தினமலர் விமர்சனம் » சேவற்கொடி
தினமலர் விமர்சனம்
திருச்செந்தூர் பகுதியில் இரண்டு சூரசம்ஹாரங்களுக்கு இடையே நடக்கும் நாயகனுக்கும், வில்லனுக்குமிடையேயான நவீன சூரசம்ஹாரம் தான் "சேவற்கொடி" மொத்தபடமும்.
கதைப்படி மீன் ஏற்றிச்செல்லும் மினிலாரி டிரைவரான காளி-பவன் தன் தங்கையை அந்த வண்டிக்கும்-மீன் மண்டிக்கும் முதலாளியான சூசை - மணிமாறனுக்கு அவரது விருப்பப்படியே இரண்டாம் தாரமாக கொடுத்து, அந்த மினி லாரியை சொந்தமாக்கி கொள்ள பார்க்கிறார். இத்தருணத்தில் பவனின் தங்கை அவரது காதலருடன் ஓடிப்போக, அவரது சொந்த லாரி ஆசை நிராசை ஆகிறது. தன் தங்கை ஓடவும், தன் ஆசை நிராசையாகவும் காரணம் அதேஊரில் பேன்சி ஸ்டோர் வைத்திருக்கும் ஹீரோ பால எனும் அருண்பாலாஜிதான் எனத் தவறாக கருதும் பவன், அருணின் அம்மாவை லாரி ஏற்றிக் கொன்றுவிட்டு, அதை சவுடாலாக அவரிடமே சொல்கிறார். இதனால் வெகுண்டெழும் அருண் பாலாஜி, பவனை அடித்து துவைத்து நிர்வாணமாக்க, அதில் மானமும்-மரியாதையும் ஒரு சேர போகும் பவன், அருண்பாலாஜியை தீர்த்து கட்ட முடிவெடுத்து தொடர்ந்து தோல்வியை தழுவுகிறார். ஆனாலும் விடாமுயற்சியுடன் வில்லன் பவன், தன் பழிவாங்கும் படலத்தை தொடர, இறுதியில் நீதி வென்றதா? தர்மம் தழைத்ததா...? ஹீரோ உயிர் பிழைத்தாரா...? என்பது க்ளைமாக்ஸ்! இப்படி ஒருபக்கம் ஆக்ஷ்னும், ரியாக்ஷ்னுமாக நகரும் கதையில், மற்றொருபக்கம், ஹீரோவின் லவ்வும், சென்டிமெண்ட்டுமாக படத்தை ஜனரஞ்சமாக நகர்த்தி, ஒரு காதல் கமர்ஷியல் படத்தை கலக்கலாக தந்திருக்கிறார் இயக்குநர் இரா.சுப்பிரமணியன். அதற்காகவே அவரைப் பாராட்டலாம்!
பாலாவாக அருண்பாலாஜி புதுமுக ஹீரோ என்று சொல்ல முடியாத அளவிற்கு பிரமாதமாக நடித்திருக்கிறார். நிஜத்தில் நீச்சல் வீரரான இவர், கலைத்துறையிலும், எதிர்நீச்சல் போட்டு முன்னேறுவார்... என்பதற்கு சேவற்கொடியில் இவரது நடிப்பே சான்று!
கதாநாயகி வள்ளியாக கேரள இறக்குமதி பாமா, ரொம்ப பாந்தம்! நாயகர் நாயகியை விட அதிக முக்கியத்துவம் வாய்ந்த பாத்திரம் பவனுக்கு! வில்லன் காளியாக எத்தனை சொன்னாலும் விளங்காத கேரக்டரில் வெளுத்து வாங்கி, ஹீரோவே காப்பாற்ற நினைத்து, விதி வசத்தால் இறுதியில் இறந்தும் போவது சேவற்கொடிக்கு சிறப்பு சேர்க்கிறது! இவர்கள் தவிர கதாநாயகனின் தந்தையாக "பிதாமகன்" மகாதேவன், தாய் ஸ்ரீரஞ்சனி, நாயகியின் தந்தையாக தவசி, தாயாக பேபி, நாயகரின் போலீஸ் அத்தானாக தயாள், இரண்டாம் கல்யாணத்திற்கு ஆசைப்படும் காளியின் முதலாளியாக வரும் சூசை, பவனின் மினிலாரி கிளினராக சாய் ஜெகன், பவனின் தங்கையாக வரும் ஜானகி என எல்லோரும் பாத்திரமறிந்து பளிச்சிட்டிருப்பது சேவற்கொடிக்கு மேலும் மகுடம் சேர்க்கிறது.
