சித்திரைச் செவ்வானம்,Chithirai sevvanam

சித்திரைச் செவ்வானம் - பட காட்சிகள் ↓

Advertisement
2.75

விமர்சனம்

Advertisement

தயாரிப்பு - தின்க் பிக் ஸ்டுடியோஸ், அமிர்தா ஸ்டுடியோஸ், ஜீ ஸ்டுடியோஸ்
இயக்கம் - சில்வா
இசை - சாம் சிஎஸ்
நடிப்பு - சமுத்திரக்கனி, பூஜா கண்ணன், ரீமா கல்லிங்கல்
வெளியான தேதி - 3 டிசம்பர் 2021
நேரம் - 2 மணி நேரம் 8 நிமிடம்
ரேட்டிங் - 2.75/5

விஜய் நடித்த 'தலைவா' படத்தில் ஸ்டன்ட் இயக்குனராக அறிமுகமாக அடுத்தடுத்து பல படங்களில் பணியாற்றி முன்னணி ஸ்டன்ட் இயக்குனராக இருப்பவர் சில்வா. அவரது இயக்கத்தில் வந்திருக்கும் முதல் படம் தான் இந்த 'சித்திரைச் செவ்வானம்'.

ஒரு ஸ்டன்ட் இயக்குனரிடமிருந்து இப்படி ஒரு சென்டிமென்ட் கதையா என ஆச்சரியப்பட வைக்கிறார் சில்வா. அப்பா, மகளுக்கு இடையிலான பாசத்தை நெகிழ்வுடன் சொல்லியிருக்கிறார். அதே சமயம், இந்த சென்டிமென்ட் கதையில் த்ரில்லரையும் இணைத்து பரபரப்பூட்டி இருக்கிறார்.

பொள்ளாச்சியில் இளம் பெண்களுக்கு நேர்ந்த கொடுமைகள் தான் படத்தின் முக்கிய திருப்பமான சம்பவங்களாக அமைந்து அதிர்ச்சியூட்டி இருக்கிறது. படத்தில் பார்ப்பதற்கே இப்படி என்றால் நிஜத்தில் அவை எந்த அளவிற்கு பதைபதைக்க வைத்திருக்கும் என்பதை நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை.

கிராமத்தில் விவசாயியாக இருப்பவர் சமுத்திரக்கனி. அவரது மனைவி திடீரென இறந்துவிட மகளை கண்ணும் கருத்துமாய் பார்த்து வருகிறார். மகள் பூஜா கண்ணன் + 2 முடித்ததும், நீட் தேர்வு எழுதுவதற்காக கோச்சிங் கிளாசில் சேர்த்து விடுகிறார். பொள்ளாச்சியில் ஹாஸ்டலில் தங்கிப் படிக்கும் பூஜாவைக் காணவில்லை என ஒரு நாள் ஹாஸ்டல் வார்டன் புகார் தெரிவிக்கிறார். இன்ஸ்பெக்டரான ரீமா கல்லிங்கல் இந்த வழக்கை விசாரிக்க ஆரம்பிக்கிறார். மறுபக்கம் தனது மகளுக்கு என்ன நடந்தது என சமுத்திரக்கனியும் தனியே விசாரணையில் இறங்குகிறார். காணாமல் போன பூஜா கண்டுபிடிக்கப்பட்டாரா இல்லையா என்பதுதான் படத்தின் பரபரப்பான மீதிக் கதை.

சமுத்திரக்கனியை கதாநாயகனாக நடிக்க வைப்பதற்கென்றே இப்படி கதைகள் உருவாக்கப்படுகிறதா அல்லது அந்தக் கதைகளுக்காகவே சமுத்திரக்கனி தேர்வு செய்யப்படுகிறாரா என்ற கேள்வி எழுகிறது. அவருக்குப் பொருத்தமான கதாபாத்திரமாக இருந்தாலும் அப்பாவி அப்பாவாக தன்னைக் காட்டிக் கொள்வதற்கு கொஞ்சம் ஓவராகவே நடிக்கிறார் சமுத்திரக்கனி. இயல்பாக இருந்தாலே இந்தக் கதாபாத்திரத்திற்கு சரியாக இருந்திருக்கும். மகளைக் காணாத பரிதவிப்பு, மகளைத் தேடி அலைவது என இரண்டாவது பாதியில்தான் கொஞ்சம் இயல்புக்கு மாறுகிறார் கனி.

