Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » விமர்சனம் »

நான் கடவுள்

நான் கடவுள்,
18 பிப், 2009 - 00:00 IST

 கருத்தைப் பதிவு செய்ய

எழுத்தின் அளவு:
தினமலர் விமர்சனம் » நான் கடவுள்

தினமலர் விமர்சனம்இந்த குழந்தை உங்களுடன் இருந்தால் ஆபத்து... இதை பார்ப்பதே பேராபத்து எனும் ஜோதிடர்களின் பேச்சை நம்பி, சிறு வயதிலேயே தன்னால், காசியில் கொண்டு போய் விடப்பட்ட ஆர்யாவைத் தேடி 14 வருடங்கள் கழித்து காசிக்கு வருகிறார் அவரது அப்பா அழகன் தமிழ்மணி. தாடி மீசையுடன் சாமி (கவனிக்கவும்... சாமியார் அல்ல சாமி!) ஆகி விடும் தன் பிள்ளை ஆர்யாவை காசியில் உள்ள பண்டிதர் உதவியுடன் பார்த்த மாத்திரத்திலேயே கண்டு பிடித்து விடுகிறார் தமிழ்மணி!

அதன் பின் அவரது குருஜி மூலம் பேசி, ஆர்யாவை தமிழகத்தில் உள்ள சொந்த ஊருக்கு அழைத்து வருகிறார் அப்பா. வந்த இடத்தின் தன்னை பெற்றெடுத்த தாயையே அசிங்கப்படுத்தும் ஆர்யா, ஊரின் ஒதுக்குப்புறத்தில் உள்ள சாமி கோயிலில் கஞ்சா சாமியார்களுடன் சேர்ந்து கஞ்சா அடித்தபடி பொழுதை கழிக்கிறார். காசியில் கற்ற வேத பாடங்களை தமிழ், இந்தி, சமஸ்கிருதத்தில் உளறியபடி நாட்களை நகர்த்துகிறார். ஒரு கட்டத்தில் குழந்தைகள், உடல் ஊனமுற்றவர்களை அடித்து, உதைத்து பிச்சை எடுக்க வைத்து பிழைப்பு நடத்தும் தாதா கும்பலில் பார்வையற்ற பூஜா சிக்கிக் கொள்ள, அவரது வேண்டுகோளுக்கு இனங்கி தானே கடவுளாகி அந்த குரூப்பின் முக்கிய புள்ளிகளுடன் மூர்க்கத்தனமாக மோதி அவர்களுக்கு நரகத்தையும், பூஜாவிற்கு சொர்க்கத்தையும் காண்பிப்பதே நான் கடவுள் படத்தின் மொத்த கதையும்.

இப்படி ஒரு காய்ந்து போன கதையை எத்தனை நகைச்சுவையாகவும், ஜனரஞ்சகமாகவும் சொல்ல முடியுமோ? அத்தனை அற்புதமாக சொல்லி கலர்புல் காட்சிகளாக்கி வெற்றி பெற்றிருக்கிறார் பாலா. கதாநாயகிக்கு கண் தெரியாது. பிச்சைக்காரியாக இருக்கிறார். நாயகன் ஆர்யாவோ  நீண்ட ஜடா முடி, அடர்ந்த தாடி, அழுக்கு மண்டை ஓடு மாலை, சுடுகாட்டு பூஜை என சுத்த சன்யாசி! அப்பா அழகன் தமிழ்மணி, மொட்டைத்தலை வில்லன் ராஜேந்திரன், அவரது குடிபோதை அடியாட்கள், டோப்பா சுருள்முடி பிச்சை பார்ட்டி சிங்கம் புலி, ஆர்யாவை சாமியாக பூஜாவிற்கு அடையாளம் காட்டும் மலைக்கோயில் சாமியார் கோவை கிருஷ்ணமூர்த்தி, அழுமூஞ்சி அம்மா பாரதி என முக்கிய பாத்திரங்கள் மட்டுமல்ல... பிசசை எடுக்க மொட்டை வில்லன் கோஷ்டியால் துன்புறுத்தப்படும் அனாதைகள், சிறுவர்கள் என ஆளுக்கு ஒரு உடல் குறைபாட்டுடன் அறிமுகமாகியிருக்கும் 175 புதுமுகங்களும் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். பிச்சைக்கார காட்சிகள் சோக கீதமே வாசித்தாலும்... அதனை படத்தின் கதையோடும், காட்சிகளோடும் பின்ன பிணைத்திருக்கும் இயக்குனர் பாலாவின் மெல்லிய நகைச்சுவை உணர்ச்சியும், இளையராஜாவின் பின்னணி இசையும், ஆர்தர் ஏ.வில்சனின் அழகிய ஒளிப்பதிவும், ஜெயமோகனின் வசனமும், நம்மை படத்தின் காட்சிகளோடும், கதை வசனத்தோடும் கட்டி போட்டு விடுகின்றன.

