தினமலர் விமர்சனம் » பத்தாயிரம் கோடி
தினமலர் விமர்சனம்
தன்னுடன் கல்லூரியில் உடன் படிக்கும் கோடீஸ்வர மாணவி மடால்ஷாவை தானும் பெரும் கோடீஸ்வரன் எனச் சொல்லி காதலிக்கிறார் ஏழை நாயகர் துருவ். ஒருநாள் உண்மை தெரியவருகிறது. முதலில் வெடிக்கும் மடால்ஷா, பிறகு துருவ் மீது உள்ள காதலால் அவரையும் கோடீஸ்வரராக்க திட்டம் தீட்டுகிறார். அதன்படி கோடீஸ்வரியான அரசியல் தரகர் கனிஷ்காவை கவிழ்த்து அவர் வீட்டை கொள்ளையடிக்கு துருவ், கண்ணுக்கு தெரியாது மறையும் நண்பன் உதவியுடன் வெளிமாநிலத்திற்கு எஸ்கேப் ஆகிறார். அப்புறம்? அப்புறமென்ன... இவர்களை தனித்தனியாக பிடிக்க வரும் சி.ஐ.டி. போலீஸ் குரூப், கூலிப்படைகும்பல் உள்ளிட்ட இந்த மூன்று கோஷ்டிகளின் காமெடி கலாட்டாக்களே பத்தாயிரம் கோடி படத்தின் மீதிக்கதை!
புதுமுகம் துருவ், மடால்ஷா ஜோடி நச் தேர்வு! மடால்ஷா, கனிஷ்காவின் கவர்ச்சிக்கு கிளாமர் விரும்பும் ரசிகர்கள் தருவார்கள் இச் இச்! செல்முருகன், அல்வா வாசு, தியாகு, கோகுல் போன்றோர் "பத்தாயிரம் கோடி" படத்தின் பாத்திர பலம்! கே.எஸ்.மனோஜ் - ஜி.டி.பிரசாத்தின் இசை, சி.ஹெச்.ராஜ்குமாரின் ஒளிப்பதிவு உள்ளிட்டவைகள் இப்படத்தின் தொழில்நுட்பம் பலம்.
நம்பமுடியாத கதை என்றாலும் கெமிக்கல் ஸ்பிரே, கண்ணுக்கு தெரியாமல் மறையும் கார், மனிதர்கள் என்று வித்தியாசமாக யோசித்திருக்கும் இயக்குனர் சீனிவாசன் சுந்தருக்கு ஒரு ஹேட்ஸ் ஆப் சொல்லலாம்! சாலை மார்க்கத்திலேயே முழுக்கதையும் இழுவையாக நீள்வதை இயக்குனர் தவிர்த்திருந்தார் என்றால் "பத்தாயிரம் கோடி" சில கோடிகளை நிச்சயம் சம்பாதிக்கும் என்று நம்பலாம்!
ஆக மொத்தத்தில் "பத்தாயிரம் கோடி" - "வெறும் காமெடி! பெரும் காமெடி!!"--------------------------------------------------------
குமுதம் சினி விமர்சனம்
படத்தின் பெயரைப் பார்த்தவுடன் ஏதோ ஸ்பெக்ட்ரம் சமாச்சாரம் போலிருக்கிறதே என்று நினைத்தால் ஏமாந்து போவீர்கள். இது முழுக்க முழுக்க காமெடி கலாட்டா!
கல்லூரி மாணவர்கள் ஒரு வினோதமான இன்விஸிபிள் திரவத்தைக் கண்டுபிடிக்கிறார்கள். அதைத் தெளித்தால் எல்லாம் மறைந்து போய்விடும்! அதை வைத்துக் கொண்டு ஒரு பெண் வைத்திருக்கும் கறுப்புப் பணம் தங்கம், வைரம், என்று பத்தாயிரம் கோடியை ஆட்டை போடுகிறார்கள்.
தங்கத்தை விற்க மும்பை செல்லும் போது விஷயம் தெரிந்து எதிர் கும்பல் அவர்களைத் துரத்த, சி.ஐ.டி. சங்கர்லாலும் (!) நகைச்சுவைத் துப்பாக்கியுடன் அவர்களைத் துரத்த, மாய திரவம் மூலம் அவர்கள், பணப்பெட்டி, கார், என்று தாங்கள் உட்பட எல்லாவற்றையும் மறைந்து போகச் செய்து கண்ணாமூச்சி ஆடும் கலகலதான் பத்தாயிரம் கோடி.
படத்தின் தலைப்பில் மட்டுமே கோடிகளை வைத்துக் கொண்டு படத்தை லட்சக்கணக்கில் மட்டுமே செலவு செய்து எடுத்திருக்கிறார்கள். இயக்கம் சீனிவாசன் சுந்தர்.
டிவி நடன நிகழ்ச்சி புகழ் கோகுல், கனிஷ்கா எல்லாம் ஓ.கே. ரகம்.
காமெடி படத்தில் ஃபுல்ஸ்டாப் மாதிரி பாடல்கள்.
கடைசியில் பத்தாயிரம் கோடியும் சனீஸ்வரன் அருள்பாலிக்கும் சனிசிங்கனாப்பூர் கோயில் வாசலில் விழுந்து எல்லாம் அரசாங்கத்துக்கே போவது நல்ல முடிவு.
பத்தாயிரம் கோடி - சின்னப் பசங்களுக்கு மட்டும் பிடிக்கும்.
குமுதம் ரேட்டிங்: ஓ.கே.