குலு குலு,Gulu Gulu

குலு குலு - சினி விழா ↓

Advertisement
2.75

விமர்சனம்

Advertisement

தயாரிப்பு - சர்க்கிள் பாக்ஸ் என்டர்டெயின்மென்ட்
இயக்கம் - ரத்னகுமார்
இசை - சந்தோஷ் நாராயணன்
நடிப்பு - சந்தானம், அதுல்யா சந்திரா, நமீதா கிருஷ்ணமூர்த்தி
வெளியான தேதி - 29 ஜுலை 2022
நேரம் - 2 மணி நேரம் 30 நிமிடம்
ரேட்டிங் - 2.75/5

வித்தியாசமான கதை, மாறுபட்ட திரைக்கதை என இதுவரை வெளிவராத விதத்தில் தங்களது படங்கள் இருக்க வேண்டும் என சில இயக்குனர்கள் படங்களைக் கொடுக்கிறார்கள். இந்தப் படத்தைப் பொறுத்தவரையில் அப்படியான ஒரு படமாகத்தான் கொடுத்திருக்கிறார் இயக்குனர் ரத்னகுமார். ஆனால், சந்தானம் படம் என்றாலே நகைச்சுவைப் படமாகத்தான் இருக்கும் என்று எதிர்பார்த்து வரும் ரசிகர்களை இந்தப் படம் திருப்திப்படுத்துமா என்பது கேள்விதான். அப்படி நகைச்சுவையை எதிர்பார்க்காமல் வரும் ரசிகர்களுக்கு வேண்டுமானால் இந்தப் படம் திருப்தியைத் தரலாம்.

அமேசான் காட்டுப் பகுதியில் உள்ள ஒரு நாட்டில் வசித்த பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர் சந்தானம். அந்த பழங்குடி மக்களை சிலர் துன்புறுத்தி அழைத்துச் செல்ல அதிலிருந்து தப்புகிறார் சிறு வயது சந்தானம். நாடு நாடாக சுற்றி சென்னையில் வந்து வசிக்கிறார். பல மொழிகளைப் பேசும் திறமை கொண்ட சந்தானத்திற்கு தமிழும், தமிழகமும் பிடித்துப் போவதால் இங்கேயே தங்கிவிடுகிறார். கூகுள் என அழைக்கப்படும் சந்தானம் யார் உதவி கேட்டாலும் ஓடோடி வந்து செய்வார். தங்கள் நண்பனை யாரோ கடத்திவிட்டதாக மூன்று இளைஞர்கள் வந்து சந்தானத்திடம் உதவி கேட்கிறார்கள். நால்வரும் இணைந்து காணாமல் போனவரைத் தேட ஆரம்பிக்கிறார்கள். அந்தப் பயணத்தில் காணாமல் போனவரின் காதலியும் இணைகிறார். இடையில் சில பல கிளைக் கதைகளும் படத்தில் வருகின்றன. காணாமல் போனவரை சந்தானம் அன்ட் கோ கண்டுபிடித்ததா இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

'மேயாத மான், ஆடை' படங்களை இயக்கிய ரத்னகுமார் இயக்கியிருக்கும் படம். சந்தானத்தை இப்படி ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க அவர் முடிவு செய்ததற்கு தனி தைரியம் வேண்டும். அக்கதாபாத்திரத்தில் சந்தானமும் பொருத்தமாகத்தான் நடித்திருக்கிறார். அதே சமயம் படத்தில் நகைச்சுவைக்காக பல இடங்கள் இருந்தாலும் அதை பயன்படுத்திக் கொள்ளாமல் கடந்து போகிறார்கள். எப்போதோ ஒரு முறைதான் படத்தில் சிரிப்பு வருகிறது.

கூகுள் என்கிற கதாபாத்திரத்தில் சந்தனாம். நகைச்சுவைக்குப் பதிலாக அவ்வப்போது தத்துவார்த்தமாகப் பேசுகிறார். போகிற போக்கில் சில அரசியல் வசனங்களையும் பேசுகிறார். ஆனால், அவை ரசிகர்களால் கவனிக்கப்படாமல் கூடப் போவது சோகமே. வழக்கமாக அடுத்தவர்களைக் கிண்டல் செய்தே அதிக நகைச்சுவை செய்துவிட்டோம். அப்படி இல்லாமல் பிளாக் காமெடி டிரை பண்ணலாம் என சந்தானம் நடித்திருப்பார் போலிருக்கிறது.

படத்தில் சந்தானத்திற்கு ஜோடியாக யாரும் இல்லை. அவரிடம் உதவி கேட்கும் இளைஞர்களாக நடித்திருக்கும் மூவர் புதுமுகங்களாக இருந்தாலும் இயல்பாக நடித்திருக்கிறார்கள். கடத்தப்பட்ட இளைஞராக ஹரிஷ் குமார், அவரது காதலியாக நமீதா கிருஷ்ணமூர்த்தி, வெளிநாட்டிலிருந்து வரும் பெண்ணாக அதுல்யா சந்திரா நடித்திருக்கிறார்கள். இவர்களுடைய நடிப்பும் நிறைகாவே உள்ளது.

வில்லனாக பிரதீப் ராவத். இறந்து போன தனது அப்பாவின் கௌரவத்திற்காக அதுல்யா சந்திராவைக் கொல்லத் துடிக்கும் ஒரு அண்ணன். ஒரு டான் போல இருக்கும் பிரதீப் ராவத். அப்பாவிகளாக இருக்கும் இலங்கைத் தமிழர்கள் நால்வரை அதுல்யாவைக் கடத்தும் வேலையைக் கொடுப்பது ஏனோ ?. இலங்கைத் தமிழர்களை இப்படி கொச்சைப்படுத்தி இருக்க வேண்டாம்.

சந்தோஷ் நாராயணன் இம்மாதிரியான பிளாக் காமெடிப் படங்களுக்கென தனியாக பின்னணி இசை கொடுப்பார். இந்தப் படத்திலும் அப்படியே. 'அன்பரே' பாடல் தனியாக ஒலிக்கிறது.

ஒரு பயணக் கதை போல படம் நகர்ந்து கொண்டே போகிறது. கூடவே சில கிளைக் கதைகள், கிளைக் காட்சிகள் என மெயின் படத்தை விட்டு சற்றே நகர்கிறது. அதன் மூலம் சில கருத்துக்களை சொல்ல முயன்றிருக்கிறார் இயக்குனர்.

எந்த மாதிரியான படம் என்று சொல்ல முடியாத அளவிற்கு அனைத்தையும் கலந்து ஒரு மாதிரியான படமாகக் கொடுத்திருப்பதுதான் சோதனையாக உள்ளது.

குலு குலு - கொஞ்சம் ஜில்லு, கொஞ்சம் டல்லு…

 

குலு குலு தொடர்புடைய செய்திகள் ↓

பட குழுவினர்

குலு குலு

  • நடிகர்
  • நடிகை
  • இயக்குனர்
  • இசை அமைப்பாளர்

மேலும் விமர்சனம் ↓