ஆரம்ப காட்சிகளில் காசியின் ஜனநெருக்கடி மிக்க பகுதிகள், அதன் பின் மலைக்கோயில் பிச்சைக்காரர்கள் அறிமுகம், ரயிலில் பாடி பிச்சையெடுக்கும் பூஜா அறிமுகம், போலீஸ் ஸ்டேஷனில் உல்டா பாடல், உல்டா நடிகர்கள் காமெடி போன்ற காட்சிகள் ரசிகர்களுக்கு புதிய உலகத்தையே படம் பிடித்து காட்டியது என்றால் மிகையல்ல. அதே நேரம் பூஜாவை அடைய துடித்து, பக்கம் பக்கமாக டயலாகக் பேசும் கொடூர மூஞ்சிக்காரரின் போர்ஷனை இன்னும் கொஞ்சம் வெட்டித் தூக்கியிருக்கலாம்.

ஆர்யா சுடுகாட்டு சாமி கால பைரவராகவே சில காட்சிகளில் நம்பை பயமுறுத்துகிறார்... சில காட்சிகளில் பரவசப்படுத்துகிறார். அதிகம் டயலாக் பேசாமல் நிறைய நடித்திருக்கும் ஆர்யாவுக்கு நிச்சயம் இப்படத்தின் மூலம் தேசிய விருதுகள் உள்ளிட்ட எக்கச்சக்க விருதுகம் குவியலாம். அதே மாதிரி பூஜாவிற்கும், அவரது பிரமாதமான நடிப்பு, விருதுகளை வசப்படுத்தி, வரிசைப்படுத்தலாம். ஆர்யா பூஜா தவிர வில்லன் ராஜேந்திரன், கோவை கிருஷ்ணமூர்த்தி, அழகன் தமிழ்மணி, சிங்கம்புலி, பாரதி, 175 புதுமுகங்கள் என அனைவருக்குமே பாராட்டு பத்திரமும், விருதுகளும் கிடைக்க வாய்ப்பிருக்கிறது. அத்தனை பேரையும் அந்த அளவுக்கு அதட்டி, உருட்டி, மிரட்டி இப்படி நன்றாக வேலை வாங்கியிருக்கும் பாலாவிற்கு <ஒட்டுமொத்த உயரிய விருதுகளையும் மொத்த குத்தகைக்கு விடலாம்.

கால பைரவசாமி மூலம் கர்ண கொடூர இதயங்களை கொன்று குவிப்பதுடன், கருணை கொலைகளையும் துணிச்சலாக ஆதரித்திருக்கும் பாலாவை மனமுவந்து பாராட்டலாம். வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத வித்தியாசத்துடனும், விறுவிறுப்புடனும் வெளிவந்திருக்கும் நான் கடவுள் நல்ல (வசூல்) கடவுள் ஆவது ரசிக கடவுள்களின் கைகளில்தான் உள்ளது!

நான் கடவுள் :  பயமும் பரவசமும்

________________


குமுதம் விமர்சனம்


அதிகபட்சம் ஒரு ரூபாய் பெறுமானமுள்ள கருணையுடன் நாம் தினமும் விடை கொடுக்கிற பிச்சøக்காரர்களின் மறைக்கப்பட்ட வாழ்க்கையைத் திரையில் காட்டிய துணிச்சலுக்காகவே பாலாவை முதலில் மனம் திறந்து பாராட்டலாம்.

வெறும் உருப்படிகளாகக் கையாளப்படும் அவர்களின் பாதையில் தன்னையே கடவுளாக நம்பும் ஒருவன் குறுக்கிட்டால் என்ன நடக்கும் என்பதுதான் கதை.

