Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு »

கண்ணா லட்டு தின்ன ஆசையா

கண்ணா லட்டு தின்ன ஆசையா,Kanna Laddu Thinna Aasaiya
 • கண்ணா லட்டு தின்ன ஆசையா
 • சந்தானம்
 • விஷாகா சிங்
 • இயக்குனர்: மணிகண்டன்
29 ஜன, 2013 - 16:01 IST

 கருத்தைப் பதிவு செய்ய

எழுத்தின் அளவு:
தினமலர் விமர்சனம் » கண்ணா லட்டு தின்ன ஆசையா

  

தினமலர் விமர்சனம்ஒரு பெண்ணின் கடைக்கண் பார்வைக்காக மூன்று ஆண் நண்பர்கள் செய்யும் காமெடி கலாட்டாக்கள் தான் "கண்ணா லட்டு தின்ன ஆசையா" படத்தின் மொத்த கதையும்!

பவர்ஸ்டார் ஸ்ரீனிவாசன், காமெடி சந்தானம், புதுமுகம் சேது மூவரும் ஒன்றாக குடித்து, ஒன்றாக கும்மாளமடிக்கும் நெருங்கிய நண்பர்கள். இவர்களது அந்த நட்புக்கு ஆப்பும், ஆபத்துமாக அந்த ஏரியாவிற்கு குடி வருகிறார் நாயகி விசாகா. விசாகா மீது மூவருக்குமே அளவிடமுடியாத காதல். அதனால் அவர்களது நட்பில் வருகிறது விரிசல்! அதை சரிகட்ட அவர்களுக்குள் எழுதப்படாத ஓர் சமாதான உடன்படிக்கை ஏற்படுகிறது. அதன்படி முட்டல், மோதல் இல்லாமல் மூவருமே விசாகாவிற்கு விருப்பமனு கொடுப்பது... அதில் யாரது மனுவை விசாகா விரும்பி ஏற்றுக் கொள்கிறாரோ...?! அவருக்கு விசாகாவை விட்டுக்கொடுத்துவிட்டு மற்ற இருவர் விலகிக் கொள்வது எனும் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுத்திக் கொள்கிறார்கள். அப்புறம்? அப்புறமென்ன...? அந்த ஒற்றை பிகருக்கு மூவரும் ஒவ்வொரு வகையில் ரூட்டை போடுகிறார்கள். யார் ரூட்டில் விசாகா விரும்பி பிரயாணிக்கிறார் என்பது க்ளைமாக்ஸ். பாக்யராஜின் "இன்று போய் நாளை வா" படத்‌தின் கதை தான் என்றாலும், அதில் சந்த(தா)னம் மணக்க, பவர் ஸ்ரீனி இனிக்க, பற்றாக்குறைக்கு பன்னீர் விசாகா வேறு...! படம் போவதே தெரியாமல் போவது "கண்ணா லட்டு தின்ன ஆசையா" படத்தின் பெரிய ப்ளஸ்!

சேது, சந்தானம், பவர் ஸ்ரீனி என்று மூன்று ஹீரோக்கள் என்றாலும் சந்தானத்தையும் தூக்கி சாப்பிட்டு விடுகிறார் பவர்ஸ்டார்! "அப்படி எங்கிட்ட இல்லாதது சிம்புகிட்ட என்ன இருக்கு...?" என்று அந்த அப்பாவி மூஞ்சை வைச்சுகிட்டு அவர் அலப்பரை பண்ணுமிடத்தில் தியேட்டரே அதிர்கிறது. இதுமாதிரி ஸ்ரீனியால் தியேட்டர் அதிரும் சீன்கள் ஏராளம், ஏராளம்!! இனி இவரை "பலே ஸ்டார்" எனவும் அழைக்கலாம்! தன்னை தாழ்த்திக்கொண்டு பிறரை மகிழ்விப்பது தான் காமெடி என்று சரியாக புரிந்து நடித்திருக்கும் பவர்ஸ்டாருக்கு, எத்தனை ஹேட்ஸ் ஆப் சொன்னாலும் அது போதாது என்றால் மிகையல்ல!!

சந்தானமும் பவரை கலாய்ப்பது தான் படத்தின் பலம் என்பதை உணர்ந்து படம் முழுக்க அதையே செய்வதுடன், விசாகாவுடனும் வித்தியாசமாக டூயட் பாடி தானும் இளம் ஹீரோக்களுக்கு சற்றும் சளைத்தவர் இல்லை என்பதை மீண்டும் ஹீரோவாகி நிரூப்பித்திருக்கிறார். பேஷ், பேஷ்! "நானும் எவ்வளவு நாளைக்குத்தான் ஊரான் காதலையே ஊட்டி வளர்ப்பது... எனக்கும் ஊட்டியில் டூயட் பாட ஆசையிருக்காதா..." என்பதில் ஆரம்பித்து க்ளைமாக்ஸில், "அவன் ஹீரோ ஆயிட்டான், நீ காமெடியன்தான் எனும் பவரிடம், நானாவது காமெடியன்னு தெரிஞ்சே காமெடியனா இருக்கேன், ஆனா, நீ அது தெரியாமலே காமெடி பண்ணிட்டிருக்கே பாரு..." என்று கலாய்ப்பது வரை கலக்கி இருக்கிறார்.

