தினமலர் - திரைவிமர்சனம்
சண்டை பயிற்சியாளர் டினுவர்மா இயக்கத்தில் அர்ஜுன் அண்ட்கோவினர் நடித்து வெளிவந்திருக்கும் ஆக்ஷன் த்ரில்லர் திகில் படம்தான் “காட்டுப்புலி’
அர்ஜுனும் அவரது மனைவி ப்ரியங்கா தேசாயும் டாக்டர் தம்பதிகள் தங்களது ஆசை மகள் பிறந்த நாள் கொண்டாடத்திற்காக காடும் மலையும் நிரம்பிய சுற்றுலாத்தளம் ஒன்றிற்கு காரில் டூர் கிளம்புகின்றனர். ஹைவேஸில் செம டிராபிக் என்பதால் திகிலும் சவாலும் நிரம்பிய அடர்ந்த காட்டுப் பாதை வழியாக காரை வளைத்துக் கொண்டு அந்த டூரிஸம் பகுதிக்கு போக முயற்சிக்கின்றனர். வழியில் வழிமறித்து கிடக்கும் காரில் இவர்களது கார் மோத., அதில் அங்கு முன்னமே வந்து திக்கு தெரியாமல் நிற்கும் இரண்டு காதல் ஜோடிகள் இவர்களுடன் இணைகின்றனர். எல்லோரும் நட்பாகி அந்த அடர்ந்த திகில் நிறைந்த காட்டை நடந்தே கடக்க முயல்கின்றனர். அவர்களின் முயற்சிக்கு முட்டுக்கட்டை போடுகிறது மனித உறுப்புகளை கடத்தி விற்கும் ருத்ரா என்னும் காட்டுவாசி டினுவர்மா தலைமையிலான ஒரு கும்பல்! அவர்களிடமிருந்து அர்ஜுன் அண்ட் கோவினர் தப்பி பிழைத்தனரா? இல்லையா? என்பது க்ளைமாக்ஸ்!
அஜய் எனும் ரஜனீஷ், திவ்யா எனும் சயாலிபகத் மற்றும் ராஜ் எனும் அமித், சோனால் எனும் ஹனாயா, கவுரவ் எனும் ஜான், ஸ்ருதி எனும் ஜெனிஃபர், பேபி அஞ்சலியாக தன்யா இவர்களுடன் அர்ஜுனும், பியங்கா தேசாயும் திகிலை முகத்தில் தேக்கி ரசிகர்களை திக்திக்கிற்கு உள்ளாக்கியுள்ளனர் என்பது ப்ளஸ்.
ராஜேந்திர பிரசாத்தின் ஒளிப்பதிவும், விஜய் வர்மாவின் இசையும் கூட மிரட்டுகிறது!
அதேநேரம், அடர்ந்த காட்டிற்குள் காட்சிகளை நீடித்துக்கொண்டேபோவது சுத்தபோர்! படத்தில் ருத்ரா எனும் பாத்திரத்தில் அடிக்கடி மனித ரத்தத்தை முகத்தில் பூசிக்கொண்டு இயக்குனர் டினுவர்மா, இயக்கத்திலும் பயமுறுத்தி இருப்பது பரிதாபம்.
ஆக மொத்தத்தில் காட்டுபுலி உறுமவில்லை கடித்து குதறிவிடுகிறது?