தினமலர் விமர்சனம் » சதுரங்கம்
தினமலர் விமர்சனம்
டல்லடித்து போயிருக்கும் நடிகர் ஸ்ரீகாந்தின் மார்கெட்டை தூக்கி நிறுத்த வந்திருக்கும் புதியபடம் "சதுரங்கம்". இயக்குநர் கரு.பழனியப்பன்-ஸ்ரீகாந்த் கூட்டணியில் ஐந்தாண்டுகளுக்கு முன்பே வெளிவந்திருக்க வேண்டிய திரைப்படம். சில, பல காரணங்களால் லேட்டாக வந்திருந்தாலும் லேட்டஸ்ட்டாக வெளிவந்திருக்கிறது.
அநியாயத்தை கண்டால் அதை அப்படியே கட்டம் கட்டி பத்திரிக்கையில் பிரசுரித்து பல தரப்பையும் எதிர்க்கும் துடிப்பும், துணிவும் மிக்க பத்திரிக்கை நிருபர் ஸ்ரீகாந்த்! இதனால், அதிகாரிகள், அரசியல்வாதிகள் என பல தரப்பிலும் எக்கச்சக்க எதிரிகளை சம்பாதித்து வைத்திருக்கும் ஸ்ரீயின் காதலி சோனியா அகர்வால் கடத்தப்படுகிறார். சோனியாவை கடத்தியது யார்...? கடத்தப்பட்ட சோனியா மீட்கப்பட்டாரா இல்லையா...? காதலியை மீட்க ஸ்ரீகாந்த் என்ன செய்தார்? என்பதுதான் "சதுரங்கம்" படத்தின் மொத்த கதையும்!
இதுநாள் வரை ரொமாண்டிக் ஹீரோவாக மட்டும் உலா வந்த ஸ்ரீகாந்த் ஆக்ஷ்ன் ஹிரோ அவதாரம் எடுத்திருக்கிறார். குட்டை தலைமுடி, மூக்கு நுனி கோபம், கண்ணியமான பார்வை என்று மிடுக்காக மிரட்டியிருக்கிறார் ஸ்ரீ. ஆக்ஷ்ன் ஹீரோ ஆகிவிட்டதால் ரொமாண்டிக்-லவ் எபிசோட்டிற்கு லீவும் கொடுத்து விடவில்லை. அந்தப்பக்கமும் சோனியாவுடன் சும்மா புகுந்து புறப்பட்டு, மனிதர் எல்லா தரப்பு ரசிகர்களையும் திருப்திபடுத்தி இருக்கிறார் என்றால் மிகையல்ல! பத்திரிக்கை நிருபர் ஸ்ரீகாந்தின் முகத்தில் இப்பட இயக்குநரும், முன்னாள் பத்திரிக்கையாளருமான கரு.பழனியப்பன் தெரிகிறார் என்பதும் மிகையல்ல!
சோனியா அகர்வாலும் தன் பங்கிற்கு நடிப்பில் மிளிர்ந்திருக்கிறார். தன் காதலர் வேலை பார்க்கும் பத்திரிக்கையை ரெகுலராக வீட்டிற்கு பேப்பர் போடும் பையனை போட சொல்வதில் தொடங்கி கடத்தப்பட்ட இடத்தில் கிடைக்கும் கேப்பில் போனை திருடி காதலனுக்கு தகவல் சொல்லும் காட்சிகள் வரை ஒவ்வொன்றிலும் தனி முத்திரை பதித்திருக்கும் சோனியாவிற்கும், இந்தபடம் இழந்த மார்க்கெட்டை பெற்று தருமென்றால் மிகையல்ல!
ஸ்ரீ-சோனியா ஜோடி மாதிரியே கணேஷ் யாதவ், "பிதாமகன்" மகாதேவன், மணிவண்ணன், ஸ்ரீமன், மயில்சாமி, இளவரசு என ஒவ்வொருவரும் பாத்திரத்திற்கேற்ற பளிச் தேர்வு
வித்யாசாகரின் இனிமை கொஞ்சும் மெலடி இசையும், திவாகரின் இயற்கை எழில் கொஞ்சும் ஒளிப்பதிவும் படத்தின் பெரிய பலம்! என் காதலியை கடத்தலைங்கறதுக்காக நீ நல்லவனாயிட முடியாது... எனும் ஒற்றைவரி டயலாக்போதும், இயக்குநர் கரு.பழனியப்பனின் சாதுர்யத்தை பறைசாற்ற! அதேநேரம் க்ளைமாக்ஸ் சண்டை காட்சியில் மிஸ்ஸாகும் லாஜிக் விஷயங்களில் இன்னும் சற்றே கூடுதல் கவனம் செலுத்தியிருந்தால் "சதுரங்கம்" சபாஷ் என்றிருக்கும் மொத்த திரையரங்கமும்!