தீப்பிடிச்க தீப்பிடிக்க ஆட்டம் போட்ட ஆர்யாவா இது? வலியோரிடம் வதைபடும் எளியோருக்காக ரௌத்ரம் பழகும் ருத்ரன் கேரக்டரை ஒரு தவமாகவே செய்து காட்டியிருக்கிறார். சாமியார் ஆகிவிட்ட ஆர்யாவை மறுபடியும் குடும்பத்துக்குள் கொண்டு வர நடக்கும் பாசப்போராட்டம் தமிழ் சினிமாவுக்கு ரொம்பப் புதுசு. பாட்டுப் பாடி கையேந்துகிற பார்வையற்ற பெண் பூஜா என்று யாராவது சொன்னால்தான் நம்ப முடியும்.

தளர்வாகத் தொங்கும் ரிஸ்ட் வாட்ச், செய்கிற வேலைக்குக் கொஞ்சமும் தொடர்பில்லாத திருநீற்றுக் கீற்று, கறுப்பு வேஷ்டி சகிதம் வருகிற அந்த தாண்டவன் யாருங்க? உண்மையிலேயே பிச்சைத் தொழிலில் பல வருஷம் ஈடுபட்டு பல லட்சங்கள் பார்த்தவர் மாதிரி பயமுறுத்தியிருக்கிறார். எப்போதும் ஜோக் அடித்துக் கொண்டிருக்கிற கூனல் சிறுவன், சுயநலம் பாதி குற்றவுணர்வு பாதியாய் வாழும் எடுபிடி முருகன், அன்பைக்கூட சிடுசிடுவெனவே வெளிப்படுத்துகிற குள்ளப் பெண் போன்றவர்களும் மனசைத் தொடுகிறார்கள். கவிஞர் விக்ரமாதித்தனின் கிண்டல் பேச்சைச் சரியாகப் பயன்படுத்தியிருக்கிறார்கள்.

இந்த கேரக்டர்களை வைத்துக் கொண்டு சோகக் கண்காட்சி நடத்தாமல், அவர்கள் மூலமாகவே நக்கல்களையும், நையாண்டிகளையும் தந்திருப்பது பாலாவின் தனித்திறமை. யதார்த்தம் மீராத ஜெயமோகனின் வசனம் படத்துக்குப் பக்கபலம். ஆர்தர் வில்சனின் கேமரா காசியை கண்டு ஒரே சமயத்தில் ரசிக்கவும் மிரளவும் வைக்கிறது. பிச்சைப்பாத்திரம் பாடல் விஷûவலைசேஷனில் கண்ணில் நீர் தளும்பி நெஞ்சில் நிறைகிறது. இசையில்  இளையராஜா ரௌத்ரம், சாத்வீகம் என இன்னும் பல முகம் எடுத்து உடுக்கை அடித்து உறுமியிருக்கிறார்.

நீதிமன்றத்தில் கூட தன்னை கடவுள் என்று அறிவிக்கும் ஆர்யாவின் கேரக்டர் வடிவமைப்பில் முழுமை இல்லை. அதிர்ச்சியூட்டும் க்ளைமாக்ஸை நியாயப்படுத்துவதற்காக கடைசியில் பூஜா நிறைய பேசுவது உறுத்தல். “வரை விலைபேசும் கோரமான நபரை எல்லோரும் பார்த்து அருவருப்படையும் காட்சியில் அநியாயத்துக்கு செயற்கைத்தனம்.  மற்றவர்களால் விநோதமாகப் பார்க்கப்படுகிற ஹீரோ முடிவில் அதிரடி நீதி வழங்கும் வழக்கமான பாலா ஃபார்முலா இதிலும் தொடர்வது சற்று சலிப்பைத் தருகிறது. சின்னச் சின்ன குறைகளைத் தாண்டி படம் முடிந்தபிறகு மனசில் கவியும் அமைதிதான் "நான் கடவுளின் வெற்றி.

நான் கடவுள் - மதிக்கலாம், வணங்க முடியவில்லை.


--------------------------
விகடன் விமர்சனம்


பதறவைக்கிற பாலா ஸ்பெஷல் "ருத்ர தாண்டவம்'!

