Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » விமர்சனம் »

வானம்

வானம்,Vaanam
16 மே, 2011 - 13:44 IST

 கருத்தைப் பதிவு செய்ய

எழுத்தின் அளவு:
தினமலர் விமர்சனம் » வானம்

  

தினமலர் விமர்சனம்

வெவ்வேறு விதமான லட்சியங்கள், தேவைகள், அபிலாஷைகள் இத்யாதி, இத்யாதிகளுடன் ஒரு சுபயோக சுப தினத்தில் வெவ்வேறு பகுதிகளில் கிளம்பி வந்து சென்னையில் சங்கமிக்கும் எஸ்.டி.ஆர். (அதாங்க, நம்ம சிம்பு), பரத், பிரகாஷ் ராஜ், அனுஷ்கா, சரன்யா, வேகா உள்ளிட்டவர்களது உயிரையும் பொருட்படுத்தாமல் தங்களது லட்சியங்களை காற்றில் பறக்க விட்டு, பலரது உயிர்களை காக்க காரணமாவதுதான் வானம் படத்தின் மொத்த கதையும்,

அதில் சென்னை சிட்டி பெசன்ட் நகர் பகுதியில் குப்பம் ஒன்றில் கேபிள் கலெக்ஷன் பாயாக வசிக்கும் சிம்பு அலைஸ் எஸ்.டி.ஆருக்கு அதே பகுதியில் உள்ள பணக்கார வீட்டுப் பெண் ஒருவர் மீது காதல். அதை காதல் என்பதை விட அந்த பெண் மீது சிம்புவுக்கு ஒரு கண் என்பதே ‌பொருந்தும். காரணம், அந்தப் பெண்ணை பார்ட்டி, டிஸ்‌கோதே, ஸ்டார் ஹோட்டல் பகுதிகளில் பணக்காரர் கெட்-அப்பில் சந்திக்கும் சிம்பு, அவர் மூலம் நிஜமாகவே பணக்காரர் ஜாதிப் பட்டியலில் இடம் பிடிக்க துடியாய், துடிக்கிறார். அதற்காக சிம்புவுக்கு நாற்பதாயிரம் ரூபாய் தேவை எனும் நிலையில் நண்பர் சந்தானத்துடன் சேர்ந்துகொண்டு வழிப்பறி, ராப்பரியில் எல்லாம் ஈடுபடும் அவரிடம், சென்னையில் கிட்னியை விற்று ஊரில் தன் மகன் படிப்பை தொடர செய்யும் முயற்சியில் இறங்கும் சரண்யாவும், அவரது வயதான அப்பாவும் வகையாக சிக்குகின்றனர். சரண்யா கிட்னி விற்ற காசை சிம்பு தட்டிப் பறித்தாரா, பணக்கார காதலியின் கை பிடித்தாரா என்பது ஒருபக்கம் என்றால், மற்றொரு பக்கம் மிலிட்டரியில் சேர ‌வேண்டும் என்ற தாயின் ஆசையை நிராகரித்து தனியாக மியூசிக் ஆல்பம் ட்ரூப் நடத்த வேண்டும் எனும் லட்சியத்துடன் சுயநலம் மட்டுமே கருத்தில் கொண்டு காதலி மற்றும் நண்பர்களுடன் சென்னைக்கு வரும் பரத் படும் பாடுகளையும், அனுஷ்கா உள்ளிட்ட அழகிகளை வைத்து அந்த மாதிரி தொழில் பண்ணும் ராணி அம்மாள் மற்றும் சென்னை சிட்டிக்கு அரவாணி அக்காவுடன் ரயிலேறும் அனுஷ்கா படும் பாடுகளையும், ஊரில் விநாயகர் ஊர்வலத்தில் ஏற்பட்ட கலவரத்தில் வாழ்க்கையை தொலைத்த தம்பியை தேடி சிட்டிக்கு கர்ப்பினி மனைவி சோனியா அகர்வாலுடன் வந்து இஸ்லாமியர் பிரகாஷ் ராஜ் படும் பாட்டையும், கலந்து கட்டி, கலக்கலாக கதை சொல்லியிருக்கும் காரணத்திற்காகவே இயக்குனர் கிரிஷை பாராட்டலாம்.

