வீராயி மக்கள்,Verai makkal
Advertisement
2.75

விமர்சனம்

Advertisement

தயாரிப்பு - ஒயிட் ஸ்கிரீன் பிலிம்ஸ்
இயக்கம் - நாகராஜ் கருப்பையா
இசை - தீபன் சக்கரவர்த்தி
நடிப்பு - வேலராமமூர்த்தி, மாரிமுத்து, தீபா சங்கர், சுரேஷ் நந்தா, நந்தனா
வெளியான தேதி - 9 ஆகஸ்ட் 2024
நேரம் - 2 மணி நேரம் 16 நிமிடம்
ரேட்டிங் - 2.75/5

'மாயாண்டி குடும்பத்தார், கடைக்குட்டி சிங்கம்' போன்ற சில படங்கள்தான் இன்றைய தலைமுறைக்குத் தெரிந்த சில குடும்பப் படங்கள். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அண்ணன், அக்கா, தம்பி, தங்கைகள் ஆகியோருக்கு இடையேயான பிரச்சனை, மோதல், பாசம் என சில படங்கள் முன்பும் வந்தன. ஆனால், இப்போது ஒரு சில படங்கள் வருகின்றன. அப்படியே வந்தாலும் அவற்றை சீரியல் எனச் சொல்லி ஒதுக்கும் சில ரசிகர்களும் இருக்கிறார்கள். அவற்றையும் மீறி எங்கோ ஒரு காட்சியில் நம்மை லேசாகக் கண்ணீர் விட வைத்தாலோ, அல்ல நம்மை தொடர்புப்படுத்திக் கொள்ள வைத்தாலோ அதுவே அந்த இயக்குனருக்குக் கிடைத்த வெற்றி. அப்படியான ஒரு படத்தைக் கொடுத்திருக்கிறார் இந்தப் படத்தின் இயக்குனர் நாகராஜ் கருப்பையா.

வேல ராமமூர்த்தி, மாரிமுத்து, தீபா சங்கர், ஜெரால்டு மில்டன் ஆகியோர் 'வீராயி' பாண்டி அக்காவின் மக்கள். ஆனால், நால்வருமே ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ளாமல் வாழ்கிறார்கள். அண்ணன் வேல ராமமூர்த்தியும், தம்பி மாரிமுத்துவும் எதிரெதில் வீட்டில் இருந்தாலும் மாரிமுத்துவின் மனைவி செந்தி வம்பிழுத்துக் கொண்டே இருக்கிறார். வேல ராமமூர்த்தியின் மகன் சுரேஷ் நந்தாவுக்கு அத்தை தீபா சங்கர் பக்கத்து ஊரிலேயே இருப்பது தெரிய வருகிறது. அத்தைப் பெண் நந்தானவைப் பார்த்ததுமே காதல் கொள்கிறார். சண்டை போட்டு பிரிந்திருக்கும், சித்தப்பாக்கள், அத்தை ஆகியோரை ஒன்று சேர்க்க முயற்சிக்கிறார். அவரது முயற்சியில் வெற்றி கிடைத்ததா இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

கதையின் கதாபாத்திரங்களில் நடித்திருப்பவர்கள்தான் இந்தப் படத்தின் கதாநாயகர்கள், கதாநாயகியர். அப்படிப் பார்த்தால் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ள அனைவரையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். சினிமாத்தனமில்லாத கதாபாத்திரங்கள், அதற்காகத் தேர்வு செய்யப்பட்ட நடிகர்கள், நடிகையர் அனைவருமே அவரவர் கதாபாத்திரங்களில் முடிந்தவரையில் இயல்பாய் நடித்திருக்கிறார்கள்.

வீராயியின் மக்களில் மூத்தவர் வேல ராமமூர்த்தி, அடுத்தவர் மாரிமுத்து, தீபா சங்கர், கடைக்குட்டி ஜெரால்டு, வேல ராமமூர்த்தியின் மகன் சுரேஷ் நந்தா, தீபா சங்கரின் மகள் நந்தனா ஆகியோர் அவரவர் கதாபாத்திரங்களில் அந்தந்த கிராமத்து மனிதர்களாகவே தெரிகிறார்கள். பிளாஷ்பேக்கில் வீராயி பாண்டி அக்காவின் கதாபாத்திரம் வருகிறது. அதில்தான் ஒற்றுமையாக இருக்கும் அண்ணன், தம்பி, தங்கை எப்படி பிரிகிறார்கள் என்ற கதை சொல்லப்பட்டுள்ளது. பல குடும்பங்களில் நடக்கும் ஒரு நிகழ்வுதான் அது.

வேல ராமமூர்த்தியின் மனைவியாக ரமா, அதிர்ந்து பேசாதவராக அமைதியாக இருக்கும் ஒரு கதாபாத்திரம். மாரிமுத்துவின் மனைவியாக செந்தி, எதற்கெடுத்தாலும் கத்திக் கொண்டே இருக்கும் ஒரு கதாபாத்திரம். குடும்பம் மொத்தமாகப் பிரிவதற்குக் காரணமாக செந்தி கதாபாத்திரம் அமைந்துள்ளது. ஒரே குடும்பத்தில் வெவ்வேறு குணம் கொண்ட மருமகள்களால் குடும்பம் எப்படி பிரிகிறது என்பதை அழுத்தமாகச் சொல்லியிருக்கிறார் இயக்குனர்.

சுரேஷ் நந்தா, நந்தனா இடையிலான காதல் கொஞ்சமாக இருந்தாலும் ஒரு கிராமத்துக் காதலை இயல்பாய் பார்த்த திருப்தி இருக்கிறது.

நடிகர்களின் யதார்த்த நடிப்பை, அவர்களது உணர்வுகளை இன்னும் ஒரு படி மேலே தூக்கிக் காட்டும் விதத்தில் தீபன் சக்கரவர்த்தியின் பின்னணி இசை அமைந்துள்ளது. கிராமிய மணம் கமழும் பாடல்களிலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளார் தீபன். தமிழ் சினிமாவில் நல்லதொரு எதிர்காலம் அவருக்குக் காத்திருக்கிறது. கிராமத்துத் தெருக்கள், வீடுகள் என கதையோடும் கதாபாத்திரங்களோடும் உறவாடியிருக்கிறது சீனிவாசன் ஒளிப்பதிவு.

சில காட்சிகளின் நீளம், பட்ஜெட் காரணமாக தவிக்கும் மேக்கிங் ஆகியவற்றைச் சரி செய்திருக்க வேண்டும். ஒரு குடும்பக் கதையை அதற்குரிய நேர்மையுடன் எடுக்க வேண்டும் என்ற இயக்குனரின் முயற்சி தெரிகிறது. மனிதப் பிறவி என்பது ஒரு முறைதான், அதனால் பிரிந்து வாழாதீர்கள், பிரச்னைகளை பேசித் தீர்த்து வாழ்ந்து பாருங்கள் என்ற ஒரு கருத்திற்காக இந்த வீராயி மக்களை மனதாரப் பாராட்டலாம்.

வீராயி மக்கள் - உறவுகளும், உணர்வுகளும்…

 

வீராயி மக்கள் தொடர்புடைய செய்திகள் ↓

பட குழுவினர்

வீராயி மக்கள்

  • இயக்குனர்

மேலும் விமர்சனம் ↓