எங்கேயும் எப்போதும் சி.சத்யாவின் "வேலா வேலா..." பாடலும், "வேட்டையை நடத்திவிடு..." பாடலும் வித்தியாசம். சத்யனின் இதமான இசை மாதிரி, பி.செல்லத்துரையின் அழகிய ஒளிப்பதிவும் படத்திற்கு பெரிய பலம்!
சேவற்கொடியின் முதலிலும், முடிவிலும் வரும் சூரசம்ஹார காட்சிகள் தமிழ் சினிமாவில் இதுவரை பாத்திராதது! இதுமாதிரி ஆன்மீக களத்தில் ஆக்ஷ்ன், காமெடி, லவ், சென்டிமெண்ட், சேஸிங் உள்ளிட்டவைகளை கலந்து, வினை விதைத்தவன் வினை அறுப்பான்! எனும் மெஸேஜையும் அழகாக சொல்லியிருக்கும் இயக்குநர் இரா.சுப்ரமணியன், மகா துணிச்சல்காரர் தான்! அவரது துணிச்சலுக்கு தாரளமாக ஒரு ஹேட்ஸ் ஆப் சொல்லலாம்!
ஆக மொத்தத்தில் இரா.சுப்ரமணியனின் எழுத்து, இயக்கத்தில் ஒருசில குறைகள் ஒட்டிக்கொண்டிருந்தாலும், மேற்படி நல்ல விஷயங்களுக்காக அவற்றை தட்டி விட்டு பார்த்தோமேயானால் "சேவற்கொடி" உயரே உயரே பறப்பது உறுதி!
"சேவற்கொடி" - "சக்ஸஸ் கொடி"--------------------------------------------------------------
கல்கி சினி விமர்சனம்
டிபார்ட்மென்ட் ஸ்டோர் நடத்தும் பாலாவுக்கும், மீன் வண்டி டிரைவர் காளிக்கும் இடையே நடக்கும் போட்டா போட்டிதான் கதை. திருச்செந்தூர்ப் பகுதியில் கதை நடக்கிறது. படத்தில் காட்டப்படும் கடலும், கடல்சார்ந்த நெய்தல் பிரதேசங்களும் இயல்பு மீறாத அழகு என்றால், பேசப்படும் வட்டார வழக்கு இன்னொரு வகையான அழகு.
ஹீரோ அருண்பாலாஜி, குற்றாலீஸ்வரன் சாதனையை முறியடித்த ரியல் நீச்சல் வீரர். வில்லன் பவணுக்கு எதிராக அவர் போடும் சண்டைக் காட்சிகளில் எதிர்நீச்சல் போடும் வேகம் தெரிகிறது. காதல் காட்சிகளில் நடுக்கடலில் மாட்டிக் கொண்ட நீச்சல் தெரியாத சாமானியன் போல் தத்தளிக்கிறார். நாயகி பாமா தமிழுக்கு ஏற்ற குடும்பப்பாங்கு. நடிப்பிலும் குறிப்பிட்டுச் சொல்லும்படி அங்கு இங்கு என சிலதான்.
நாயகனுக்கு எதிர்த்திசையில் கதை நகர்த்தும் பவண், வாயில் பீடி, அலட்சியப் பேச்சு, அலட்டல் நடிப்பு என அசல் வேன் டிரைவரை ஞாபகப்படுத்துகிறார். நீயா? நானா? போட்டி போல் மோதல்களும் முரண்பாடுகளும் கதையை நகர்த்துகின்றன. ஒரு வணிக சினிமாவின் விதிகளுக்குட்பட்ட நகைச்சுவைக் காட்சிகள், மிகைப்படுத்தப்பட்ட காட்சிகள் இல்லாதது ஆறுதலான ஆரோக்கியம்.
திரையில் முகம் காட்டாத இன்னொர ஹீரோ ஒளிப்பதிவாளர் பி.செல்லதுரை. மூன்றாவது கையாகவே மாறிவிட்டது இவரது கேமரா. துரத்தல் காட்சிகளுக்கும், மிரட்டும் சண்டைகளுக்கும் திலிப் சுப்பராயன் ஆக்ஷன் அணி செய்கிறது.
“புறாவாய் வந்து போகிறாய்’, “கம்பி மத்தாப்புக் கண்ணு’ போன்ற பாடல்கள் சி.சத்யாவின் சத்துள்ள இசைக்கு எடுத்துக்காட்டு. யதார்த்தமாய் காட்சிகளைப் பதிவுசெய்யும் இயக்குனர், அடிப்படையில் வசனகர்த்தா என்பதால், வசனங்களில் தேவைப்படும் சுருக்கமும், தேவையற்ற நீளமும் கைகூடி வந்திருக்கின்றன. நாயகன், நாயகியின் காதலில் அழுத்தம் இல்லாதது படத்தின் பெரிய குறைதான்.
சேவற்கொடி - வேகம் கம்மி.