"அஹம் பிரம்மாஸ்மி' - அத்வைதத்தின் அடிப்படைச் சூத்திரத்தின் அதிரவைக்கும் உச்சாடனம் தான் படம். காசியில் கைவிட்ட தன் மகனைத் தேடி 14 வருடங்கள் கழித்து வருகிறார் ஒரு தந்தை. பிண வாடையையே மூச்சு காற்றாக கொண்ட, பிணங்களுக்கு மோட்ச வரம் கொடுக்கிற "அகோரியாக அலைகிற மகன் ஆர்யாவை, சொந்த ஊருக்கு அழைத்து வருகிறார். ஆனால் உறவுகள் மேல் பற்றற்று கஞ்சா போகத்திலும் மோனத் தியானத்திலும் மூழ்கிக்கிடக்கிறார் முரட்டு ஆர்யா. அதே ஊரில் இருக்கிறது, உடல் சிதைந்த மனிதர்களையும் ஊனப்படுத்தப்பட்டவர்களையும் பிச்சை எடுக்கிவைக்கிற தாண்டவனின் "ஊனமுற்ற வர்கள் தொழிற்சாலை'. அதில் சிக்கி கொள்கிறார் பார்வையற்ற பூஜா. இரக்கமற்ற அரக்கர்களிடம் சிக்கி சிதையும் பூஜாவுக்கு ஆர்யா அளிக்கும் மோட்சம் என்ன என்பதே கடவுள் கதை!

ஜெயமோகனின் "ஏழாவது உலகம்' நாவலைத் தழுவக, விரிகிறது திரைக்கதை. கவன எல்லைக்குள் வராத பிச்சைக்காரர்களின் துயரங்கள், கொண்டாட்டங்கள் ஆகியவற்றை முதன்முதலாக திரையில் கொண்டு வந்ததற்காக இயக்குநர் பாலாவுக்கு பாராட்டு! உடல் கலைந்த , உயிர் மிஞ்சிய ஜீவன்களை உருப்படிகளாக்கி பரிதாபப் பிச்சை எந்திரங்களாக மாற்றும் கொடூரத்தை அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறார். அதே போல, இது வரை நாம்  அதிகம் அறிந்திராத அதிர்ச்சியாக, நான் கடவுளாகி  வரமும் சாபமும் வழங்கும் அகோரி சாமியார்களைப் பற்றி பாலீஷாகச் சொல்கிறார். இரண்டு வகை மனிதர்களையும் ஒரே புள்ளியில் இணைத்திருப்பது ரசிக்கத்தக்க புத்தி சாலித்தனம்!

கங்கை கரையெங்கும் பிணங்கள் எரிய, வேத கோஷங்கள் முழங்க, சந்தியாசிகள் நர்ததனமாட... தலைகீழ் தவம் புரிந்த படி ஆக்ரோஷமாக ஆர்யா அறிமுகம் ஆகும் காட்சி, ஒரு தமிழ் சினிமா நாயகனுக்கு "ரௌத்ர ஆரம்பம்'. அலை பாயும் கண்களும், அலட்சிய மேனரிஸமுமாகப் பார்த்து பழகிய ஆர்யாவா இது? சிவந்த கண்களில் வெறித்த பார்வை, விறைப்பான உடம்பு, முறைப்பான நடை,  கனல் வெப்பத்தையும் கனமான அர்த்தத்தையும் சுமந்து வரும் சிக்கன வார்த்தைகள், ரணகளச் சண்டையின் போதும் சடாரென ஆசனம் போட்டு அமரும் லாகவம் என நிஜ காலபைரவனாக நம் மனதில் ஆசனமிடுகிறார் ஆர்யா.

பார்வையற்ற பிச்சைக்காரப் பாடகியாக பூஜா உருக்கத்தால் உலுக்கி எடுத்திருக்கிறார். குழந்தைக்குப் புத்திமதி சொல்வது போல ஆர்யாவுக்கு "அம்மாவை மதிக்கணும்... சரியா சாமீ?' என்று டீச்சர் டைப்பில் அறிவுரை சொல்லி, "தாயிற் சிறந்த கோயிலுமில்லை' என்று பாடுகிற போது... சபாஷ் பூஜா. தன் கேர் டேக்கரின் முதுகில் தொற்றிக் கொண்டு வருவது, புழுதிண காட்டில் புரள்வது என இவர்தான் கதையின் நாயகி!

