எமகாதகி
விமர்சனம்
தயாரிப்பு : நாய்செட் மீடியா ஒர்க்ஸ்
இயக்கம் : பெப்பின் ஜார்ஜ் ஜெயசீலன்
நடிகர்கள் : ரூபா கொடுவாயூர், நரேந்திர பிரசாத், சுபாஷ் ராமசாமி, கீதா கைலாசம், ராஜீ ராஜப்பன், ஹரிதா.
வெளியான தேதி : 07.03.2025
நேரம் : 1 மணி நேரம் 57 நிமிடம்
ரேட்டிங் : 2.50/5
கதைக்களம்
தஞ்சாவூர் அருகே ஒரு கிராமத்தின் ஊர் தலைவரான ராஜீ ராஜப்பன், தனது மகள் ரூபா கொடுவாயூரை கோபத்தில் அடித்து விடுகிறார். இதனால் மணமடைந்த ரூபா தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்கிறார். அந்த தற்கொலையை மறைக்க மகள் மூச்சுத் திணறி உயிரிழந்ததாக ஊர் மக்கைள நம்பவைத்து இறுதி ஊர்வலத்துக்கான ஏற்பாடுகளை செய்கின்றனர். சடலத்தை தூக்க முயற்சிக்கும் போது தூக்க முடியவில்லை. சாவு வீட்டுக்கு வந்த அத்தனை பேரும் கயிறு கட்டி இழுத்தும் கூட ரூபாவின் சடலம் நகர மறுக்கிறது. அதனை தொடர்ந்து நடந்தது என்ன? ரூபா சடலம் நகர மறுப்பதன் பின்னணி என்ன? என்பதே படத்தின் மீதி கதை.
பல கிராமங்களில் இன்றளவும் நிறைவேறாத ஆசையுடன் இறந்து போகும் சிலரின் சடலம் வீட்டில் இருந்து வெளியில் எடுத்து வர பல்வேறு பிரச்சனைகளை சந்திப்பதாக கேள்விப்பட்டிருக்கிறோம். அந்த விஷயத்தை கதை கருவாக எடுத்துக் கொண்டு வித்தியாசமாக படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் பெப்பின் ஜார்ஜ் ஜெயசீலன். இறந்த பெண் பாடையில் ஏற மறுத்து அசையாமல் இருக்கும் கதையைச் சொல்லி ஆச்சரியப்பட வைத்துள்ளார்.
மருத்துவம் படித்துவிட்டு தெலுங்கு சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமான ரூபா கொடுவாயூர், தமிழில் இந்த படத்தின் மூலம் ஹீரோயின் ஆகியுள்ளார். படத்தில் 90 சதவீத காட்சிகள் பிணமாகவே நடித்துள்ளார். அவர் மருத்துவர் என்பதால் நீண்ட நேரம் மூச்சை தம் கட்டி வைத்து திரையில் அசத்தியுள்ளார். காதலி இறந்தை கண்டு துடிக்கும் காட்சிகளில் நாகந்திர பிரசாத் ஸ்கோர் செய்துள்ளார். அப்பவாக நடித்துள்ள ராஜீ ராஜப்பன், அம்மாவாக வரும் கீதா கைலாசம், அண்ணனாக வரும் சுபாஷ் ராமசாமி, அண்ணியாக நடித்துள்ள ஹரிதா ஆகியோர் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி அந்த கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்துள்ளனர்.
ஜெசின் ஜார்ஜ் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். பின்னணி இசையில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தி இருக்கலாம். சுஜித் சாரங் ஒளிப்பதிவு படத்திற்கு கூடுதல் பலம்.
பிளஸ் & மைனஸ்
சாவு வீட்டில் பிணத்தை வைத்துக் கொண்டு நடக்கும் பல கதைகளை நாம் பார்த்து இருந்தாலும், இந்தக் கதை சற்று வேறுபட்டு நிற்கிறது. இருப்பினும் அதற்கு பின்னால் சொல்லப்பட்ட காரணங்கள் அனைத்தும் யூகிக்கும்படியாக இருப்பது மைனஸ்.
எமகாதகி - சீதகாதி