சேத்துமான்,Seththumaan
Advertisement
2.75

விமர்சனம்

Advertisement

தயாரிப்பு - நீலம் புரொடக்ஷன்ஸ்
இயக்கம் - தமிழ்
இசை - பிந்து மாலினி
நடிப்பு - மாணிக்கம், பிரசன்னா, மாஸ்டர் அஷ்வின்
வெளியான தேதி - 27 மே 2022 (ஓடிடி)
நேரம் - 1 மணி நேரம் 50 நிமிடம்
ரேட்டிங் - 2.75/5

சினிமாவிற்கு அடுத்து குறும் படங்களுக்கான ஒரு பாதை புதிதாக உருவான பின் விதவிதமான படங்கள் சினிமாவிலும் ஆரம்பித்துவிட்டன. மக்களின் வாழ்வியலை ஒட்டிய பல படங்கள் தமிழ் சினிமாவில் கடந்த சில வருடங்களில் அதிகமாகவே வந்து கொண்டிருக்கிறது.

இந்தப் படம் ஒரு வாழ்வியல் படம்தான். கிராமத்துப் பக்கங்களில் பல்வேறு விதமான கறிகளை உண்பவர்கள் இருக்கிறார்கள். மூல நோய்க்கு பன்றிக்கறி சிறந்த மருத்துவமாக உள்ளது. காலம் காலமாக அந்தப் பாதிப்புக்காக சாப்பிடுபவர்கள் பலர் இருக்கிறார்கள். அதே சமயம் குடிப்பதற்கான சைட் டிஷ் ஆக பன்றிக்கறி சிறந்த ஒன்று என்று 'மதுப்பிரியர்கள்' சொல்கிறார்கள்.

தலித் சமுதாயத்தைச் சேர்ந்த ஒரு தாத்தா, பெற்றோர் இல்லாத அந்த தாத்தாவின் பேரன் ஆகியோருக்கு இடையே உள்ள பாசப்பிணைப்புதான் இந்தப் படம். தலித் படம் என்றால் மற்ற சாதியினரைப் பற்றியும், அவர்களது வாழ்க்கை முறையைப் பற்றியும் விமர்சித்தே ஆக வேண்டும் என்ற விதத்தில் தமிழ் சினிமாவில் படங்கள் வருகின்றன. அதற்கு இந்தப் படமும் விதிவிலக்கல்ல. படம் தியேட்டர்களில் வந்தால் நாமக்கல் கொங்கு வட்டாரத்தைச் சேர்ந்த ஒரு குறிப்பிட்ட சாதியினர் இந்தப் படத்திற்கு எதிராக நிச்சயம் போர்க்கொடி தூக்கியிருப்பார்கள்.

நாமக்கல் மாவட்டப் பின்னணியில் படத்தைக் கொடுத்திருக்கிறார் இயக்குனர் தமிழ். ஊரார் சேர்ந்து நடத்திய ஒரு வன்முறையில் தனது மகனையும், மருமகளையும் பறி கொடுத்தவர் மாணிக்கம். தனது பேரன் அஷ்வின் நன்றாகப் படித்து முன்னேற வேண்டும் என்று நினைப்பவர். பெற்றோர் இல்லாத தனது பேரனை பாசமாக வளர்க்கிறார். ஊரின் பெரிய விவசாயியான பிரசன்னா சொல்லும் எந்த வேலையையும் செய்பவர் மாணிக்கம். பன்றிக்கறி சாப்பிட வேண்டும் என்ற ஆசையில் தனது நண்பர்களுடன் சேர்ந்து அதற்கான முயற்சியில் இறங்குகிறார் பிரசன்னா. அதற்கு மாணிக்கத்துடன் சேர்ந்து ஒரு பன்றியைப் பார்த்து விலை பேசி முடிக்கிறார். பன்றிக்கறி விருந்து நடக்கும் அன்று பிரசன்னாவுக்கும், அவரது பங்காளி சுருளிக்கும் மோதல் ஏற்படுகிறது. அதன்பின் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

ஒரு பக்கம் தாத்தா, பேரனின் பாசம், மற்றொரு பக்கம் பங்காளிகளின் சண்டை, இடையில் தலித் பிரச்சினை, சாதிப் பிரச்சினை என ஆங்காங்கே சமூகத்திற்குக் சில கேள்விகளை எழுப்புகிறார் இயக்குனர் தமிழ். ஓடிடியில் வெளிவந்ததால் ஒரு திரைப்படமாகப் பார்த்து ரசிக்க முடியவில்லை. ஒரு குறும்படத்தை அதிக நேரம் பார்த்த உணர்வே ஏற்படுகிறது.

தாத்தா பூச்சியப்பன் கதாபாத்திரத்தில் மாணிக்கம். இந்த வருடத்தில் வயதான ஒருவர் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்து வந்துள்ள படம். இதற்கு முன்பு 'கடைசி விவசாயி' படத்திலும் வயதான ஒருவர்தான் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். பூச்சியப்பன் கதாபாத்திரத்தில் மாணிக்கத்தின் நடிப்பை எந்த ஒரு காட்சியிலுமே நடிப்பு என்று சொல்ல முடியாது. அந்தக் கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார்.

பேரனாக மாஸ்டர் அஷ்வின். இவ்வளவு குட்டிப் பையன் எவ்வளவு யதார்த்தமாக நடித்திருக்கிறார் என்று வியக்க வைக்கிறார். மற்ற கதாபாத்திரங்களில் ஊரின் பெரிய விவசாயி பண்ணாடி ஆக பிரசன்னா, அவரது மனைவியாக சாவித்ரி, பங்காளியாக சுருளி ஆகியோரும் யதார்த்தமாக நடித்திருக்கிறார்கள்.

படம் முழுவதிலும் கேமராவை கையில் வைத்துக் கொண்டே படமாக்கியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் பிரதீப் காளிராஜா. ஒளிப்பதிவாளரின் எண்ணத்தை எந்த விதத்திலும் தடம் மாற்றிவிடாமல் படத்தொகுப்பு செய்திருக்கிறார் எடிட்டர் பிரேம்குமார்.

பிந்து மாலியின் பின்னணி இசை படத்திற்கு உயிரோட்டமாய் அமைந்துள்ளது. தமிழ் சினிமாவில் பெண் இசையமைப்பாளர்களைப் பார்ப்பது அரிது. ஒரு யதார்த்த படத்தில் தனது இசைத்தடத்தை நன்றாகவே பதிவு செய்திருக்கிறார் பிந்து.

கறி உண்ணாத சைவப்பிரியர்களுக்கு படத்தைப் பார்க்க சங்கடமாக இருக்கும். தமிழகத்தில் ஒரு வட்டாரத்தில் உள்ள வாழ்வியலை ஒரு சினிமாவாகப் பதிவு செய்திருக்கிறார் இயக்குனர் தமிழ்.

சேத்துமான் - பன்றிக் கறியும், பங்காளி சண்டையும்…

 

சேத்துமான் தொடர்புடைய செய்திகள் ↓

பட குழுவினர்

சேத்துமான்

  • இயக்குனர்

மேலும் விமர்சனம் ↓