என்ன வாழ்க்கைடா இது எனும் ரிப்பீட் பஞ்ச் டயலாக்குடன், கேபிள் ராஜா அலைஸ் ராஜ்க்காக சிம்பு அலைஸ் எஸ்.டி.ஆரும், அவரது லோ கிளாஸ் நண்பர் சந்தானமும் அடிக்கும் லூட்டிகள் செம சிரிப்பு. அதிலும் ஜாதி மாறுவதற்காக எஸ்.டி.ஆருடன் சேர்ந்து கொண்டு சந்தானம் ஊரான் வூட்டு பைக்கில் செயின் பறிக்க கிளம்பு இடங்கள் செம காமெடி. படம் முழுக்க இப்படி சிரிப்பாய் சிரிக்க வைத்து விட்டு, க்ளைமாக்ஸில் உருக வைக்கும் சிம்பு ஹேட்ஸ் ஆப் சொல்ல வைக்கிறார். எஸ்.டி.ஆர். எனும் பெயர் மாற்ற ராசி ரொம்ப நன்றாகடே ஒர்க்-அவுட் ஆகியுள்ளது சிம்புவுக்கு!

அல்ட்ரா மாடர்ன் கிடாரிஸ்ட்டாக பரத், வேகாவுடன் செய்யும் கார் பயணத்தில் தொடங்கி, காதல் பயணம் வரை சகலத்திலும் இன்றைய சுயநல இளைஞர்களை பிரதிபலித்து, கடைசியில் அவர்களுக்கு சரியான சவுக்கடி தந்திருக்கிறார்.

அந்த மாதிரி பெண் சரோஜாவாக அனுஷ்கா அசத்தியிருக்கிறார். பிரகாஷ் ராஜ் தலைக்கு குல்லா, கண்களில் மை என ஒரு பிராப்பர் இஸ்லாமிய தோழராகவே பிரமாதப் படுத்தியிருக்கிறார். சந்தானம், சரண்யா, சோனியா அகர்வால், வேகா, பஜனை கணேஷாக வரும் தயாரிப்பாளர் வி.டி.வி.கணேஷ் உள்ளிட்ட எல்லோரும் வானம் வசப்படும் அளவு நடித்திருக்கிறார்கள் என்றால், இசையமைப்பாளர் யுவனும், ஒளிப்பதிவாளர்கள் ஞானசேகர், நீரவ்ஷா ஆகியோர் வானம் வளப்படும் அளவு  தங்கள் பங்கை சரியாக செய்திருக்கிறார்கள். வெற்றி பெற வேண்டும் என்று யார் சொன்னது? பிற உயிர்களுக்காகவும், அவர்களது லட்சியங்களுக்காகவும் உயிர்த்தியாகம் செய்யலாம் என புதிய இலக்கணம் வகுத்திருக்கிறது வானம்!

மொத்தத்தில் வானம் - தமிழ் திரையுலகின் புதிய இலக்கணம்!


-----------------------------------------------

கல்கி சினி விமர்சனம்


 
நம்புங்கள்... விரல் வித்தை காட்டி டரியலாக்காத, பஞ்ச் டயலாக் பேசி பஞ்சராக்காத, ஹீரோ பில்டப் காட்டி கிக்லிபிக்லிதனம் பண்ணாத, ஹீரோயினின் கவர்ச்சி மழையில் சொட்டச் சொட்ட நனையாத... அன்பு காட்டுதலின் தேவையையும் அதை அங்கீகரிப்பதன் அவசியத்தையும் உணர்த்தும் சிம்புவின் படம்தான் "வானம்.