சமுத்திரக்கனியின் மகளாக பூஜா கண்ணன். 'ரவுடி பேபி' நடிகை சாய் பல்லவியின் தங்கை. இவர் அறிமுகமாகும் படம் இது. முதல் படத்திலேயே சென்டிமென்ட் நடிப்பில் முத்திரை பதிக்கிறார் பூஜா. அவர் பாத்ரூமில் குளிப்பதை சக மாணவர்களே வீடியோ எடுத்து பரப்பிவிட அவர்களைச் சந்தித்து கதறி அழும் காட்சியில் கலங்காதவர்களும் கலங்கி விடுவார்கள்.

தமிழ் சினிமாவில் பெண் போலீஸ் கதாபாத்திரங்களில் ஒரு சில நடிகைகளே பொருத்தமாக நடித்திருப்பார்கள். அவர்களது வரிசையில் ரீமா கல்லிங்கல் இடம் பிடித்துவிட்டார். காக்கிச்சட்டை அணியாமலேயே விசாரிக்கிறார். இருந்தாலும் மிடுக்கு சிறிதும் குறையவில்லை. இளம் பெண்களின் பாதுகாப்புக்கு ஒவ்வொரு போலீஸ் ஸ்டேஷனிலும் இவர் போன்ற அதிகாரிகள் தேவை என்று படம் பார்க்கும் போது உணர வைக்கிறார்.

மேலே சொன்ன மூன்று கதாபாத்திரங்களை வைத்தே முழு படத்தையும் நகர்த்தியிருக்கிறார். மற்ற கதாபாத்திரங்களுக்கு பெரிய வேலையில்லை.

கிராமத்துக் கதை என்றால் அதற்கேற்றபடியான பின்னணி இசைதான் பொருத்தமாக இருக்கும். ஆனால், சாம் சிஎஸ் வித்தியாசமாக இசைக்கலாம் என நினைத்து வெஸ்டர்ன் இசையை அதிகம் பயன்படுத்தியிருக்கிறார். அதனால் கதை கடத்தும் உணர்வுக்கும் பின்னணி இசைக்கும் பொருத்தமில்லாமல் போகிறது. மனோஜ் பரமஹம்சா, கேஜி வெங்கடேஷ் யதார்த்த கதையுடனேயே பயணித்துள்ளார்கள்.

மேக்கிங்கில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம். சில கொலைகள் நடந்து அதன் விசாரணை நடக்கும் போது யாரோ ஒருவர் கோட் அணிந்து, முகத்தையும் மறைத்து பக்கத்தில் நின்று பார்ப்பதெல்லாம் சினிமாவில்தான் வரும். அரதப் பழசான பார்முலாவாக உள்ளது இது. சமுத்திரக்கனி ஒரு மூட்டையை எடுத்துக் கொண்டு போகும் போது அதை நேரில் பார்க்கும் ரீமாவுக்கு எந்த சந்தேகமும் முதலிலேயே வராமல் கடந்து போவதெல்லாம் ஓவர். இப்படி சில, பல கேள்விகள் லாஜிக் மீறலாக உள்ளது.

சித்திரைச் செவ்வானம் - குற்றமும், தண்டனையும்…

 

சித்திரைச் செவ்வானம் தொடர்புடைய செய்திகள் ↓

பட குழுவினர்

சித்திரைச் செவ்வானம்

  • நடிகர்
  • நடிகை
  • இயக்குனர்

மேலும் விமர்சனம் ↓