்! ஆனாலும் கதாநாயகி நீத்து சந்திராவுக்கு தன் பகவானை காப்பாற்றியே தீர வேண்டும் என்பது திடமான எண்ணம். அதன்விளைவு, பகவானின் சாயலிலேயே தாய்லாந்தில் சண்டித்தனம் செய்து கொண்டிருக்கும் ஆதியை காதலிப்பதாக சொல்லி மும்பைக்கு கடத்தி வரும் நீத்து, தன் செல்வாக்கை பயன்படுத்தி மும்பை போலீஸ் கஸ்டடிக்கு ஆதியை, பகவானாக அனுப்பிவிட்டு தன் பகவானுடன் செட்டில் ஆக கோவா வருகிறார். ஆதி, மும்பை போலீஸ்க்கு "பெப்பே காட்டிவிட்டு பகவானையும், பகவதியை (அதாங்க நீத்து...)யும் தேடிப்பிடித்து தீர்த்து கட்டுவதுதான் "ஆதி-பகவான்" மொத்த கதையும்!
ஜெயம்ரவி ஆதியாகவும், பகவதியை உள்ளடக்கி பகவானாகவும் இரட்டை வேடங்களில் படம் முழுக்க வருகிறார். ஏதேதோ செய்கிறார். ஆனால் நம் மனம் முழுக்க நிறையாமல் போகிறார். ஆரம்ப காட்சிகளில் ஆதியையாவது பார்க்க, ரசிக்க முடிகிறது. ஆனால் ஆண்பாதி, பெண்பாதியாக வரும் மும்பை பகவானை பார்த்தாலே குமட்டுகிறது. அதுவும் பெண் உருவில் இருக்கும் ஆணாக இருந்து கொண்டு, அவர் பார்க்கும் பெண்களை எல்லாம் மடிப்பதும், படுப்பதும் நம்பமுடியாத காமெடி! இதெல்லாம் நாங்க "அப்பு பிரகாஷ்ராஜிடமே பார்த்துட்டோம். ஜெயம் ரவியும், இயக்குனர் அமீரும் இன்னும் நிறைய யோசித்து இந்தபடத்தையும், அந்த பாத்திரத்தையும் செய்திருக்கலாம்!
கரீஷ்மா, ராணி என்று இரண்டு கெட்-அப்புகளில் ஒரே நீத்து சந்திரா. அப்படி ஆதியிடம் இல்லாதை பகவானிடம் எதை பார்த்தாரோ? என்று நம்மால் கேட்காமல் இருக்க முடியவில்லை! க்ளைமாக்ஸில் ஆதி ரவியுடன் அவர் பறந்து பறந்து போடும் சண்டைக்காட்சி பழைய ஜேம்ஸ்பாண்ட் படங்களை ஞாபகப்படுத்தினாலும் சபாஷ் ரகம்!
அனிருத், பாபு ஆண்டனி, மோகன்ராஜ், டார்ஜான், சுதாசந்திரன், கருணா, பகலா பிரசாத் பாபு, பாலாசிங், சரத் என்று ஏகப்பட்ட நட்சத்திரங்கள், யுவன்ஷங்கர்ராஜாவின் இனிய இசை, தேவராஜின் அழகிய ஒளிப்பதிவு எல்லாம் இருந்தும் "ராம், "பருத்திவீரன் படங்களை இயக்கிய அமீரா "ஆதி-பகவன் படத்தின் இயக்குனர் எனக்கேட்கத் தூண்டுகிறது!
அதேமாதிரி இழுத்துக்கொண்டே போகும் க்ளைமாக்ஸ் பைட்டில், ஆதி-பகவான் இருவரில் ஒருத்தரை உடனடியாக கொல்லுங்கள், எங்களை கொல்லாதீர்கள் அமீர் என்று தியேட்டரில் ரசிகர்கள் கமெண்ட் அடிப்பதை கேட்க முடிவது "ஆதி-பகவனின் பலவீனங்களில் ஒன்று! இதில் இரண்டாம் பாகத்திற்கு வேறு அமீர் சிலைடு போடுவது படத்தை மேலும் பலவீனமாக்கிவிடுகிறது.
ஆகமொத்தத்தில், "ஆதி-பகவன்" - "பாதி-தேறுவான் மீதி...?!"--------------------------------------------------------------
குமுதம் சினி விமர்சனம்
மெயின் படம் ஆரம்பிப்பதற்கு முன்னால்:* மிர்ச்சி சிவா நடிக்கும் “சொன்னா புரியாது’ படத்தின் டிரெய்லர் அருமை. சிவாவின் அம்மா, அவரை உத்தம புத்திரன் போல் நம்புவதும், ஆனால் பார்ட்டி செமை கில்மா என்பதும் தெரிகிறது. தியேட்டரில் டிரெய்லருக்கே சிரிக்கிறார்கள்.
* “வத்திக்குச்சி’ டிரெய்லரில் ரீரெகார்டிங் நன்றாக இருக்கிறது. அஞ்சலிக்கு வழக்கமான பாத்திரம் போல. ரொம்ப பேசுகிறார். ஷேர் ஆட்டோ டிரைவர் வேடத்துக்கு ஹீரோ பொருத்தம்.
* ஒரு இரும்புக் கம்பெனி விளம்பரத்தில் இனிமையான பாடல், காட்சியும் கொள்ளை அழகு.