கேபிள்ராஜா கேரக்டரில் சிம்பு சிக்கெனப் பொருந்த, கூடவே இருந்து கொண்டு கலாய்க்கும் சந்தானம் காம்பினேஷனில் கதை கலகலன்னு நகர்கிறது. தனக்கு காமெடியும் வருமென்பதை சிம்பு நிறைய இடங்களில் கோடிட்டு கோடிட்டுக் காட்டுகிறார். பாப் ஸ்டாரான பரத்துக்கு அதற்கேற்ற முறுக்கும், நடிப்பில் சரக்கும் இருக்க அவரோடு ஒட்டிக் கொண்டு திரியும் வேகாதான் என்ன செய்வதென்று தெரியாது விழிக்கிறார். விரசம் காட்டாத விலைமாதுவாக அனுஷ்கா அழுத்தமாகவே மனத்தில் பதிகிறார். அதுவும் ஆஸ்பிட்டல் க்ளைமாக்ஸ் காட்சிகள் அட்சரலட்சம்.

பிரகாஷ்ராஜ் நடித்த கேரக்டரில் வேறு யார் நடித்திருந்தாலும் திணறித்தான் போயிருப்பார்கள். மென்சோகம் காட்டி வசீகரிக்கும் சோனியா அகர்வாலின் கேரக்டரில் சொட்டும் பரிதாபம். ஹீரோயின் ஜாஸ்மினிடம் சுட்டிக்காட்ட எதுவுமில்லை. இவரைப் பார்த்து "எவண்டி உன்னைப் பெத்தான் என்று சிம்பு பாடுவது நம்பும்படி இல்லை. படம் முழுவதும் பணத்துக்காக... பணத்துக்காக... என்று சொல்லிவிட்டு, உண்மையாவே உன்னைக் காதலிச்சேன் என ஜாஸ்மினிடம் சிம்பு உருகுவது உட்டாலக்கடி கிரிகிரி. பரத் பரிதாப முடிவும் அனுஷ்காவின் எஸ்டாபிலிஷ்மெண்ட் சீன் பாடலும் படத்துக்கு ஸ்பீட் பிரேக். கலகலன்னு படத்தை ஆரம்பித்து கனத்துப் போன மனத்தோடு அனுப்பி வைக்கிறது திரைக்கதை. நெகிழ்வான ஒரு படத்தைக் கொடுத்து ஜெயித்திருக்கிறது சிம்பு, யுவன், இயக்குனர் க்ருஷ் கூட்டணி.

வானம் - முழுக்க முழுக்க அன்பு...


-------------------------------------------------------------குமுதம் சினி விமர்சனம்கேபிள் ராஜா, பாலியல் தொழிலாளி சரோஜா. இசை இளைஞன் பரத். நெசவுத்தொழிலாளி லட்சுமி. தீவிரவாதியாக துரத்தப்படும் ரஹீம் என ஐந்து கதாபாத்திரங்கள். வெவ்வேறு கோடுகளில் பயணிக்கும் இவர்கள் அனைவரும் ஒரே புள்ளியில் இணைவதுதான் வானம்.

பணக்காரப் பெண்ணைக் காதலித்து, குப்பத்து வாழ்க்கைக்கு குட்பை சொல்ல நினைக்கும் கேபிள் ராஜாவாக சிம்பு. யதார்த்தமான கதையின் எல்லைகளை மதித்து நடித்திருக்கிறார் ஆச்சரியம்...!

சிம்புவின் பணக்காரக் காதலியாக வரும் ஜாஸ்மின் பயணிகளை வரவேற்கும் ஏர்ஹோஸ்டஸ் போலவே பேசுகிறார். இவரை சிம்பு காதலிக்கிறாரா, கலாய்க்கிறாரா என்று க்ளைமாக்ஸ் நெருங்கும்வரை நமக்குக் குழப்பம்.

கிடார் கலைஞன் கேரக்டர் பரத்துக்காகவே தீர்மானிக்கப்பட்டது போல கச்சிதம். காவிப்படையிடம் அடி வாங்கிய அனுபவத்தில் பரத்துக்கு சமூக அக்கறை வருவது சரி. அதற்குப் பிறகு, கடவுள் என்ற விஷயத்துக்கு அவர் கொடுக்கிற விளக்கம் இருக்கே... போங்க பாஸு!