"உருப்படி'களின் ஏஜென்ட்டாக வரும் கிருஷ்ணமூர்த்தியின் பாத்திரப் படைப்பு மனுஷத்தனம் மிக்க அழகு. "வசூலைக் கெடுத்தராதீங்கடா!' என்று தன் கீழுள்ள பிச்சைக்கார்களிடம் கெஞ்சும் போதும், போதையில் அவர்களை இழுத்துவைத்துக் கொஞ்சும் போதும் ரசிக்கவைக்கிறார். வில்லன் தாண்டவனாக மொட்டை தலை, நரம்பு உடம்பு, கடவுள் பக்தி, துளியும் இரக்கமில்லாத கொடூரம் என வித்தியாச வில்லன். கால் திருகிப் பிறந்திருக்கும் ஓர் ஊனமுற்ற பையனை பார்த்து, "நல்ல உருப்படி... நமக்கு வேலை வைக்கல' என்று சந்தோஷம் காட்டும்போதும், பூஜாவை அடித்துத் துவைக்கும்போதும் மிரட்டி எடுக்கிறார்.

"தாயே மகாலெட்சுமி, ஆதிலெட்சுமி, வரலெட்சுமி...' என்றெல்லாம் இறைஞ்சியும் காசு போடாத பெண்ணை "ஏய்! ஜோதிலட்சும்' என்கிற குசும்பிலும், "அம்பானி யாரு?' என்றதும், "செல்போன் விக்கிறவய்ங்க. அதெல்லாம் உனக்கு தெரியாது' என்ற நக்கலிலும் தெறித்து சிரிக்கவைக்கிறான் வடுகப்பட்டி செந்தில்.

கடவுளைக் கண்டபடி வசை பாடும் கவிஞர் விக்கிரமாதித்யன், பிச்சைக்காரர்களிடம் பரிவு காட்டும் திருநங்கை கீர்த்தனா, மாங்காட்டுச் சாமியாக வரும் "கோவை' கிருஷ்ணமூர்த்தி, கூத்தாடும் "நயன்தாரா' என சின்னச் சின்ன கேரக்டர்கள் சுவாராஸ்யத்துக்கு கை கொடுக்கிறார்கள். "இவனையும் சீக்கிரம் தொழிலதிபர் ஆக்கிட்டா, ஏதாவது ஒரு நடிகைக்குக் கல்யாணம் பண்ணி வெச்சிடலாம்' என்று பிச்சைக்காரர்கள் கதைத்துக் கொள்ளுமிடங்களில் சிரிக்கவைக்கும் ஜெயமோகனின் வசனம், கடவுளைப் பற்றிய சுரீர் வசனங்களில் சீரியஸாகக் கவனிக்க வைக்கிறது.

சிதிலமுற்ற மனிதர்கள், அகோரி சாமியார்கள் என்று நாம் இதுவரை அறிந்திடாத இரு பெரும் உலகின் தரிசனங்களை அசாத்திய இசையால் சாத்தியப்படுத்துகிறார் இளையாராஜா. "பிச்சைப் பாத்திரம்...' பாடலில் உருக்கத்தின் உச்சமாகத் தாலாட்டுகிறது இசை. காசியின் மொத்த குணத்தையும் சில நிமிடங்களில் சொல்லிவிடுகிற கட் ஷாட்கள், பொட்டல் காட்டின் நடுவே அண்டர்கிரவுண்ட் பிச்சைக்காரர்களின் கிடங்கு, மலைக் கோயில் சண்டைக் காட்சிகள் அனைத்திலும் ஆர்தர் ஏ.வில்சனின் கேமரா அனலும் அழகுமாக வெளிப்படுகிறது. ஒரிஜனல் அடியும் உக்கிர வேகமுமாகச் சண்டை காட்சிகளில் ஆர்யாவின் ரௌத்ரத்துக்கு ஏற்ப மிரட்டல் மேஜிக் செய்திருக்கிறார் "சூப்பர்' சுப்பராயன்!

இத்தனை இருந்தாலும் மீண்டும் மீண்டும் பாலாவின் முந்தைய படங்களைப் பார்ப்பது போன்ற களைப்பு தோன்றுவதைத் தவிர்க்க முடியவில்லை!

விறைத்த உடம்புடன் நடக்கும் அசாதாரண மனிதர்களைத் தாண்டி பாலாவிடம் வேறு கதை நாயகர்கள் உருவாக மாட்டார்களோ? போலீஸையும் கோர்ட்டையும் மையமாக்கிய காமெடிகளும் பாலாவின் வழக்கமே! அர்யாவின் தாய் அழும் காட்சிகள் சீரியல் எபிசோட். என்னøõன் கிராமமாக இருந்தாலும் ஒரு பொட்டல் காட்டில், கட்டி முடிக்கப்படாத கோயிலின் அடியிலேயே பிச்சைக்காரர்கள் கோடவுன் இயங்குகிறது என்பதும், வெளிநாட்டுத் தூதர்கள் கணக்காக பிசினஸ் பேச ஆட்கள் வந்து போகிறார்கள் என்பது நம்ப முடியவில்லை.