பாக்யராஜ் பாத்திரத்தில் வரும் ஹீரோ சேது, கதாநாயகி விசாகா, விடிவி கணேஷ், கோவை சரளா, சிவசங்கர் மாஸ்டர், தேவதர்ஷினி, பவரின் அப்பாவாக வரும் மேக்கப் புச்சிபாபு உள்ளிட்ட ‌ஒவ்வொருவரும் படத்தில் தங்களது பாத்திரமறிந்து பளிச்சிட்டிருக்கின்றனர். பலே! பலே!!

தமனின் இசை, பாலசுப்ரமணியத்தின் கேமரா உள்ளிட்ட மேலும் பல ப்ளஸ் பாயிண்ட்டுகளுடன், புதியவர் மணிகண்டனின் இயக்கத்தில், "கண்ணா லட்டு தின்ன ஆசையா", திரையரங்குகளின் வாசலில் தொங்கும் "ஹவுஸ்புல்" போஸ்டர்கள், பெருவாரியாக கூடும் ரசிகர்கள் கூட்டத்தை "இன்று போய் நாளை வா" என சொல்ல வைப்பது நிச்சயம், நிதர்சனம்!

ஆக மொத்தத்தில், "கண்ணா லட்டு தின்ன ஆசையா", தயாரிப்பாளர்களை "லட்ச லட்சமா துட்டு தின்ன கசக்குதா" என திகட்ட திகட்ட தின்ன வைக்கும் திரைப்படம்!


-------------------------------------------------------------


கல்கி சினி விமர்சனம்கும்பகோணத்தில் சுற்றித் திரியும் மூன்று இளைஞர்களின் நடுவே ஒரு பெண் நுழையும்போது ஏற்படும் சுவாரஸ்யங்கள்தான் “கண்ணா லட்டு தின்ன ஆசையா!’

சந்தானம், பவர்ஸ்டார் சீனிவாசன், சேது இந்த மூவருடன் நாயகி சேர்ந்து அடிக்கும் லூட்டி இரண்டரை மணி நேரம் பொழுது போக வைக்கிறது. பவர் ஸ்டார் வரும் போதெல்லாம் தியேட்டரே விழுந்து விழுந்து சிரிக்கிறது! இயக்குனர் கே.எஸ். மணிகண்டன் யாரிடமும் உதவி இயக்குனராக வேலை பார்த்தவர் இல்லையாம். விளம்பரப் படம் எடுத்தவராம். படம் ஜாலியோ ஜாலி!

இன்றைய இளைய சமுதாயம் என்ன சொன்னால் ரசிப்பார்கள் என்பதைத் துல்லியமாகக் கணித்து இயக்கி உள்ளார். சிம்பு நட்புக்கு மட்டும் நடித்துக் கொடுக்கவில்லை. படத்தில் அவர் வரும் காட்சியில் “ஜம்’ என திரைக்கதை நிமிர்ந்து அமர்கிறது.

வெளிநாடு போகிறேன் என்று பணத்தை வீணாகச் செலவழிக்காமல், கும்பகோணத்தில் ஆறு, குளம், ஆலமரம், தெப்பக்குளம், அதன் வீதிகள் அழகாகப் படமாக்கிய ஒளிப்பதிவாளருக்குப் பாராட்டுகள்.

தமனின் இசையில், “ஆசையே அலை போல’ பாடலும், “கண்ணா லட்டு திங்க ஆசையா’ பாடலும் வெகு ஜோர்.

படத்தில் சந்தானம், பவர் ஸ்டார் தவிர மற்ற நடிகர்கள் பற்றிச் சொல்லியே தீர வேண்டும். கோவை சரளா, தேவதர்ஷினி, லொள்ளுசபா சுவாமிநாதன், வி.டி. கணேஷ், அந்தக்குண்டு பையன், பட்டிமன்ற ராஜா, கிளைமாக்ஸில் வரும் வில்லன்கள் என ஒவ்வொருவர் நடிப்பும் படத்துக்குப் பக்கபலம் எனில் ஆர்ட்டிஸ்ட் தேர்வு இயக்குனருக்குப் பெரிய பலம். கே. பாக்யராஜின் “இன்று போய் நாளை வா’ படத்தின் மூலக்கதையில் இருந்து உருவாக்கிய படம் என்றாலும் இந்தக் காலத்திற்கு ஏற்ப காட்சி அமைப்பும், வசனமும் ரசிக்க வைக்கின்றன.

படத்தின் கிளைமாக்ஸில் “டேய் கே.கே. நீ (சந்தானம்) எப்பவுமே காமெடியன் தான். ஹீரோவாக முடியாது’ என பவர் ஸ்டார் சொல்ல, அதற்கு சந்தானம் “டேய் பவர் நான் காமெடியன் என தெரிந்தே நடிக்கிறேன். நீ காமெடியன்னு தெரியாமலே நடிக்கிறியே?’ என கலாய்ப்பதும் செம யதார்த்தம்.

