Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு »

காவலன்

காவலன்,Kavalan
23 ஜன, 2011 - 08:57 IST

 கருத்தைப் பதிவு செய்ய

எழுத்தின் அளவு:
தினமலர் விமர்சனம் » காவலன்

 

தினமலர் விமர்சனம்

சில, பல தோல்விகளுக்கு பின் விஜய் திட்டமிட்டு தந்திருக்கும் வெற்றி படம்தான் "காவலன்"!

அந்த ஏரியாவிலேயே ‌பெரிய மனிதர் ராஜ்கிரண். ஒருகாதலத்தில் அடிதடி வம்பு, வழக்கு என தாதாவாக வாழ்ந்த அவர், ஒரு நம்பி‌க்கை துரோகியை தீர்த்து கட்ட பக்கத்து ஊருக்கு வரும் பொழுது பிரசவலியால் துடிக்கும் ஒரு தாயையும், சேயையும் காபந்து செய்கிறார். அவராலேயே பெயர் சூட்டப்படும் அந்த சேய், வளர்ந்து பெரியவன் ஆனதும் ராஜ்கிரணுக்‌கே காவலுக்கு போகிறான். ராஜ்கிரணோ அவரது மகள் அசினுக்கு அந்த வாலிபனை காவலாக்குகிறார். அந்த காவலனே அசினின் காதலன் ஆவதும், அந்த காவல் காதலால் எழும் விளைவுகளும்தான் "காவலன்" படத்தில் வித்தியாசமாகவும், விறுவிறுப்பாகவும் சொல்லப்பட்டிருக்கும் மீதிக்கதை!

நம்பமுடியாத கதை என்றாலும் அதை நம்பும் படியாக செய்து அசினின் காவலனாக, காதலனாக கல்லூரி தோழனாக விஜய், வடிவேலு அண்ட் கோவினருடன் பண்ணும் காமெடி கலாட்டக்கள் விஜய்யும், இயக்குனர் சித்திக்கும் ஏற்கனவே இணைந்த "ப்ரண்ட்ஸ்" படத்தை ஞாபகபடுத்தும் அளவிற்கு கலகலப்பை ஏற்படுத்துவது காவலன் படத்தின் ப்ளஸ் பாயிண்ட். கண்ணதாசனா, காளிதாசனா? பாரதியாரா, பாரதிராஜாவா...? என அடிக்கடி வடிவேலு தானும் குழம்பி, விஜய்யையும் குழப்பும் காட்சிகளில் தியேட்டரே சிரிப்பில் அதிர்கிறது.

விஜய் பக்கம் பக்கமாக பஞ்ச் டயலாக் பேசி ஹீரோயிசம் காட்டாமல் நடித்திருப்பதுதான் காவலன் படத்தின் பெரியபலம்! அதிலும் தன் காதலி யார்? என்பதை தெரியாமல் நீங்கதான் என் காதலி என்று வைத்துக் கொள்ளுங்களேன்.... நான் அவகிட்டே எப்படி பேசுவேன்னு இப்போ பேசி காட்டுகிறேன்... என்று காதலியை சந்திக்க வந்த இடத்தில் உடன் வரும் அசினின் தோள்பட்டையை பிடித்துக்கொண்டு விஜய் பேசும் காதல் மொழியை விஜய் ஒருவரால் மட்டுமே செய்து காட்ட முடியும். 38வயதில் ஏதோ 25வயது வாலிபர் மாதிரி உடலாலும் மனதாலும் காதலிக்கும் விஜய்க்கு ஒரு ஹேட்ஸ் ஆஃப் சொல்லியே தீர வேண்டும்! காதல் காட்சிகளில் மட்டுமல்ல ஆக்ஷன் காட்சிகளிலும் புதிய பரிமாணம் காட்டி இருக்கும் விஜய்யை இடையில் ஏற்பட்ட தோல்வி(படங்)கள் ரொம்பவே பண்படுத்தி இருக்கின்றன என்றே சொல்ல வேண்டும்! வாவ் என்ன ஒரு ரொமான்ஸ் என்ன ஒரு ஆக்ஷன், என்ன ஒரு காமெடி சென்ஸ்! கீப் இட் அப் விஜய்!

அசின், ராஜ்கிரணின் மகளாக விஜய்யின் காதலியாக வாழ்ந்திருக்கிறார் அம்மணி. அசினை காட்டிலும் அவர் உடன் வரும் மித்ரா குரியன் இரண்டாம் நாயகி என்பதை காட்டிலும் இன்னும் பிரமாதமாக நடித்து அசினையே சில இடங்களில் ஓவர் டேக் செய்துவிடுகிறார்.

ராஜ்கிரண் அப்பா கேரக்டரா? அப்பப்பா கேரக்டரா? என கேட்கும் அளவிற்கு மிரட்டலான நடிப்பில் மிரளவைக்கிறார். ராஜ்கிரணின் ஜோடி ரோஜாவும் தன் பங்கிற்கு மிரட்டுகிறார். தூங்கி வழியும் எம்.எஸ்.பாஸ்கர், விஜய்யின் அப்பா நிழல்கள் ரவி, அம்மா யுவஸ்ரீ என எல்லோரும் பாத்திரத்திற்கேற்ற பளிச் தேர்வு! அம்மாவாசை வடிவேலுவும், அவரது ஜோடி பூங்கொடி நீபாவும் செம காம்பினேஷன்! எல்லாம் சரி விஜய், அசினுடன் கல்லூரியில் படிக்கும் குள்ளநடிகருக்கு "அஞ்சாநெஞ்சன்" என பெயர் வைத்து வம்பை விலைக்கு வாங்கியது யார் விஜய்யா? சித்திக்கா?