* டெங்குவை ஒழிக்க வேண்டுமா? விளம்பரம் ரொம்ப பயனுள்ளது. சிவகுமாரின் பாவம் அருமை. பப்பாளி இலைச் சாறு, மலை வேம்பு, நில வேம்புச் சாறைக் குடித்தால் டெங்கு ஓடிப் போய்விடும்!
* ஆன்டிக் நகைகள் விளம்பரமும் பளிச்.
இடைவேளைக்கு பின்“யாருடா மகேஷ்’ டிரெய்லரில் ஒரு பாடலையே காட்டியிருப்பது வித்தியாசம். லொக்கேஷன் நன்றாக இருக்கிறது.
சி.டி. விளம்பரம் கூட தியேட்டரில் ஒளிபரப்புகிறார்களே. ஹிப்ஹாப் தமிழன்! அட!
ஆஹா-ஜெயம் ரவியின் திருநங்கை வேடம்
ஹிஹி-மற்ற எல்லாம் தான்!------------------------------------------------------
கல்கி விமர்சனம்
ஆள்மாறாட்டக் கதையில் அதிரடி கலாட்டா. அதுவும் கோடம்பாக்க கலாட்டா. இதுதான் “ஆதி பகவன்’ படத்தின் ஒன்லைன். அமீர் இயக்கம் என்பதால் எதிர்பார்ப்பு எகிறி இருந்தது உண்மைதான். காரணம், அவரது முந்தைய படமான பருத்திவீரன் தந்த பாதிப்பு அப்படி. ஆனால், ஆதி பகவன் அதில் பாதியைக் கூட தரவில்லை.
கிரானைட் பிஸினஸ் பிரதர்ஸ், சி.பி.ஐ. ரெய்டு, சி.பி.ஐ. அதிகாரியாக ஜெயம் ரவி.. என ஆரம்பக் காட்சிகள் விறுவிறுக்க... சரி அமீர் ஏதோ சொல்ல வருகிறார் என்று எழுந்து உட்கார்ந்தால், அடுத்த காட்சியிலேயே ரெய்டில் சிக்கிய பணம், நகைகளை எடுத்துக்கொண்டு போய் வில்லன் கையில் கொடுத்துவிட்டு பேரம் பேசுகிறார் ஜெயம் ரவி. ஓ.கே. இது கோடம்பாக்கத்தின் பழமையான திரைக்கதை விளையாட்டுதான் என்று மீண்டும் சரிந்து உட்கார்கிறான் ரசிகன். அப்புறம் ஏதோ அதன் போக்கில் நகர்கிறது கதை.
சி.பி.ஐ. அதிகாரி, காதலன், பித்தலாட்டம்... என எதுவுமே பொருந்தவில்லை ஜெயம்ரவிக்கு. போதாததற்கு பகவனாக வேறு கிச்சுகிச்சு மூட்டுகிறார். இடைஇடையே பிஸ்டலும் கையுமாக வந்து யார் யாரையோ பந்தாடுவதும், தலைகீழாக நின்று சுடுவதெல்லாம் எதுக்காக... எதுக்காக?
நீத்துச்சந்திராவும் ஏதோ வருவதும் போவதுமென்று நீர்த்துப் போயிருக்கிறார். அவர் போடும் மாஸ்டர் ப்ளான் எல்லாம் தமிழ் சினிமாவுக்கு ஒண்ணும் புதிதில்லையே. ஆல்கஹால் சாப்பிட்டு சிகரெட் ஊதி.. என இவர் பண்ணும் வில்லத்தனத்திற்கு அப்படியென்ன பதுமை?
திரைக்கதை, படத்துக்குத் தேவையில்லை என்று நினைத்திருப்பார் போல அமீர். எங்கெங்கோ போய் எங்கெங்கோ முட்டி, எப்படியெப்படியோ திரும்புகிறது. சுதா சந்திரனுக்கும் ஜெயம்ரவிக்கும் அழுத்தமான அம்மா, மகன் காட்சிகள் கூட இல்லை. அதனால்தான் அவர்களின் பிரிவு ரசிகனுக்குள் இறங்கவில்லை.
போதும் ரொம்ப ஆடிட்டோம், என்னை ரொம்பவே கஷ்டப்படுத்திட்டீங்க என்று ஜெயம்ரவி பேசும்போதெல்லாம் ரசிகனும் இப்படித்தான் நினைப்பான் என்று அமீர் உணர்ந்தால் சரி.
தேவராஜின் ஒளிப்பதிவு, யுவனின் இசை முறையே கண்கள் வழியாகவும் காதுகள் வழியாகவும் இதயம் தொடவே இல்லை.
இயக்குனர் அமீரிடம் ஒரு வேண்டுகோள்... தெரிந்தோ, தெரியாமலோ உங்களிடம் தமிழ் சினிமாவும், அதன் தீவிர ரசிகர்களும் நிறைய எதிர்பார்க்க ஆரம்பித்துவிட்டனர். எதிர்பார்ப்பு பூர்த்தியாகவில்லை என்றாலும் பரவாயில்லை. ஏமாற்றத்தை தந்தவிடாதீர்கள்.
ஆதிபகவன் - ஆதியும் இல்லை... அமீரும் இல்லை....
- கதிர்பாரதி