அனுஷ்காவின் அறிமுகம் மட்டும்தான் கவர்ச்சி. துரத்தப்படும் பாலியல் தொழிலாளியாய் போகப் போக கலங்கடித்துவிடுகிறார். தீவிரவாதி என்ற முத்திரை குத்தப்பட்டு பேரிழப்புகளைச் சந்திக்கிற முஸ்லிமாக வருகிற பிரகாஷ்ராஜ், தான் ஒரு முதிர்ச்சியான கலைஞன் என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறார். சிறுநீரகம் விற்று கடனை அடைக்க சென்னைக்கு வரும் அப்பாவிப் பெண்மணி கேரக்டருக்கு சரண்யா நல்ல தேர்வு. பந்தியில் ஸ்வீட்டைத் தவறவிட்டவர்கள் நிலைமையில் வேகா, சோனியா அகர்வால் ஆகியோர். இன்னும் வாய்ப்புக் கொடுத்திருக்கலாம்.

பணம் புரட்டுவதற்காக சிம்புவும் சந்தானமும் பண்ணும் கலாட்டா... அப்பப்பா. ஜோடி பட்டையைக் கிளப்பியிருக்கிறது. ஆனால் இவர்கள் திடீரென செயின் பறிக்கும் திருடர்கள் ஆவதில் லாஜிக் இல்லை.

யுவன் சங்கர் ராஜா சீரியஸ் கதையைக் காதைத் துளைக்காத பின்னணி இசையால் சுமந்திருக்கிறார். நீரவ் ஷாவின் ஒளிப்பதிவு பளிச். ஞானகிரியின் வசனங்கள் நறுக். படம் முழுக்க முஸ்லிம்களுக்காகக் குரல் கொடுத்தாலும், கடைசியில் அவர்களை நோக்கியே சுட்டுவிரலை நீட்டும் தமிழ் சினிமாத்தனத்துக்கு இந்தப் படமும் விதிவிலக்கல்ல. புதுவித திரைக்கதை என்ற விதத்தில் இயக்குநர் க்ரீஷ் வரவேற்புக்கு உரியவர்.

வானம் - வசப்பட்டிருக்கிறது.

குமுதம் ரேட்டிங் - நன்றுவாசகர் கருத்து (109)

john - madurai,இந்தியா
16 செப், 2011 - 09:38 Report Abuse
 john simbu waste.... mokkaiya podurathula super..
Rate this:
K.nasi - Tamil nadu,இந்தியா
27 ஆக, 2011 - 01:16 Report Abuse
 K.nasi எவண்டி ஒன்ன பெத்தன் அவன் கைல கெடச்சான் செத்தான் .................................... i லைக் இட் சாங்
Rate this:
செந்தில் குமார் - chennai,இந்தியா
06 ஆக, 2011 - 16:01 Report Abuse
 செந்தில் குமார் வானம் ரொம்ப நல்ல படம் எல்லோரும் பார்க்கலாம் ...
Rate this:
kannan - hosur,இந்தியா
12 ஜூலை, 2011 - 11:27 Report Abuse
 kannan வானம் பிலிம் சூப்பர்,,ஏன் டா நல்ல பிலிம் எடுத்தாலும் குறை சொள்ளதிங்கட மொக்க டாக்ஸ்,,சிவகாசி,குட்டி எல்லம் ஒரு படமா டா மொக்க ஹீரோஸ்,,
Rate this:
ஜோசப் - Toronto,கனடா
05 ஜூலை, 2011 - 20:23 Report Abuse
 ஜோசப் யார் தவறு செய்தாலும் தவறு தான். இது எல்லா மதத்திற்கும் பொருந்தும். அது மட்டுமல்ல இது ஒரு சினிமா. இதில் முட்டாள்தனமாக மதத்தை கலக்க வேண்டாம் .
Rate this:
மேலும் 104 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g  to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

வானம் தொடர்புடைய செய்திகள் ↓
Advertisement

மேலும் விமர்சனம்

  • டாப் 5 படங்கள்

  • Advertisement
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in