சந்தானம், தாம் தயாரிக்கும் படத்தில் தாம்தான் ஹீரோ என அடம்பிடிக்காமல் வெற்றி மட்டும்தான் முக்கியம், என்பதை உணர்ந்திருக்கிறார். இதே போன்ற படங்கள் சந்தானம் தயாரித்து, நடித்தால் இன்னும் பல ஆண்டுகள் திரை உலகில் பவனி வரலாம்.


-----------------------------------------------------------


குமுதம் சினி விமர்சனம்


படம் பார்க்க வரும் ஒவ்வொருவருக்கும் பவர் ஸ்டார் ஸ்டைலில் ஆளுக்கு பத்து ரூபாய் கொடுத்தால் நன்றாக இருக்கும். பின்னே சிரித்து சிரித்து வயிறு வலிக்கிறதே, மாத்திரை வாங்க வேண்டாமா?

கே. பாக்யராஜின் “இன்று போய் நாளை வா’ பூந்தியை லட்டாகப் பிடித்து விட்டிருக்கிறார்கள்! (கதாசிரியருக்கு உரிய மரியாதையைக் கொடுத்து விடுங்கப்பா!)

இன்னும் 30 வருஷம் கழித்து எடுத்தாலும் ரசிக்கக்கூடிய எதிர் வீட்டுப் பெண்ணைக் காதலிக்கும் அப்பாவி நண்பர்களின் கல கல கதை.

ஃப்ராடு ஸ்டார் ஸாரி பவர் ஸ்டார் சீனிவாசன் பெயரை டைட்டிலில் பார்த்தாலே ரசிகர்கள் கைதட்ட ஆரம்பித்து விடுகிறார்கள்.

சந்தானம் தன்னைக் கூட படத்தில் பின்னிருத்திக் கொண்டு சீனிவாசனை வாரி வாரியே அப்ளாஸை அள்ளுகிறார். “என்னதான் இருந்தாலும் நீ கதாநாயகனா ஆக முடியலையே, காமெடியன்தானே நீ?’ என்று சீனிவாசன் நக்கலடிக்க, “நானாவது காமெடியன்னு எனக்குத் தெரியும், ஆனா நீ காமெடியன்னு தெரியாமலேயே காமெடி பண்றியேடா’ என்று சந்தானம் பதில் சொல்லும்போது தியேட்டர் அதிர்கிறது. பவர் ஸ்டார் ஆடும் பரதநாட்டியம் இருக்கிறதே, அடடா!

“உன் சிரிப்பு கூட நல்ல இருக்குன்னு நான் பொய் சொன்னேன். அப்ப நம்பினியேடா’ “நல்லா பழுத்துப் போன பப்பாளிப் பழம் மாதிரி மூஞ்சியை வெச்சுக்கிட்டு,’ “பாடி போடற அளவுக்கு பாடியை வெச்சுக்கிட்டு’ போன்ற பவர் ஸ்டாரை நக்கலடித்தே பெரும்பாலும் வசனங்கள். தியேட்டரில் என்னமாய் ரசிக்கிறார்கள்! (இயக்கம்: மணிகண்டன்)

சந்தானம் வழக்கம் போல! புதுமுகம் சேது. இரண்டு காமெடி குண்டர்களுக்கு (பாராட்டுதான்) மத்தியில் நசுங்காமல் அழகாகச் சமாளித்திருப்பதே அவரைப் பாராட்டலாம்.

விசாகா ஓகே. சிம்ம ஒரே ஒரு காட்சியில் வந்து முத்திரை பதிக்கிறார். தன்னை யூத்தாக நினைத்துக் கொண்டிருக்கும் சீனிவாசனைப் பார்த்ததும், “பெரியவங்க நீங்க உட்காருஙக’ என்று சிம்பு சொல்வது செமை!

பாடகராக வி.டி.வி. கரகர கணேஷ். அவரது குரல் கரகரப்புக்குக் காரணமான பிணாயில் விஷயமும் பலே.

என்னதான் இருந்தாலும் “இன்று போய் நாளை வா’ படத்தில் பாக்யராஜ், ராதிகாவின் அந்த யதார்த்தமான இயற்கையான நடிப்பு இந்தப் படத்தில் யாருக்குமே இல்லை. காமெடி செய்து கல்லா கட்ட வேண்டும் என்று மட்டுமே யோசித்திருப்பது நன்றாகத் தெரிகிறது.

லட்டு - துட்டு.

ஆஹா: காமெடி, காமெடி, காமெடி.
ஹிஹி: பிரேக் போடும் பாடல்கள்.

குமுதம் ரேட்டிங் - ஓகே.வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g  to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement

மேலும் விமர்சனம்

 • டாப் 5 படங்கள்

 • Advertisement
  dinamalar-advertisement-tariff

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in