தினமலர் விமர்சனம் » சுண்டாட்டம்
தினமலர் விமர்சனம்
ஒரு வழக்கமான காதல் கதையை, புதிய களமான கேரம் போட்டியை மையப்படுத்தி சொல்லியிருக்கிறார்கள். கவனமாக ஆடாததால், சிவப்பு காயினுக்கு பதிலாக ஸ்ட்ரைக்கரே விழுந்து விட்ட விபத்து.
பிரபாகர் (இர்பான்) சுண்டாட்டத்தில் சூரன். தொண்ணூறுகளில், ஓட்டேரி பகுதியின் சுண்டாட்ட ராஜா! பந்தயக் காசுக்கு விளையாடுவது, வென்ற பணத்தை நண்பர்களுடன் குடித்து கழிப்பது என்கிற அவன் வாழ்க்கையில்... இரண்டு திருப்பங்கள்! ஒன்று துபாய் போக அவனுக்கு வாய்ப்பு கிடைப்பது! இன்னொன்று கலையை (அருந்ததி) அவன் சந்திப்பது! துபாய் போகும் வேலைகளுக்கும் நடுவில், காதலுக்கு தூது அனுப்பும் வேலைகளையும் ஜோராய் செய்கிறான் பிரபாகர். ஒரு சவாலில், அவன் காசியை (மது) ஜெயித்துவிட, பழிவாங்கல் படலம் ஆரம்பமாகிறது. சுண்டாட்ட சூதாட்ட கிளப் நடத்தும் பாக்யா அண்ணாச்சி (ஆடுகளம் நரேன்), பிரபாகரை கொண்டாட, பற்றி எரிகிறது காசிக்கு! இதற்கிடையில்.... பாக்யாவின் போட்டியாளன், அவனை கொல்ல திட்டம் போட, அதில் பலி ஆடாய் பிரபா. காசியின் துரத்தலும், கலை அண்ணனின் எதிர்ப்பும் தாக்க, பிரபாகர் என்னவாகிறான் என்பது க்ளைமாக்ஸ்.
இயக்குனர் பிரம்மா ஜி தேவ், சரக்கு உள்ள ஆளாகத் தெரிகிறார். வித்தியாச கோணங்களில் ஒளிப்பதிவை செய்திருக்கும் பாலகுருநாதனும், சுண்டாட்ட விடுதிகளை கண்முன்னே கொண்டு வந்திருக்கும் கலை இயக்குனர் மோகன மகேந்திரனும் பாராட்டுக்குரியவர்கள்! பிரிட்டோவின் இசை, அநாவசிய இடங்களில் கூட அழகாக இருக்கிறது. "காற்றோடு வீசும் மழைபோல..." நல்ல பாடல். "விழியால் வித்தை செய்வான், விரலால் யுத்தம் செய்வான்..." என்று சீயான் ரேஞ்சுக்கு ஒரு பாடல். மரண கானா விஜி, அவரது குரலிலேயே பாடும் "வெள்ளை வேட்டி சட்டை போட்டு... என்கிற பாட்டு, நடன அசைவுகளின் அமர்க்களமாக எடுபடுகிறது.
"சுண்டாட்டம்... இர்பானுக்கும், அருந்ததிக்கும், பிரம்மா ஜி.தேவுக்கும் ஒரு விசிட்டிங் கார்டு அவ்வளவே!
மொத்தத்தில், "சுண்டாட்டம்", இளசுகளின் "கொண்டாட்டம்!!"-----------------------------------------------------------------
குமுதம் சினி விமர்சனம்
சுண்டாட்டம் என்றால் கேரம் போர்டு ஆடுவது! கேரம் போர்டு போட்டியை முழுக்க முழுக்க வைத்து தமிழில் வந்திருக்கும் முதல் படம் அனேகமாக இதுவாகத்தான் இருக்கும்.
வெட்டி ஆஃபீஸரான இர்ஃபானை வெளிநாட்டுக்கு அனுப்ப, அவனது அப்பா முயற்சிக்கும்போது, வில்லனன் ரூபத்தில் வருகிறது கேரம் போர்டு. வடசென்னையில் தாதா ஆட்களுடன் இர்ஃபான் சுண்டாட்டத்தில் ஜெயிக்கிறான். தோற்றுப் போனவன் இவனை காலி செய்ய நினைக்க, அப்புறம் என்ன ஆகிறது என்பதுதான் ஆட்டம்!
படத்தில் கதாநாயகன் உட்பட எல்லோருமே ரௌடி போலத்தான் இருக்கிறார்கள். இர்ஃபானைப் பார்க்கப் பார்க்கப் பிடித்துப் போகிறது. எதிரிகள் கோட்டைக்குள்ளேயே போய் தங்கச் செயினுடன் திரும்பி வரும் காட்சி சரியான திருப்பம்! இயக்கம் “கனா காணும் காலங்கள்’ பிரம்மா.
புன்னகை முகத்துடன் பளிச்சென்று இருக்கிறார் அருந்ததி. நரேனும் அந்த போதை ஊசி பார்ட்டியும் நச். படத்தில் எல்லோரும், எப்போதும் தண்ணியடித்துக் கொண்டே, தம் அடித்துக் கொண்டேயிருப்பதால் நமக்கு இருமல் வருகிறது!
கவிதை மாதிரி சுண்டிக் கொண்டிருந்த கதையில் கதாநாயகனைக் கொல்ல முயலும் கஞ்சா பார்ட்டி, வில்லனைக் கொல்ல முயலும் பாய் பார்ட்டி, வெட்டி பந்தாவிடும் கதாநாயகியின் அண்ணன் என்று ஆளாளுக்கு என்னென்னவோ செய்து கொத்துக்கறி போட்டு சின்னா பின்னப்படுத்தி விட்டார்கள்.
முதல் பாதி, கொண்டாட்டம், அடுத்த மீதி திண்டாட்டம்!
குமுதம் ரேட்டிங்: ஓகே.