------------------------------------------------------------------------------
குமுதம் சினிமா விமர்சனம்
படப்பெட்டிகளில் ஐந்தாறு வருடங்கள் காத்திருந்துவிட்டு, இறுதியில் திரையைத் தொட்டுவிட்டது, "சதுரங்கம். வெளிச்சத்துக்கு வராத பிரச்னைகளைத் தோண்டித் துருவி, அனலைக் கிளப்பும் புலனாய்வு நிருபர். அவனைப் பழிவாங்கக் காத்திருக்கும் சமூக விரோதிகள். காதல் தனிந்து திருமணத்தில் முடியும் நேரத்தில் கடத்தப்படுகிற அவனது காதலி. நிருபருக்கும் கண்ணுக்குத் தெரியாத எதிரிக்கும் இடையே நடக்கும் "வாழ்வா சாவா? போராட்டம்தான் "சதுரங்கம்.
புலனாய்வு நிருபர் திருப்பதிசாமியாக ஸ்ரீகாந்த். சாந்தமான இமேஜுக்குச் சம்பந்தமே இல்லாத கேரக்டரை துணிச்சலாக ஏற்று ஜெயித்திருக்கிறார். ஸ்ரீகாந்த் திட்டமிட்டுக் குற்றம் செய்து, சிறைக்குப் போய், உள்ளே நடக்கிற தில்லுமுல்லுக்களைப் பத்திரிகையில் புட்டுப் புட்டு வைப்பது ஓர் உண்மையான பத்திரிகையாளனுக்கே உரிய ஹீரோயிசம். ஸ்ரீகாந்துக்கும் சோனியா அகர்வாலுக்கும் இடையேயான ஒப்பனையற்ற காதல், இந்த ஆக்ஷன் கதையைத் தூக்கி நிறுத்துகிற சாக்லேட் எபியோடு. அதிகம் அலட்டாமல் கண்டிப்பு, வெட்கம், பயம், வெறுப்பு என சோனியா நிகழ்த்தும் எக்ஸ்பிரஷன் மாயாஜாலம், அவரை இதுவரை தவிர்த்த இயக்குநர்களுக்கு அதிர்ச்சியளிக்கும்.
ஸ்ரீகாந்தின் அப்பாவாக "உதிரிப்பூக்கள் விஜயன் வரும் காட்சிகளில் "ஒரு இயல்பான நடிகனை மிஸ் பண்ணிட்டோமே என்ற வருத்தம் தோன்றுகிறது. நியூஸ்பேப்பர் செய்திகளை நம்பியே பொதுக் கூட்டத்தில் பேசும் அரசியல்வாதி இளவரசு மிகையாகச் சித்திரிக்கப்பட்டிருந்தாலும், சினிமாவில் இதுவரை பதிவாகாத கேரக்டர். பத்திரிகை ஆசிரியராக வரும் மணிவண்ணன், தப்பு பண்ணுவதிலும் நியாயம் பார்க்கிற தாதா மகாதேவன், ஜெயில் சூப்பரிண்டெண்ட் ஆகியோர் போகிற போக்கில் கவனம் ஈர்க்கிறார்கள்.
கடத்தப்பட்ட சோனியாவை மீட்கப் போராடும் ஸ்ரீகாந்துக்குப் பத்திரிகைச் சூழலிலிருந்தே வழிகள் கிடைப்பது நல்ல ஐடியா. சிறைச்சாலை அக்கிரமங்களைச் சொல்லும் போது "ஆட்சி மாறலாம். பெருச்சாளி மட்டும் மாறாது என்ற வசனம் சுளீர். யதார்த்தத்தையே அழகாகக் காட்டும் திவாகரின் ஒளிப்பதிவு அருமை. காமத்தை நாசூக்காகச் சொல்லும் "விழியும் விழியும் பாடலில் வித்யாசாகரின் இசையும் அறிவுமதியின் வரிகளும் மயக்குகின்றன.
சோனியாவைத் தேடி, வில்லன் சொல்லும் இடங்களுக்கு ஸ்ரீகாந்த் ஓட, வில்லன் அங்கெல்லாம் நடந்த குற்றங்களைச் சொல்லிப் பட்டியலிடும் காட்சி சிந்திக்க வைக்கிறது. ஆனால், புத்திசாலித்தனத்தை அத்தடன் உதறிவிட்டு, இருவரும் ரயில்வே ஸ்டேஷனில் மோதி பிரச்னையை முடித்துக் கொள்வது "இதுக்குத்தானா? என்ற சலிப்பைக் கொடுக்கிறது. ஸ்ரீகாந்துக்கு தாதா மகாதேவன் காட்பாதர் ரேஞ்சுககு ஆலோசனை சொல்வதும், ஸ்ரீகாந்த் வில்லனைப் போட்டுத்தள்ளிவிட்டு துப்பாக்கியை யாரோ அடியாள் கையில் கொடுத்துச் செல்வதும் அவரது கேரக்டரின் கம்பீரத்தை நிமிடத்தில் குலைத்துவிடுகின்றன.
செக்மேட் சொல்ல இயக்குநர் கரு.பழனியப்பன் எடுத்து வைத்த மூவ்மெண்ட் சறுக்கலாக இருந்தாலும் அவர் ஆடிய சதுரங்க ஆட்டம் வசீகரம்.
சதுரங்கம் - டிராவில் முடிந்த ஆட்டம்.
குமுதம் ரேட்டிங் - ஓகே.