ஒரு கட்டத்துக்கு மேல் கதை நகராமல் கோயில் படிக்கட்டுகளிலும் பிச்சைக்காரர்கள் கோடவுனிலும் தேங்கி நின்றுவிடுகிறது. இறுதிக் காட்சியில் பாலாவின் வழக்கமான படங்களுக்கு நேர் எதிராக பூஜா பேசும் அத்தனை நீளமான டயலாக் அலுப்பு. பிச்சைக்காரர்கள் முதலில் அதிர்ச்சி கொடுத்தாலும், போகப் போக காமெடியாகி அவர்கள் வாழ்க்கையின் அவலச்சுவையே நகைச்சுவையாகிப் போவதால், அழுத்தம் குறைகிறது. தனித் தனி காட்சிகளில் தென்படும் பிரமிப்பு, ஒட்டுமொத்தப் படத்தை இணைத்து இழுத்துச் செல்லும் மைய இழை மிஸ் ஆவதால்... கடவுளின் கழுத்து மாலையில் ஏதோவொரு நெருடல்!

இருந்தாலும், இந்தக் களம் புதிது!. அந்தப் புது அனுபவத்துக்கும் புயல் உழைப்புக்கும் தரிசிக்கலாம், பாலாவின் கடவுளை!.

விகடன் மார்க் : 44/100


-----------------------
கல்கி விமர்சனம்


இயந்திர மயமான நகர வாழ்விலிருந்து ஒருவனை கடத்தி, யாருமற்ற மவுன அடர்வனத்தில் விட்டுவிட்டால், முதலில் பயமும் மிரட்சியும் வரும். அந்தப் படபடப்பு குறைந்தபின் தப்பிக்கும் வழி தேடும். வழி தெரிந்த பிறகு பதற்றம் தணிந்து மனம் காட்டின் அம்சங்களை ரசிக்கத் துவங்கிவிடும். அதுபோலத்தான்....

வழக்கமான... குஷிபடுத்தும் குத்துப்பாட்டு, மொக்கையான ரசனைக்கு கட்டாயப்படுத்தும் டூயட் ஸாங். காதில் பூக்கூடையை வைக்கும் ஃபைட், கிச்சு கிச்ச மூட்டும் காமெடி டிராக், ""காதல், காதல், காதல், காதல் போயின் சாதல்'' என்று மகாகவியை கொச்சைப் படுத்திவரும் கோலிவுட் ஸ்பெஷல் மசாலா... இவை எதுவுமின்றி அறியப்படாத இரு பிரதேசங்களுக்குத் தமிழ் ரசிகனை கடத்தியுள்ளது "நான் கடவுள்'.

பிரதேசம் ஒன்று; வலியும் கண்ணீரும், அன்பும் கிண்டலும் நிரம்பி ததும்பும் பிச்சைக்காரர்கள், அவர்களை முடமாக்கி வெறும் உருப்படியாகவே பாவித்து, கொடுமைப்படுத்திப் பிச்சையெடுக்க வைத்துப் பெருந்தொழில் நடத்தும் தாதாக்களின் பிடியிலிருக்கும் பிச்சைக்காரர்களின் உலகம்.

பிரதேசம் இரண்டு; வடக்கே காசியில் எரியும் பிணங்களுக்கு நடுவே ஒற்றைக் காலில் நின்று யோகம் செய்யும் நானே கடவுள் என அறிவித்து, கட்டுப்பாடற்று சராசரி வழக்கிலிருந்து விலகி நிற்கும் சாமியார்களின் உலகம்.

இந்த இரண்டு உலகங்களுக்கு ரசிகனை அழைத்துச் செல்ல ஒரு மைனஸ்.

* படம் முழுக்க கஞ்சா போதையையும் தியான மயக்கத்தையும் பிரித்து காட்டாமல் ருத்ராவைப் போதைக்காரனாக நினைக்க வைக்கும் அபயம்.
* இவ்வளவு நாளா சுõப்பிடாமலா இருந்த... உடம்பைப் பாரு. நல்லா குப்பைத் தொட்டியாட்டம்'' என்று சாப்பிட அழைக்கும் தாயின் கண்ணீரை உதாசீனப்படுத்துகையில், மனித அந்தஸ்திலிருந்தே  ருத்ராவை குறைத்து விடுகிறது.
* கொஞ்சம் இழுவையான திரைக்கதை.

