தினமலர் விமர்சனம் » விண்மீன்கள்
தினமலர் விமர்சனம்
நூறு படங்களுக்கு மேல் இயக்கி மறைந்த இயக்குநர் கே.சங்கரின் பேரன் விக்னேஷ் மேனன் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் முதல்படம் தான் "விண்மீன்கள்". முத்தான படமும் கூட!
செரிபரல் பேல்சி எனும் வாயில் பெயர் நுழையாத ஒரு நோயினால் பிறக்கும்போதே பாதிக்கப்படும் ஒரு குழந்தை, வளர்ந்து பெரியவன் ஆனதும் இந்த உலகத்தில் சந்திக்கும் சந்தோஷங்களும் பிரச்னைகளும் தான் "விண்மீன்கள்" படத்தின் மொத்த கதையும்!
காதல் தம்பதிகளான விஷ்வா, ஷிகா ஜோடிகளின் ஆசை குழந்தை ஜீவா. பெரிபரல் பேல்சி எனும் ஒருவித மூளை மற்றும் உடல் வளர்ச்சி குறைபாட்டுடன் பிறக்கிறது! அதை காப்பகத்தில் விட்டு வளர்க்காமல் தன்னம்பிக்கையுடன் தாங்களே வளர்க்கின்றனர் விஷ்வா-ஷிகா ஜோடி. பெற்றோரின் ஆதரவு அரவணைப்பில் வளரும் ஜீவாவும், மருத்துவதுறை வியக்கும் வண்ணம் வளர்ந்து ஆளாகிறார். உடல் ஊனம், வீல் சேர் பயணம்... என்றாலும் பருவ வயதில் ஜீவாவிற்குள்ளும் காதல் எட்டிப்பார்க்கிறது. அனுஜா ஐயர் மீதான அந்த காதல் கை கூடியதா...? இல்லை வீல்சேர் வாசம், விதி வசம்... இத்யாதி, இத்யாதிகளால் கை மீறிப் போனதா...? என்பது உருக்கமான க்ளைமாக்ஸில் ரசிகர்களின் சீட்டின் நுனிக்கு கொண்டு வரும் உத்தியுடன் வித்தியாசமாக படமாக்கப்பட்டிருப்பது "விண்மீன்கள்" படத்தின் பெரியபலம்!
மேஜிக் நிபுணராக வரும் விஷ்வாவும், அவரது காதல் மனைவியாக வரும் ஷிகாவும் படத்தில் நிஜமான கணவன்-மனைவி மாதிரி வாழ்ந்திருப்பது விண்மீன்கள் படத்தின் ப்ளஸ் பாயிண்ட்களில் ஒன்று! அவர்களது குழந்தையின் குறைபாடு படம் பார்க்கும் ரசிகர்களையும் தொற்றிக் கொள்ளும் படி நடித்திருக்கும் இடங்களில் ரசிகர்களின் கண்களில் இருந்து கண்ணீர் வழிவது தவிர்க்க முடியாததாகிவிடுகிறது!
சிறுவன் ஜீவாவாக வரும் கிருஷ்ணாவும் சரி, வாலிப ஜீவாவாக வரும் ராகுல் ரவீந்தரும் சரி, அந்தப்பாத்திரமாகவே வாழ்ந்திருக்கின்றனர். பலே பலே! அப்பா விஷ்வா துணையுடனான கிருஷ்ணாவின் வீல்சேர் ஓட்டப்பந்தயமும் சரி, அனுஜா ஐயர் உடனான ராகுல் ரவீந்தரின் காதல் வசப்படுதலும் சரி இயல்பாக இருப்பது பிரமாதம்! ஜீவாவின் காதலியாக வரும் அனுஜா ஐயர், மாமா பாண்டியராஜன் உள்ளிட்டவர்களும் விண்மீன்கள் படத்தின் பலமான நட்சத்திரங்கள்!
ஜூபினின் பாடல்கள் இசையும், பின்னணி இசையும் தேனும் பாலும் கலந்த திகட்டாத சுவை என்றால், ஆனந்த் ஜெவின் ஒளிப்பதிவு திணை மாவு எனும் அளவிற்கு பிரமாதம்!
ஜீவா ஊட்டி வந்து, மாமா பாண்டியராஜனுடன் வாழும்போது அவரது தாய், தந்தை, விஷ்வா, ஷிகா என்ன செய்து கொண்டிருந்தார்கள் என்பது உள்பட இன்னும் சில வினாக்களுக்கும் டைரக்டர் விக்னேஷ் மேனன் அழகாக விடையளித்து இருந்தால் விண்மீன்கள் மேலும் உயரத்தில் ஜொலித்திருக்கும்!
உடல் வளர்ச்சி இருந்தும், கை, கால் தளர்ந்த ஒரு கதை நாயகனுக்கு தாயும், தந்தையும், காதலியும் தரும் ஆதரவை ரசிகர்களும் தந்தால் சரி! ஆக மொத்தத்தில் கமர்ஷியல் தனம் இல்லாத "விண்மீன்கள்", அதன் இயக்குநர் விக்னேஷ் மேனனின் கண்கொண்டு பார்க்கும் ரசிகர்களுக்கு சிறந்த "நல் நட்சத்திரங்கள்"!