வித்யாசாகரின் இசையும் என்.கே.ஏகாம்பரத்தின் ஒளிப்பதிவும் சித்திக்கின் கதை, திரைக்கதை, இயக்கத்திற்கு பக்கபலமாக இருந்து காவலனை விஜய்யின் காதலுக்கு மரியாதை அளவு உயர்த்தி பிடித்திருக்கின்றன!

மொத்தத்தில் "காவலன்" விஜய் ரசிகர்களுக்கு "காதலன்".


----------------------------------

குமுதம் விமர்சனம்காதைப் பஞ்சராக்கும் பஞ்ச் டயலாக்... பான்பராக் துப்பும் வில்லன்கள்... ரத்தம் சொட்டுகிற மோதல்கள்... குத்துப்பாட்டு இவை எதுவுமே இல்லாத விஜய் படம்!

மலையாளத்தில் ஜெயித்த பாடிகார்டை காவலனாக்கி தமிழுக்கு அழைத்து வந்திருக்கிறார்கள். இரண்டு பெண்கள். சிறிது காலம் அவர்களுக்குப் பாதுகாப்பு தரவேண்டிய கட்டாயத்தில் ஒரு இளைஞன். ஒருத்தி அவனை வழக்கமான நட்புடன் அணுகுகிறாள். இன்னொருத்தி அவனைச் சீண்டிப் பார்க்க முடிவெடுக்கிறாள். விளையாட்டு வினையாக மாறி, மூவரையும் என்ன பாடுபடுத்துகிறது என்பதுதான் காவலனின் பயோடேட்டா.

ஆக்ஷன் இமேஜையெல்லாம் க்ளாக் ரூமில் கடாசிவிட்டு, சிரித்த முகமும் வெகுளிப் பேச்சுமே போதும் என்று தடாலடியாக ரூட் மாறியிருக்கிற விஜய்யைப் பார்க்கும்போதே சந்தோஷமாக இருக்கிறது. கண்டிப்பான பாடிகார்டாக பந்தா பண்ணுவதும், காதலில் க்ளீன் போல்ட் ஆகி அசடு வழிவதுமாக விஜய்யிடம் எதிர்பார்க்கவே முடியாத "பக்கத்து வீட்டுப்பையன் கலாட்டாக்கள்.

விஜய் முன்னால் சமர்த்தாக உட்கார்ந்து கொண்டே, அவரோடு மொபைல் போனில் விளையாடும் காட்சிகள் முழுவதும் அசின் கொடி பறக்கிற ஏரியா. க்ளோஸப் காட்சிகளில் முகத்தில் தெரிகிற கூடுதல் முதிர்ச்சி அசினை "சேச்சியாக்கியிருப்பதை யாராவது கவனித்திருக்கலாம்.

அசினுக்கும் விஜய்க்குமான கண்ணாமூச்சியில் கடைசியில் அறுவடை பண்ணிவிடுகிற தோழியாக வருகிற மித்ரா நல்ல தேர்வு. திரைக்கதை வடிவேலுவை கொஞ்சம் அடக்கி வாசிக்க வைத்தாலும், காமெடிக்குப் பஞ்சம் இல்லை. வடிவேலு தப்புத் தப்பாக ஆங்கிலம் பேசி எல்லோரையும் அலற வைக்கும் காட்சிகள் சிரிப்பு ரகளை.

செம்மனூர் ஜமீன்தார், ரொம்ப கோபக்காரர் என்று ராஜ்கிரணுக்கு கதையில் என்ன பில்டப் கொடுத்தாலும், மனசில் ஒட்டவில்லை. அசின் அம்மாவாக ரோஜாவை மெனக்கெட்டு அழைத்து, சும்மா வந்துபோக வைத்திருக்கிறார்கள். ராஜ்கிரணுக்கு வருகிற ஆபத்து அவரது மகள் அசினுக்கும் வரும் என்பது சரி. அதற்காக அசின் படிக்கும் கல்லூரியிலேயே பாடிகார்டு விஜயையும் படிக்க வைப்பது... எங்கேயாவது நடக்குமா? கவர்ச்சிப் பற்றாக்குறையை சமாளிக்க யாரையாவது உடலுக்குப் பொருந்தாத பாவாடை சட்டையில் வலம் வர வைப்பதை நம்மாட்கள் நிறுத்த மாட்டார்களா?

மெலடியில் சோடை போகாத வித்யாசாகர் இம்முறை தனக்கேற்ற கதை கிடைத்தும் ஏனோ தவறவிட்டிருக்கிறார்.

மலையாள சாயலோடும் லாஜிக் உரசல்களோடும் தேர் ஆடி அசைந்து வந்தாலும், பத்திரமாக நிலைக்கு கொண்டு வந்து சேர்த்து விடுகிறார் இயக்குநர் சித்திக்.

காவலன் : காதலனுக்கு மரியாதை! குமுதம் ரேட்டிங் : ஓ.கே.வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g  to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

காவலன் தொடர்புடைய செய்திகள் ↓
Advertisement

மேலும் விமர்சனம்

  • டாப் 5 படங்கள்

  • Advertisement
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in