 இவற்றையெல்லாம் கடந்து செல்ல உதவுகின்றன. எரிகிற பிணத்தின் தீயைக் கூட அழகிய நவீன ஓவியமாய் காட்டும் அர்தர் ஏ.வில்சன் கேமரா, காதுகளை கௌரவப்படுத்தும் இளையராஜாவின் பின்னணி இசை கதையும் லாஜிக்கான ஆதாரச் சரடும் வேண்டும்.

கதை: காசியிலிருந்து  தம் ஊருக்கு வரும்... தன்னை கடவுளாக அறிவிக்கும் ருத்ரா பிசைக்காரர்களைக் கொடுமைப்படுத்தும் தாதாக்களை வதம் புரிகிறார். மீண்டும் காசிக்கே செல்கிறார். போலீஸும் கோர்ட்டும்கூட மனித கடவுளை (ருத்ரா) கைது செய்ய முடியாமல் கையாலாகாமல் கைகட்டி நிற்கிறது.

மையச் சரடு: வாழ முடியாதவனுக்கு மரணம் வரமாக அமையும். வாழ தகுதியற்றவர்க்கு மரணம் தண்னையாக மாறும். குருட்டுப் பிச்சைக்காரி பூஜாவுக்கு கருணைக் கொலையை வரமாகவும், வில்லன் ராஜேந்திரனுக்கு அகோர மரணத்தை தண்டனையாகவும் அளிக்கிறான் ருத்ரா.

பிளஸ்:
* துயரத்தின் உச்சத்தில் கடவுளை கெட்ட வார்த்தையில் கவிஞர் விக்கிரமாதித்தியன் திட்டும்போது தியேட்டரில் விசில் சப்தம் பறவையாய் மாறிப் பறக்கிறது. அது நாஸ்திகக் கூச்சல் அல்ல. காட்சியின் வலியை உணர்ந்த ரசிகனின் துயரத்தில் வந்த ஆடியோ சர்டிபிகேட் இம்மாதிரி காட்சிகள் நிறைய....
* கும்மியடிக்கும் சென்டிமென்ட் அலியாக காட்டிய கோலிவுட் சினிமாவில் முக்கிய வேடத்தில் வலம்வருகிறார் "திருநங்கை' கீர்த்தனா.
* இந்து மதத்திலிருந்து கிறிஸ்துவத்துக்கு போகும் குருட்டுப் பிச்சைக்காரி பூஜாவுக்கு ஜெபிக்கும்போது அடி இன்னும் கூடுதலாகிறதே தவிர குறையவில்லை. க்ளைமாக்ஸில் எல்லா மதத்துக் கடவுள்களையும் குற்றவாளிக் கூண்டில் ஏற்றும் பூஜாவின் நடிப்பை, "பெரியாரே' பாராட்டுவார்.
* ஆர்யாவின் கெட்அப்புல வில்லனின் நடிப்பும் அபாரம். இதற்கு முன்பே பிச்சைக்காரர்களின் வாழ்வை ஏழாவது உலகமாக எழுத்தில் வரைந்து காட்டிய நாவலாசிரியர் ஜெய்மோகனின் காரமான வசனம். இவை படத்தின் மாய ஹீரோக்கள்.

ஜட்ஜ்மென்ட் : ஜிகினாக்கள் மின்னும் பிரதேசத்தில் ஒரு மின்மினிப் பூச்சியாய் ஜீவ வெளிச்சம் பாய்ச்சும் இந்தப் படம்  வருங்கால முயற்சிக்கு ஒரு வரம்.
மவுனம் சாதித்து மழுங்கிப் போன ரசனையால் இதை வரவேற்காமல் விட்டுவிட்டால் அது ரசனையின் மீது விழும் சாபம். புதிய அனுபவத்துடன் கனத்த இதயத்தோடு படம் பார்த்து வெளியேறுகையில் நமக்குள்ளும் கடவுள் கண் விழித்து உறுத்தத் தொடங்கி விடுவதை மறுக்கமுடியாது.வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g  to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

நான் கடவுள் தொடர்புடைய செய்திகள் ↓
Advertisement

மேலும் விமர்சனம்

  • டாப் 5 படங்கள்

  • Advertisement
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in